ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழா
ஏப்ரல் 15, 2017 அன்று சித்திரைத் திருநாளை ஒட்டி ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. மாலை 5:30 மணியளவில் சுகர்லேண்ட் தமிழ்ப்பள்ளிக் கிளை அரங்கில் விழா, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அமைப்பின் நிறுவனர் திரு. கரு. மலர்ச்செல்வன் திருக்குறள் கூறவும், அமைப்பின் முன்னோடிகளான பெண்கள் குத்துவிளக்கேற்றவும், நிகழ்ச்சிகள் தொடங்கின. விழாவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் தமிழ்ப்பள்ளித் தலைவர் திரு. கரு. மாணிக்கவாசகம் வரவேற்றார். அடுத்ததாக, பள்ளியின் முன்னாள் செயலாளர் திரு. ஜெகன் அண்ணாமலை தமிழ்ச்சங்கம் குறித்த விளக்கப்பட உரை நிகழ்த்தினார். முன்னதாக, நன்றியுரையினை பள்ளிப் பொருளாளர் திரு. தாமோதரன் நாராயணன் வழங்கினார்.

தொடர்ந்து பட்டிமன்றம் குறித்த நகைச்சுவை விருந்தைத் திரு.சதீஷ் பரமேஷ்வரன் மற்றும் திரு.மூர்த்தி அசோகன் வழங்கினர். அதனையடுத்து சங்கம் தொடக்கம் குறித்த சிற்றுரையை ஆலோசனைக்குழுத் தலைவர் திரு. கோபால் கிருஷ்ணன் வழங்கினார். முத்தாய்ப்பாக, "தாயகம் தாண்டி அமெரிக்காவில் வசிப்பதில் நாம் அதிகம் பெறுவது அல்லலா? ஆனந்தமா?" எனும் தலைப்பிலான பட்டிமன்றம் நடைபெற்றது. திரு. இராமன் சொக்கலிங்கம் நடுவராகப் பொறுப்பேற்க, திரு.வாஞ்சிநாதன் கோவிந்த், திருமதி. இராதா பரசுராம், பள்ளிச் செயலாளர் திருமதி. சங்கீதா நீலகண்டன், திருமதி. பாண்டிமாதேவி கலைச்செல்வன், திருமதி. கவிதா சதீஷ், திரு.முத்து நடராசன் ஆகியோர் பங்கேற்றுத் திறம்பட வாதங்களை வைத்தனர்.

டெக்சஸ் மாநிலப் பெருநகரான ஹூஸ்டனில் கிட்டத்தட்ட ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. இந்த மாநகரில் ஆறு தமிழ்ப் பள்ளிகள் நடக்கின்றன. இவற்றில் 450க்கு மேலான குழந்தைகள் தமிழ் கற்கின்றனர். விழா ஏற்பாடுகளை ஆலோசனைக்குழுத் தலைவர் திரு. கோபால் கிருஷ்ணன், பள்ளித் துணைத்தலைவர் திரு. வெங்கட் பொன்னுசாமி, துணைச்செயலாளர் திரு. பாலாஜி லெட்சுமணன், பொருளாளர் திரு. தாமு நாராயணன் ஒருங்கிணைப்பில் சுகர்லேண்ட் தமிழ்ப்பள்ளிக் கிளைப் பொறுப்பாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

கரு. மாணிக்கவாசகம்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com