'சித்தாந்தச் செம்மல்' க.வெள்ளைவாரணனார்
"புலமையால் தலைமை பெற்றவர்; பணி செய்த பல்கலைக்கழகங்களால் பெருமை பெற்றவர்; தம் அரிய ஆய்வு நூல்களால் புகழ் பெற்றவர்; பேராசிரியப் பெருமக்களின் நட்பால் பேறு பெற்றவர்; திருமுறைப் பெருமை உரைத்த இவரது பெருமை விரிப்பின் பெருகும்; தொகுப்பின் எஞ்சும். வாரணனார் நூல்கள் தமிழ் நெறி விளக்கங்களாக அமைவன. தமிழுக்கு அவை அணிகலன்கள் மட்டுமல்ல; படைக்கலங்களும் கூட" என்று பதிப்புச் செம்மல், பேரா. ச. மெய்யப்பனால் பாராட்டப்பெற்றவர் சித்தாந்தச் செம்மல் க. வெள்ளைவாரணனார். இவர் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில், கந்தசாமி முதலியார் - அமிர்தம் அம்மாள் தம்பதியினருக்கு ஜனவரி 14, 1917 அன்று பிறந்தார். துவக்கக் கல்வியை அவ்வூரிலேயே கற்றார். தந்தை, பாட்டனார் இருவருமே தமிழ் இலக்கியத்திலும், சைவத் திருமுறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள்வழி இவரும் திருப்பெருந்துறை தேவாரப் பாடசாலையில் தேவாரத் திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ந்தார். கூடவே தமிழ் இலக்கியத்திலும் தேர்ச்சிபெற்றார்.

தொடர்ந்து மேற்கல்வி பயில்வதற்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கா. சுப்பிரமணியபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், விபுலானந்தர், ரா.பி. சேதுப்பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா. ராகவையங்கார் போன்றோரது வழிகாட்டலால் இவரது அறிவுத்திறன் சுடர்விட்டது. 1935ல் வித்வான் வகுப்பில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அடுத்து ஆய்வு மாணவராகச் சேர்ந்து 'தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பீடு' என்ற தலைப்பில் ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். அந்நூல், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஜர்னலில் தொடர்கட்டுரையாக வெளியானது. பின்னர் கரந்தை தமிழ்ச்சங்கக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. அக்காலகட்டத்தில் பொற்றடங்கண்ணி என்பாருடன் திருமணம் நிகழ்ந்தது.

1938முதல் 1943வரை கரந்தைக் கல்லூரியில் பணியாற்றினார். 1938ல் உயர்நிலைப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப் பாடமாக்க்கப்பட்டது. தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், தமிழவேள் உமாகமேஸ்வரம் பிள்ளை, கி.ஆ.பெ. விஸ்வநாதம் உள்ளிட்ட பலர் எதிர்த்தனர். வெள்ளைவாரணனாரும் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், 'பாந்தளூர் வெண்கோழியார்' என்ற புனைபெயரில் அன்றைய முதல்வரான ராஜாஜிக்குத் தூதுநூல் ஒன்றை அனுப்பினார். அதுவே 'காக்கைவிடு தூது'. தமிழே தமிழகத்தில் ஆட்சி மொழியாக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நூலை எழுதியிருந்தார். பின்னாளில், நாடு சுதந்திரம் பெற்றபின் கவர்னர் ஜெனலரான ராஜாஜி, ஹிந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்படுவதை எதிர்த்தார். அவரது மனமாற்றத்திற்கு மேற்கண்ட தமிழறிஞர்களின் முயற்சியே மிக முக்கிய காரணமாய் அமைந்தது.

கரந்தைக் கல்லூரியை அடுத்து, 1943ல், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார் வெள்ளைவாரணனார். மாணவர்களின் மனங்கவர்ந்த ஆசிரியரானார். கல்லூரி மாணவர்கள் சங்ககாலம் பற்றியும் அக்காலத்து மக்கள் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ளும் வண்ணம் 'சங்ககாலத் தமிழ் மக்கள்' என்னும் நூலை எழுதி வெளியிட்டார். திருமுறைகள் மீதும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஓய்வு நேரத்தில் இலக்கிய இதழ்களில் சங்க இலக்கிய நூல்கள், திருமுறைகள் பற்றி விரிவாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதியும், கருத்தரங்குகளில் பேசியும் வந்தார். வானொலியிலும் அவ்வப்போது உரையாற்றினார். இவரது குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி, பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் நூல்களாக வெளிவந்தன. தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம் என்ற நூல் 1957ல் வெளியானது. சுவாமி விபுலானந்த அடிகளுக்கு நெருங்கிய நண்பராக இருந்த இவர், அவரது 'யாழ் நூல்' உருவாகத் துணையாக இருந்தார். அந்நூலுக்கு இவர் எழுதியிருந்த பாயிரக் கவிதை பலராலும் பாராட்டப்பட்டது. இவரது திறமையைப் பாராட்டும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இவருக்கு இணைப்பேராசிரியர் பதவி வழங்கிச் சிறப்பித்தது. 1977ல் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

தமிழும் சம்ஸ்கிருதமும் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழிகள் என்பது இவரது கருத்து. திருமந்திரப் பாடல்களைத் திரட்டி அவற்றிற்கு உரை விளக்கத்துடன் 'திருமந்திரத் திரட்டு' என்ற நூலை எழுதியிருக்கிறார். சிதம்பரம் தருமையாதீன மடத்தில் இவர் நிகழ்த்திய தேவார, திருவாசக, திருமந்திர வகுப்புகள் அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றவை. அவற்றில் சில தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்திருக்கின்றன. இவர் எழுதிய 'சைவசித்தாந்த சாத்திர வரலாறு' முக்கியமான ஆய்வுநூல். இவரது 'திருவருட்பாச் சிந்தனை' என்னும் நூலும் முக்கியமானது. சைவத் திருமுறைகளுக்கும் திருவருட்பாவிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பையும், அவற்றிற்கிடையே பொருள் மாறுபாடு சிறிதும் இல்லை என்பதையும் எடுத்துக்காட்டி அந்நூலில் விளக்கியிருக்கிறார். அதற்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.

