பிரச்சனை எத்தனை சதவிகிதம்?
அன்புள்ள சிநேகிதியே,

இந்த முறை கடிதம் இல்லை. எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவம். ஒரு நேரடி உரையாடல், ஒரு தொலைபேசி உரையாடல்.

சமீபத்தில் சென்னையில் இருந்தபோது ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அந்த வரவேற்பின் வாயிலில் இருந்தே ஒரு பெரிய லைன். நான் காரைவிட்டு இறங்க இன்னொரு கார் முண்டியடித்து நின்றது. அதிலிருந்து ஒரு வயதான அம்மாள் மெள்ள இறங்கினார். அடுத்தடுத்து வந்த கார்களின் நெருக்கடியால் அந்த டிரைவரால் அங்கே இருக்க முடியவில்லை. அந்த அம்மாள் இறங்கி, தன்னைச் சுதாரித்துக் கொண்டு நடக்கத் திணறுவது போல் இருந்தது. நான் உடனே அவரை கையைப் பிடித்துப் படிக்கட்டுக்களில் ஏற்றி மண்டபத்தில் உட்கார வைத்தேன். மிகவும் நன்றி சொன்னார். மிகவும் கூச்சப்படும் சுபாவம்போல் இருக்கிறது.

திருமணத்தில் அவருக்குத் தெரிந்தவர்களுக்குச் சொல்லி அனுப்பிவிட்டு, அவர்கள் வரும்வரை பக்கத்தில் இருந்து பேச்சுக் கொடுத்தேன். கண் மங்கலாகத் தெரிகிறது. மிகவும் வேண்டப்பட்டவர்கள் திருமணம், கணவருக்கு சர்ஜரி ஆகி 20 நாள் ஆகிறது. வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். மகன், மகள் கூடவர முடியவில்லை. மகன் பிசினஸ் விஷயமாக அமெரிக்கா வந்திருக்கிறான். பெண் ஏதோ பிஸி என்று மிக ஆர்வத்துடன் குடும்ப விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். மிகவும் சாந்தமான முகம். ஒரு கண்ணியம்; ஒரு களை. ஆனால், பயப்படும் சுபாவம் போலத் தெரிந்தது. என்னைப் பற்றியும் கேட்டார். என் நம்பரை வாங்கிக் கொண்டு மிகவும் சங்கோஜத்துடன் "பேசினால் ஏதாவது எனக்குச் சிரமம் உண்டா" என்று தெளிவுபடுத்திக் கொண்டார். கணவர் நிலைமையைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். மகள், மகன், பேரன், பேத்திகள் என்று எல்லோரைப் பற்றியும் கவலை. அவர் மனிதர்கள் வந்தவுடன் நான் விடைபெற்றுக் கொண்டேன்.

போன வாரம் எனக்குத் தெரியாத நம்பர் caller IDயில் இரண்டு முறை பதிவாகியிருந்தது. எனக்கு யாரென்று புரிபடவில்லை. நான் திருப்பிக் கூப்பிட்டபோதுதான் இவர் இந்தியாவிலிருந்து கூப்பிட்டிருக்கிறார், அமெரிக்க நேர வித்தியாசத்தை உணரவில்லை என்பது புரிந்தது. நான் பேசியதில் மிகவும் மகிழ்ச்சி, நன்றி. ஆனால் மிகவும் கவலை. கண் தெரியாமல் படிக்கட்டில் இடறியிருக்கிறார். மற்றவர்களைத் தொந்தரவு செய்கிறோம் என்று எப்போதும் ஓர் உணர்வு. திருமண வரவேற்பில் பேசியபோது மிகவும் மனதுக்குத் தெம்பாக இருந்தது. ஆகவே, தொலைபேசி முயற்சி. அதற்கு வேறு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

தொலைபேசி உரையாடல்
அவர்: முன்னைமாதிரி சீக்கிரம் எழுந்து விளக்கேத்த, சாமி கும்பிட முடியறதில்லை. கண் ஒரே மங்கலா இருக்கு. ராத்திரி எப்படாப்பா வரும்னு இருக்கு. ஒரே அசதியா இருக்கு. பிள்ளை, பொண்ணு யாரையும் தொந்தரவுபடுத்தப் பிடிக்கலை. அவங்க அவங்க பிஸியா இருக்காங்க.

நான்: உங்க வீட்டுக்காரர் இப்ப எப்படி இருக்கார்?

அவர்: இப்போ கொஞ்சம் பரவாயில்லை. வலியெல்லாம் இல்ல. வாக் போறாரு. அவர் வேலையை கவனிச்சிக்கிறாரு.

நான்: உங்களுக்கு 100 சதவிகிதம் கவலை இருக்குன்னு வச்சிக்கோங்க. அதுல பாதி உங்க வீட்டுக்காரரைப் பத்தின்னு சொல்லலாமா?

அவர்: ஆமாங்க. போன மாசமெல்லாம் ரொம்ப பயந்துட்டேன்.

நான்: இப்போ 50 சதவிகிதம்தான் கவலை.

அவர்: இருக்கலாமுங்க.

நான்: உங்களுக்கு பணப் பிரச்சனை ஏதாவது இருக்கா? வீடு அடமானம், தொழில் நஷ்டம் ஏதாவது இருக்கா?

அவர்: ஐயோ. அதெல்லாம் ஒண்ணுமே இல்லிங்க. வசதியெல்லாம் நல்லா இருக்குங்க.

நான்: அப்போ 50க்குப் பதிலா 40 சதவிகிதம்தான் கவலைன்னு வச்சுக்கலாமா. 10 பெர்சென்ட்தான் உங்க பண வசதிக்குப் போடறேன். ஆனாலும் வயசான காலத்துல வாழ்க்கைக்குப் பணம் முக்கியம் இல்லையா?

