கத்தி
"அவள் கண்களில் கண்ட அமைதியை மறவேன்; அவள் கன்னங்களில் கண்ட ஆப்பிளை மறவேன்! அவளப் பாத்தியாடா ரிஸ்வான்? பாத்துகிட்டே இருக்கணும்போல இருக்கில்ல?" சக்தி கூறினான்.

"மொதல் வரிய 'கண்களில் கண்ட ஐஃபோனை மறவேன்'னு மாத்தினியின்னா இன்னும் சரியா இருக்குமே (மெதுவாகச் சிரித்து) நாய்க்கவிஞா வழக்கம்போல கவிதைய ஆரம்பிச்சிட்டியாடா. ஒழுங்கா வேலையப் பாரு. இனிமேதான் கூட்டம் ஜாஸ்தியாகும்."

"டேய் அழக ரசிக்கறதுல எந்தத் தப்புமில்லடா."

"ஹலோ சார், தண்ணி ஊத்தறதுக்கு மட்டும் ரெண்டு ஆள் போட்ருக்காங்கன்னா, இந்தப் பார்ட்டிக்கு வர்றவங்க எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சி பாரு."

"ரசனைக்கு இடம் பொருள் ஏவல் கிடையாதுடா. யாருக்கும் தொந்தரவு பண்ணாம பாத்து ரசிக்கறதுல என்னடா தப்பு?"

"சில ரூல்ஸ் இருக்குது கண்ணா! நம்மள மாதிரி ஆளுங்க பணக்காரப் பொண்ணுங்கள, சூரியன பாக்கறா மாதிரி பாக்கணும். ஒரு செகண்ட். பாத்துட்டு டக்குன்னு திரும்பிடணும். நீ என்னாடான்னா நிலாவப் பாத்தா மாதிரி உத்து உத்துப் பாக்கற."

"ஒரு களங்கமில்லாத அழகு. ரசிக்கறதுல எந்த தப்புமில்ல. இதுல ஏழ பணக்காரன் எங்க வந்துது."

"சக்தி, தண்ணி ஊத்துற நம்ம தலைலியே ஹேர்-நெட்டும், கைல க்ளோவ்ஸும் போட்டு வேல செய்யச் சொல்றாங்க. அப்பேர்பட்ட ஆளுங்க, அவங்க பொண்ணுங்கள எப்பிடி பாத்துப்பாங்கன்னு நெனச்சி பாரு. பணக்காரங்க கிட்ட போயி நீ இந்த சோசலிசம் எல்லாம் பேசமுடியாது."

"அவகிட்ட போய் முத்தமா குடுத்தேன்? தூரத்துல இருந்து பாத்து ரசிச்சேன். இதுல என்னா இருக்கு."

"டேய் பணக்காரங்க அவங்க பொருள எப்பிடி பாத்துப்பாங்க தெரியுமா. வெளிய வேலே (valet) டிரைவர்ஸ் மூணு பேரு இருக்காங்க. அவங்ககிட்ட குடுக்கத் தனியா ஒரு கார் சாவி வெச்சிருப்பாங்க. காஸ்ட்லி கார் வாங்கும்போது இந்தச் சாவிய ஸ்பெஷலா குடுப்பாங்க. அத வெச்சி டிக்கிய தொறக்க முடியாது, காருக்குள்ள டாக்குமெண்ட் பாக்ஸயும் தொறக்க முடியாது. அந்தமாதிரி ஆளுங்ககிட்ட போய் 'நா அழகதானே ரசிச்சேன்'ன்னு சொன்னா சும்மா விடுவாங்களா!"

"டிக்கியத் தொறக்க முடியலேன்னா போதுமா? காரையே ஆட்டயப்போட்டு பார்ட் பார்ட்டா வித்துட்டா என்ன பண்ணுவானுங்களாம்?" (இருவரும் வாயைமூடிச் சிரிக்கின்றனர்).

சக்தி கூறினான். "இவங்களப் பேசறோம். நமக்கு கீழ இருக்கறவங்கள நாம ஒழுங்கா ட்ரீட் பண்றோமா? ரோட்ல கிழிஞ்ச துணியோட யாராவது கிட்ட வந்தாலே வெரட்டறோம். அவ்ளோ நம்பிக்கை அவன்மேல நமக்கு."

"நீ இந்த மாதிரி வசனம் பேசு, கவிதை எழுது. ஆனா வேல செய்யற எடத்துல அடிபட்டு அசிங்கபடாத. நீ அப்பாவின்னு எனக்குத் தெரியும், தர்ம அடி போடறவங்களுக்கு தெரியாதே."

