வேதாரண்யம் வேதாரண்யர்
தலம்

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை சைவ சமய வழிபாட்டில் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுவதாகும். வேதாரண்யம் என வட மொழியிலும் திருமறைக்காடு எனத் தமிழிலும் வழங்கப் பெறும் இந்த ஊர், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சை, நாகப்பட்டினம். திருத்துறைப் பூண்டியிலிருந்து பேருந்து வசதி உண்டு.

வேதங்கள் நான்கும் (ரிக், யஜுர், சாம, அதர்வணம்) மனித உருவெடுத்து இவ்வூருக்கு அருகில் உள்ள நாலு வேதபதி என்னும் ஊரில் தங்கி, புஷ்பவனம் என்கிற இடத்தில் இருந்து மலர் எடுத்து வந்து இறைவனை வழிபாடு செய்துவிட்டு, பின் தலத்தின் பிரதான வாயிலை அடைத்துச் சென்று விட்டன. இன்றும் மரம், செடி, வனமாக இருந்து வேதங்கள் இறைவனை வழிபடு வதாகச் சொல்லப்படுகின்றது. வாயிலை அடைத்த பின்னர் மக்கள் திட்டிவாயில் வழியாக வந்து இறைவனை வழிபட ஆரம்பித்தனர்.

இத்தலத்துக்கு வந்த திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் தேவாரப் பதிகம் பாடி, கதவு திறக்கவும், பின் தாள் செய்யப்படுதலும் நிகழ்ந்ததால் வடமொழியும், தென் தமிழும் வழிபாட்டு ஆற்றலில் சம மானவை என நிரூபணம் ஆன இடமாக வேதாரண்யம் கருதப்படுகின்றது.

மூர்த்தி

இறைவன் திருநாமம் திருக்காட்டுறையும் மணாளர். பரம்பொருளின் திருமணக் கோலத்தை தேவரும் முனிவரும் காண்பதற்கு வடதிசையில் ஒன்று கூடியதால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. ஏற்றத் தாழ்வைச் சமன் செய்ய இறைவன் அகத்தியரை தென் திசைக்கு அனுப்ப, அகத்தியர் 'தங்கள் திருமணக் கோலத்தைக் காணும் பாக்கியம் எனக்கு இல்லையா?' என இறைவனிடம் கேட்க, இறைவன் வேதங்கள் வழிபட்ட வேதவனத்தில், மணக்கோலத்தில் தரிசனம் தந்த இடம் தான் அகத்தியம் பள்ளி. அகத்தியர் இங்கு தவம் செய்தும் இருக்கிறார். சித்திரை மாத வளர்பிறை சப்தமி திதி உச்சிகாலத்தில், இறைவன் தன் திருமணக் கோலத்தை அகத்தியருக்குக் காட்டியருளிய தாக வரலாறு.

இறைவியின் நாமம் வேதநாயகி. தமிழில் யாழைப் பழித்த மொழியாள். வடமொழியில் வீணாவாத விதூஷணி என வழங்கப் படுகிறது. அம்பிகையின் குரல், சரஸ்வதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால், சரஸ்வதி இங்கு கையில் வீணை இல்லாமல் தவக் கோலத்தில் கையில் சுவடியை வைத்துக் கொண்டு இருக்கிறாள். துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். மேற்கு கோபுர வாயிலில் உள்ள விநாயகர் இராமபிரானைத் துரத்தி வந்த வீரகத்தியை தமது ஒரு காலைத் தூக்கி விரட்டியதாக வரலாறு.

தீர்த்தம்

தீ£ர்த்தச் சிறப்பு உடையது வேதாரண்யம். கோவிலின் உள்ளே மணிகர்ணிகை தீர்த்தம் உள்ளது. கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் இங்கு நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல். வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்றும் பெயர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது நம்பிக்கை.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவரும் இத்தல இறைவனைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர் பாடிய 'வேயுறு தோளி பங்கன்'' எனும் கோளறு பதிகமும் இங்கு தான் பாடப்பட்டது.

பண்ணின் நேர்மொழியாள் உமைபங்கரோ
மண்ணினார் வலஞ்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாக திறந்தருள் செய்ம்மினே.


இது திருநாவுக்கரசு சுவாமிகள் இவ் வாலயத்தின் திருக்கதவினை திறக்கப்பாடிய பாடல். அவசியம் அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஆலயம் தான் வேதாரண்யம் வேதாரண்யர் ஆலயம்.

சீதா துரைராஜ்

© TamilOnline.com