அவர்: ஆமாங்க. கடவுள் நல்லா வச்சிக்கறாரு..

நான்: உங்க வீட்ல ஃபோன், டி.வி., கார் எல்லாம் இருக்கா?

அவர்: ஏங்க இதெல்லாம் கேட்கறீங்க. எல்லாம்தான் இருக்கு. டிரைவர் சதா வாசல்லதான் இருப்பாரு.

நான்: பக்கத்துல சொந்தக்காரங்க இருக்காங்களா? வீட்டுக்கு யாராவது வந்து போய்க்கொண்டு இருப்பாங்களா?

அவர்: சொந்தபந்தம் நிறைய இருக்காங்க. அடிக்கடி வருவாங்க. எனக்குத்தான் முன்ன மாதிரி அவுங்களுக்குக் காப்பி, பலகாரம் கொடுத்து கவனிக்க முடியறதில்லை. பையனும், பொண்ணும் எப்போ முடியுதோ அப்ப வந்துட்டுப் போவாங்க.

நான்: உங்களுக்கு ஏதாவது எமர்ஜன்சினா உடனே யாராவது கை கொடுப்பாங்க இல்லியா? அதுக்கு ஒரு 10 பெர்சென்ட் போடட்டுமா?

அவர்: ஆமாங்க. மனுஷங்க உதவி இல்லாம எப்படிங்க வாழ முடியும்?

நான்: அப்போ 40லேர்ந்து 30 பெர்சென்ட் வந்திடுச்சு.

நான்: உங்க பையன், மருமகள், பெண், மருமகன், பேரன், பேத்திகள் நல்லாயிருக்காங்களா?

அவர்: இருக்காங்க. போன வாரம் என் பேத்திக்கு நல்ல ஜுரம்.

நான்: இப்போது, இப்போது, இன்றைக்கு..

அவர்: நல்லாயிருக்காங்க. நல்லாயிருக்கணும்..

நான்: அதுக்கு ஒரு 10 சதவிகிதம் போடவா. அப்போ 20 பெர்சென்ட் ஆயிடுச்சு.

அவர்: (சிரிக்க ஆரம்பித்தார்) நீங்க ஏதோ கணக்குப் போடறீங்க. சரி, மேல கேளுங்க...

நான்: நன்றாகச் சாப்பிட்டீர்களா? தூங்கினீர்களா? தாங்கமுடியாத வலி, வேதனை ஏதாவது இருந்ததா? நடக்க முடிந்ததா, பேச முடிந்ததா?

அவர்: சாப்பிட்டேங்க. தாங்க முடியாத வலின்னு இல்ல. ஆனால் ஆர்த்ரிடீஸ், B.P. எல்லாம் இருக்கு.

நான்: இன்னிக்கு, இப்போது பெரிய வலி இல்ல, சாப்பிட்டீர்கள், தூங்கினீர்கள். ஒரு 10 பெர்சென்ட் போடட்டுமா?

அவர்: (சிரிக்கிறார்)

நான்: சரி, இப்போது உங்கள் கவலைக்கு வருவோம். கண் மங்கலாகி இருக்கிறது. படிக்கட்டில் விழ இருந்தீர்கள். கவலை பெரிதாகிவிட்டது. பயம் வந்துவிட்டது. சரியா?

அவர்: ஆமாங்க.

நான்: உங்களுக்குக் கண் மங்கலாகியிருப்பது தெரிந்தும் ஏன் தனியாப் படி இறங்க விரும்புகிறீர்கள்? உங்களுக்கே தெரியும். இதெல்லாம் வயதின் வெளிப்பாடுகள். இந்த வயதில் லாங் ஜம்ப், ஹை ஜம்ப், ரன்னிங் எல்லாம் முடியாது. மனிதபலம், பணபலம் இரண்டும் இருக்க, உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை நீங்கள் உபயோகிக்காமல் இருக்கிறீர்கள். ஐந்து மணிக்குப் பதிலாக ஏழு மணிக்கு எழுந்து பூஜை செய்தால் சாமி கோபித்துக்கொள்வாரா? இரவு 10 மணிக்கு பதில் 8 மணிக்குத் தூங்கினால் யாராவது ஏனென்று கேட்கப் போகிறார்களா? பாசத்தாலோ அல்லது பணத்திற்காகவோ உங்களுக்குத் துணையாக மனிதர்கள் இருக்க ஏன் தனியாக இந்த நடைப்பயணம்? இன்றைக்கு, இந்த வேளைக்கு உங்களுக்கு இந்த 10 பெர்சென்ட் கவலை இருக்க வேண்டுமா?

அவர்: நீங்க சொல்றது சரிதான், எனக்கு என்ன குறை, எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா இந்தக் கண்தான்....

நான்: கண் மங்கலைவிட உங்கள் கவலைதான் கண்ணைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. அந்தந்த நாளை அன்றன்று அனுபவித்து விடுங்கள். தினமும் எழுந்தவுடன் "இன்றைக்கு இன்னொரு இனிய நாள்" என்று நினைத்துக் கொள்ளுங்கள். "என் கண்கள் மங்கலாக இருக்கின்றன. நான் ஜாக்கிரதையாக இருப்பேன். மற்ற உறுப்புகள் ஒத்துழைக்கும்" என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.

அவர்: ரொம்ப சந்தோஷமுங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். இப்போ எனக்கு 10 பெர்சென்ட்தான் பிரச்சனைன்னு சொல்றீங்களா?

நான்: அதுகூட இல்லை. ரொம்ப பயம் ஜாஸ்தியானா, feel free, கூப்பிட்டுப் பேசுங்க.

வாழ்த்துகள்
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com