"சரி இவ்ளோ பேசறியே. (கையைக் காட்டி) நீயே பாரு அங்க. அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா இருக்குதுன்னு. எப்பிடி ரசிக்காம இருக்கறது, சொல்லு."

"கையக் காட்டாதடா. அழகா இல்லன்னு நா சொல்லவே இல்லையே. உனக்கு இதெல்லாம் வேணான்னுதானே சொல்றேன்.. டேய் சக்தி, அந்தப் பொண்ணு நம்மளையே பாக்குதுடா. போச்சு... இப்ப அவங்கப்பனும் நம்மளப் பாக்கறான். அய்யயோ... உன்கூட சேந்து நானும் வாங்கப்போறேன்... அங்க பாக்காதடா"

"இல்ல. ஒண்ணும் ஆகாது. அந்தப் பொண்ணு இங்கதான் வருது."

"டாடிக்கு வாட்டர் வேணுமாம்!"

"ஓகே, இதோ..." அவர்களது மேசையை நோக்கி வேகமாக நடக்கிறான் சக்தி. தண்ணீர் ஊற்றிவிட்டுத் திரும்பி வருகிறான்.

"என்னாடா, பொண்ணு, அப்பா, அம்மா எல்லாருக்கும் ஆச தீர தண்ணி ஊத்தினியா? உதைக்கத்தான் கூப்புட்றாங்கன்னு நெனச்சேன்."

மறுபடி அந்தப் பெண் சக்தியிடம் வந்து, "அப்பா வாட்டர்ல லெமன் கேக்கறாரு, இருக்கா?"

"இருக்கு... இருக்குங்க! உள்ள கிச்சன்ல... கட் பண்ணி கொண்டாறேன்" சொல்லிவிட்டு நகர்கிறான். அந்தப் பெண்ணும் அவனுடன் நடந்தாள். சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே சக்தி, "உங்க பேரு என்னங்க?" என்று கேட்டான்.

"வாங்க போங்கன்னு ஏன் கூப்டறீங்க? நிலா என் பேரு. உங்க பேரு?" சந்தோஷச் சிரிப்புடன் "என் பேரு சக்தி."

"டாடி சொன்னாரு, நீங்க எங்க டேபிளையே பாத்துகிட்டு இருக்கீங்கன்னு. ஏன் பாத்தீங்க?"

"அப்பிடியெல்லாம் இல்ல. தண்ணி எல்லார் கிளாஸ்லயும் இருக்கான்னு பாத்துகிட்டே இருக்கணும். அதான்..." கிச்சனில் நுழைந்து அங்கு மேஜையில் இருந்த எலுமிச்சையை ஒரு கத்தியால் வெட்டினான் சக்தி.

"இல்ல இல்ல. நீங்க என்னையேதான் பாத்துகிட்டு இருந்தீங்க, நானும் பாத்தேன்." கத்தி அவன் விரலை லேசாக வெட்ட, ரத்தம் கசிந்தது.

"அச்சச்சோ, கையையும் சேத்து வெட்டிட்டீங்களா. ஃபிங்கர வாயில வெய்யிங்க சீக்கிரம்." சக்தி விரலைக் குச்சி ஐஸ் போல உறிஞ்சினான்.

"நானும் வீட்டுல இந்தமாதிரி ஒருவாட்டி கட் பண்ணிக்கிட்டேன். ஆனா எனக்கு வலிக்கல. எங்க மம்மி என்ன பண்ணாங்க தெரியுமா?"

சக்தி விரலை உறிஞ்சிக்கொண்டே 'என்ன பண்ணாங்க' என்பதாக 'உம்ம்ம் உம்ம்ம்' என்று கேட்டான்.

"கைய காட்டுங்க!" சக்தி ரத்தம் நின்ற ஈரமான விரலை நிலாவிடம் நீட்டினான்.

"இப்பிடிப் பண்ணாங்க" என்று கூறிச் சிரித்தபடியே சக்தியின் விரலில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, மேஜையிலிருந்த எலுமிச்சந் துண்டுகளை எடுத்துக்கொண்டு வெளியே தோட்டத்திற்கு ஓடினாள்.

ஓடிய நிலாவின் எதிரே அவளின் டாடி. "எங்க போன நீ இவ்ளோ நேரமா?" என்று கூறி அவளைத் தூக்கிக்கொண்டு தன் மேஜையை நோக்கி நடந்தார்.

யோகா பாலாஜி,
சிகாகோ

© TamilOnline.com