'சிவன்' என்னும் திருப்பெயர் செம்மையென்னுந் தமிழ்ச்சொல்லின் அடியாகப் பிறந்த சொல் என்பதை ஆதாரங்களுடன் சுட்டியிருக்கிறார். 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்ற வரிகளுக்குப் பொருள் சொல்லும்போது, "எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருந்த முதல்வனை, தென்னாட்டவராகிய தமிழ்மக்கள் 'சிவன்' என்ற திருப்பெயராற் போற்றி வழிபட்டனர்" என்று விளக்குகிறார். அதனாலேயே 'சிவன்' தென்னாடுடையவனாகிறான் என்பது இவரது கருத்து.

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சேக்கிழார் நூல்நயம், பன்னிரு திருமுறை வரலாறு, தில்லைப் பெருங்கோயில் வரலாறு, தேவார அருள்முறைத் திரட்டுரை, திருமந்திர அருள்முறைத் திரட்டுரை, திருவருட்பயன் விளக்கவுரை போன்ற இவரது நூல்களும் முக்கியமானவை. இவர் எழுதியிருக்கும் 'பன்னிரு திருமுறை வரலாறு' ஆய்வுநூல் மிகவும் சிறப்பானதாகும். "இப்பொழுது வழக்கில் இருக்கும் மொழிகளில் எல்லாம் தமிழே மிகவும் தொன்மையானது; இலக்கிய உயர்வும் உடையது. தமிழ் இலக்கியத்தின் அருமை பெருமையை நேரில் தெரிந்து அனுபவிக்க விரும்புவோர் அனைவருக்கும் திருமுறைப் பயிற்சி இன்றியமையாதது" என்கிறார் இவர். இந்த நூலுக்கும் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. காரைக்காலம்மையாரின் 'அற்புதத் திருவந்தாதி'க்கு இவர் எழுதிய உரை சிறப்பானது. 'இசைத்தமிழ்' என்ற ஆராய்ச்சி நூலும் முக்கியமானது. பல்கலையில் இசை பயிலும் மாணவர்கள் அதுகுறித்து முறையாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவர் அந்நூலை எழுதியிருக்கிறார்.

நூலாசிரியர், உரையாசிரியர், பேராசிரியர் என ஆசான்களுக்கெல்லாம் ஆசானாகத் திகழ்ந்த வெள்ளைவாரணனார், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பல்கலைக்கழகம் கம்பராமாயணத்திற்கு செம்பதிப்பைக் கொணர்ந்தபோது அதில் சில படலங்களுக்கு உரை எழுதியுள்ளார். 1979ல் பணிஓய்வு பெற்ற இவர், பின்னர் சிலகாலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிப் புலத்தலைவராகவும் சிலகாலம் பணியாற்றியிருக்கிறார். அக்காலகட்டங்களில் தொல்காப்பியம்-நன்னூல் எழுத்ததிகாரம், தொல்காப்பியம்-நன்னூல் சொல்லதிகாரம், தொல்-பொருள் உரைவளம் (ஏழு தொகுதிகள்) என பல நூல் தொகுதிகளை எழுதி வெளியிட்டார்.

இவரது சமயச் சேவையைப் பாராட்டி 'சித்தாந்தச் செம்மல்' என்ற பட்டத்தை தூத்துக்குடி சைவசித்தாந்த சபை வழங்கியது. 'திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர்' என்ற பட்டத்தை தருமபுர ஆதீனகர்த்தர் வழங்கினார். காஞ்சி சங்கர மடம் 'திருமுறை உரைமணி' என்ற விருதை வழங்கியது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்ற பட்டத்தை வழங்கியது. குன்றக்குடி ஆதினம் இவருக்கு 'தமிழ்ப் பெரும்புலவர்' என்ற பட்டம் வழங்கியது. இவை தவிர்த்து, 'தமிழ்மாமணி', 'சிவக்கவிமணி', 'சிவநெறிச் செம்மல்', 'செந்தமிழ்ச் சான்றோர்', தமிழக அரசின் 'கலைமாமணி' உள்ளிட்ட பல பட்டங்களை இவர் பெற்றிருக்கிறார். 'நடமாடும் அகத்தியர்' என்னும் சிறப்புப் பெயரும் இவருக்குண்டு.

இலக்கியம், இலக்கணம், உரைநடை, பதிப்பு, திருமுறை எனப் பல களங்களில் ஆழங்காற்பட்ட அறிவுமிக்க வெள்ளைவாரணனார், உடல் நலிவுற்று ஜூன் 13, 1988 அன்று காலமானார். இவர் தம் வாழ்நாளில் பயன்படுத்திய அனைத்து நூல்களும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவரது மறைவுக்குப் பின் தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. அவரது நூற்றாண்டான இவ்வாண்டில் (2017) ஒப்பற்ற இத்தமிழ்ச் செம்மலை நினைவுகூருவது ஒவ்வொரு தமிழனின் கடமை.

பா.சு. ரமணன்

© TamilOnline.com