மா. அரங்கநாதன்
தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான மா. அரங்கநாதன் புதுச்சேரியில் காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டு விளங்கிய இவர், தனித்துவமான மொழிநடைக்குச் சொந்தக்காரர். சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இலக்கியக் காதலால் 'முன்றில்' இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். பல எழுத்தாளர்கள் வந்து செல்லும் வேடந்தாங்கலாக முன்றில் விளங்கியது. 'வீடுபேறு', 'ஞானக்கூத்து', 'காடன் மலை', 'சிராப்பள்ளி' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். 'பஃறுளியாற்று மாந்தர்', 'காளியூட்டு' போன்றவை இவர் எழுதிய நாவல்கள். 'பொருளின் பொருள் கவிதை' என்பது இவர் எழுதிய முக்கியமான கட்டுரை நூல். 'மா.அரங்கநாதன் சிறுகதைகள்', 'மா.அரங்கநாதன் கட்டுரைகள்' என்ற தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன.

இவரது படைப்புகள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. சித்தர் மெய்யியலில் ஆர்வம் கொண்டு அவற்றைத் தன் சிறுகதைகளில் வெளிப்படுத்தியவர் இவர். பெரும்பாலான கதைகளில் 'முத்துக்கறுப்பன்' என்ற பாத்திரத்தை உயிர்ப்போடு உலவவிட்டவர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான திரு. ஆர்.மகாதேவன் இவரது மகன்.

தென்றலின் அஞ்சலி!



© TamilOnline.com