காவிரி இறுதி தீர்ப்பு: தமிழகம் மேல்முறையீடு
காவிரிப் பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதற்காக இரண்டாவது முறையாக அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றைத் தமிழக அரசு ஏப்ரல் 15 அன்று கூட்டியது. சென்னை தலைமைச் செலயகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்திற்குத் தமிழகத்தின் அனைத்து முக்கியக் கட்சி களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, பன்மாநில நதிநீர் தாவா சட்டப்பிரிவு 5(3)ன் கீழ் விளக்கம் மற்றும் வழிகாட்டு நெறிகள் குறித்து நடுவர் மன்றத்திடம் மறுஆய்வு கோரி முறையிட வேண்டிய அம்சங்கள் பற்றி வரைவு ஒன்றைத் தமிழக அரசு தயார் செய்து வைத்திருந்தது. இந்த வரைவின் மீது கட்சிகளின் கருத்துக்களை அறியவே இந்த அனைத்துக் கட்சி கூட்டம்.

அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், 'காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் செல்லாமல் நடுவர் மன்றத்துக்குச் செல்வதையே தி.மு.க அரசு விரும்புகிறது' என்று குற்றம் சாட்டினார். அவர் வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழக அரசின் மனு மீது நடுவர் மன்றம் விசாரணை நடத்தக்கூடாது என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் அச்சம் தெரிவித்தார்.

'காவிரி நடுவர் மன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காது' என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

மேற்கூறிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடுவர்மன்றத்திடம் மேல்முறையீடு செய்வது எனவும் தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது எனவும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு உச்சநீதிமன்றம் செல்வதே என்று கருதுகிறது.

இந்நிலையில் காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை ரத்துச் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைக் கர்நாடக அரசு தாக்கல் செய்ய இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், நடுவர் மன்றத்தில் விளக்க மனு ஒன்றையும் தாக்கல் செய்ய இருப்பதாகத் தெரிகிறது. இந்த இருமனுக்களையும் தாக்கல் செய்வதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியிருந்தாலும், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடக, கேரளா, ஆந்திரா போன்றவைகள் நதிநீர் பிரச்னை களில் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்குச் சவாலாகவே உள்ளது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com