நகரமே அழுத கதை!
ஆன்மீக சாதனையானாலும் சரி, உலக வாழ்க்கையானாலும் சரி, இது எனக்கு நல்லதா என்பதைத் தீர யோசித்து, திருப்தி அடைந்த பிறகே அடியெடுத்து வைக்கவேண்டும். இல்லையென்றால், ஒரு நகரமே அழுத கதைபோல ஆகிவிடும். அது என்ன நகரம் அழுத கதை என்கிறீர்களா?

ஒரு சமயம் ராணிக்கு மிக நெருக்கமான பணிப்பெண் ஒருத்தி மாளிகைக்கு மிகுந்த துக்கத்துடன் அழுதுகொண்டே வந்தாள். அதைப் பார்த்து ராணி அழத் தொடங்கினாள். ராணியின் அழுகையைக் கண்டதும் அந்தப்புரப் பெண்கள் அனைவரும் அழுதனர். இதைப் பார்த்து அரண்மனையிலுள்ள எல்லாச் சேவகர்களும் கண்ணீர் சிந்தினர். ராணியின் பெருந்துயரத்தைப் பார்த்ததும் ராஜாவுக்குத் துக்கம் தாளவில்லை, அழத் தொடங்கிவிட்டார். அரண்மனையில் ஏற்பட்ட அழுகை அந்த நகரம் முழுவதும் பரவிவிட்டது.

ஒரு புத்திசாலி இளைஞன் இதைப் பார்த்தான். இத்தனை அழுகைக்கும் காரணம் என்ன என்று ஒவ்வொருவராக விசாரிக்கத் தொடங்கினான். அது அவனை ராணி வரைக்கும் கொண்டுவந்து விட்டது. "என் அன்புக்குரிய பணிப்பெண்ணின் சோகத்தைப் பார்க்க எனக்குத் தாளவில்லை, அதனால்தான் நான் அழுகிறேன்" என்றாள் ராணி.

பணிப்பெண்ணிடம் அந்த இளைஞன் விசாரித்தபோது, அவள் சலவைத் தொழிலாளி என்று தெரியவந்தது. அவளது துக்கத்துக்கான காரணம், அவளுக்கு மிகப் பிரியமான கழுதை ஒன்று எதிர்பாராமல் இறந்து போனதுதான் என்று கூறினாள். இந்தச் செய்தியை அவன் ஊரவருக்கு எடுத்துக் கூறவே காரணமில்லாமல் அழுதுகொண்டிருந்த நகரம் தன் அழுகையை நிறுத்தியது. எல்லோரும் தமது செயலுக்கு வெட்கப்பட்டுச் சிரிக்கத் தொடங்கினர்.

காரணம் அறி, யோசித்துப் பார், அவசரமான முடிவுக்கு வராதே. யாரோ கூறினார் என்பதற்காக எதையும் ஏற்றுக்கொண்டு விடாதே.

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

நன்றி: சனாதன சாரதி

© TamilOnline.com