கழனியூரன்
மண்மணக்கும் கிராமத்துக் கதைகளை எழுதிவந்த கழனியூரன் (63) சென்னையில் காலமானார். இயற்பெயர் எம்.எஸ். அப்துல்காதர். சொந்த ஊர் திருநெல்வேலி அருகே கழுநீர்குளம். பள்ளி ஆசிரியராகிப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் சிறுகதை, நாட்டுப்புறக் கதைப்பாடல் ஆய்வுகள், கிராமத்துச் சிறு தெய்வங்களின் வரலாறு, இதழியல் எனப் பல திறக்குகளில் இயங்கியவர். 'கதைசொல்லி' என்ற சிற்றிதழின் ஆசிரியராகவும் இருந்தார். கி. ராஜநாராயணனைத் தனது வழிகாட்டியாகக் கொண்டு இயங்கிவந்தார். கி.ரா.வுடன் இணைந்து இவர் எழுதிய 'மறைவாய்ச் சொன்ன கதைகள்' முக்கியமானது. 'செவக்காட்டு மக்கள் கதைகள்', 'நெல்லை நாடோடிக் கதைகள்', 'நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள்', 'தாத்தா பாட்டி சொன்ன கதைகள்', 'நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்', 'குறுஞ்சாமிகளின் கதைகள்', 'நாட்டுப்புற வழக்காறுகள், நாட்டுப்புற நம்பிக்கைகள்' போன்ற தொகுப்புகள் குறிப்பிடத் தகுந்தவை. கி. ராஜநாராயணனின் அகவை 95ஐக் கொண்டாடும் வகையில் கி.ரா-95 விழாவில் கவனம் செலுத்திவந்த இவர், சென்னையில் தன் மகன் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுக் காலமானார்.

செவக்காட்டு கதைசொல்லிக்கு (பார்க்க: ஆகஸ்ட், 2014) தென்றலின் அஞ்சலி.

© TamilOnline.com