இப்பொழுது என்ன அவசரம்!
ஒரு சிற்றூரில் நடுத்தரக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். கணவனுக்கு தெய்வத்தை வணங்குகிற வழக்கம் இல்லாமல் இருந்தது.

"தினமும் கொஞ்ச நேரமாவது சாமி கும்புடுங்க. கடவுளைப் பிரார்த்தனை பண்ணுங்க" என்று மனைவி தினந்தோறும் அவரிடம் கெஞ்சுவாள்.

"சும்மா தொந்தரவு பண்ணாதே. நான் எவ்வளவு பிசியா இருக்கேன்னு பாக்கிற இல்லே. இப்படியெல்லாம் வீணடிக்க எனக்கு நேரம் கிடையாது" என்பான் கணவன்.

"அப்படிச் சொல்லாதீங்க. தெய்வம் தொழுவது ரொம்ப அவசியம்" என்பார் மனைவி விடாமல்.

"இப்பதான் நாம சம்பாதிக்க முடியும், சந்தோஷமா செலவழிக்க முடியும். வயசாயிட்டா முடியுமா? அப்போ சும்மாவேதானே இருப்போம். அப்போ பாத்துக்கலாம் சாமி கும்புடறதை" என்பான் கணவன். பக்தியான அந்தப் பெண்மணி இந்தப் பதிலால் கொஞ்சமும் திருப்தி அடையவில்லை. நல்லநேரம் வரும், தான் சொல்வதன் முக்கியத்துவம் கணவனுக்குப் புரியும் என்று அவள் காத்திருந்தாள்.

ஒரு சமயம் கணவனுக்குக் கடுமையான நோய்கண்டு, படுத்த படுக்கை ஆகிவிட்டான். மருத்துவர் சில மாத்திரைகளைக் கொடுத்து "இதை இரண்டு மாத்திரை வீதம் தினமும் மூன்று வேளை சாப்பிடு" என்று கூறிச் சென்றார். கணவனுக்கு மருந்து கொடுக்கும் வேலை மனைவியுடையது தானே; அவள் மருந்தை வாங்கி வைத்துக்கொண்டாள், ஒன்றைக்கூட அவனுக்குத் தரவில்லை.

மனைவி மருந்து கொடுக்கவில்லை என்பதைப் பார்த்துக் கணவனுக்கு மிகுந்த கோபம் வந்தது. "என்ன பண்ணிக்கிட்டிருக்கிறே? மருந்து கொடு" என்று கேட்டான். ஆனால் அவளோ கொடுக்கவே இல்லை.

"மருந்து கொடுக்காம என்னைக் கொல்லப் பார்க்கிறியா?" என்று கோபத்தில் கத்தினான் கணவன்.

"இருங்க, இருங்க. மருந்துக்கு என்ன அவசரம்? நோய் நல்லா முற்றட்டும். மெதுவா மருந்து சாப்பிடலாம்" என்றாள் மனைவி.

"மெதுவா சாப்பிடறதா! இங்கே மனுஷன் அவஸ்தைப் பட்டுக்கிட்டிருக்கான். மெதுவா சாப்பிடச் சொல்றே" என்றான் கணவன்.

"ஆமாம். பக்தி, நாமஸ்மரணை எல்லாம் பண்ணுங்கன்னு சொன்னப்ப நீங்கதானே 'இப்ப என்ன அவசரம்'னு கேட்டீங்க. மருந்துக்கு மட்டும் அவசரமா? எல்லாமே பிற்காலத்துல சாப்பிட்டுக்கலாம்" என்றாள் மனைவி.

அதைக் கேட்டதும் தனது தவறு கணவனுக்குப் புரிந்தது. மற்ற எல்லாவற்றுக்கும் அவசரப்படும் தான், கடவுள் வழிபாட்டை மட்டும் முதுமைக்காலத்துக்கு என்று தள்ளிப்போடுவது சரியல்ல என்பதைப் புரிந்துகொண்டான். தன் வழியை மாற்றிக்கொண்டான். அதனால் அவன் இரண்டு வகைப் பிணிகளிலிருந்தும் விடுபட்டான்.

நன்றி: சனாதன சாரதி

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com