வளர்தமிழ் இயக்கம்: நூல் வெளியீடு
ஃபிப்ரவரி 26, 2017 அன்று அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாநிலத்தின் தென் பிரன்ஸ்விக் நகரில் வளர்தமிழ் இயக்கத்தினர் 'வாழ்க்கைத் தமிழ்' என்ற நூலை வெளியிட்டனர்.

சுப்பிரமணியன் தலைமையில் விழா நடந்தது. உமாதேவி, நர்மதா, லதா ஆகியோர் இணைந்து உருவாக்கி, பேரூர் அருண் சீனிவாசன் வடிவமைத்த இந்த நூலை, இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவகுமாரும் தலைவர் அருள் வீரப்பனும் வெளியிட்டனர். சிறப்பு விருந்தினர்களான விஞ்ஞானி ஆனந்த் முருகானந்தமும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வாசு ரங்கநாதனும் முதற்பிரதிகளைப் பெற்று வாழ்த்துரை வழங்கினர். ஞானசேகரன் (நூவர்க் தமிழ்ப் பள்ளி), சிவகுமார் (அ.த.க. தலைவர்), கல்யாண் (தலைவர், நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம்) முதலியோர் நூலின் சிறப்புப் பிரதிகளைப் பெற்றனர்.

விஞ்ஞானி ஆனந்த் முருகானந்தம் தமது வாழ்த்துரையில் வள்ளுவரும் திருமூலரும் அன்பையே முதன்மைப்படுத்திப் பாடியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். நீங்கள் பிறரிடம் அன்புபாராட்டத் தொடங்கினால் அதுவே உங்களைக் கடவுளாக மாற்றிவிடும் என்று அழகுபடக் கூறினார். முனைவர் வாசு ரங்கநாதன் தமது வாழ்த்துரையில் 'வாழ்க்கைத் தமிழ்' நூல்குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தரும் உத்திகளை விளக்கினார்.

முன்னதாக, வளர்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர். அருள் வீரப்பன் வரவேற்புரை நல்கினார். "நம் இளைய தலைமுறைக்கு அன்பு, அறம், ஒழுக்கம், நேர்மை முதலிய நற்பண்புகளை எடுத்துரைக்கும் விதமாக அமெரிக்காவில் தமிழ் வகுப்புகளை அமைப்பது அவசியம். இதன் முதற்படியாக இந்த நூல் வெளிவருவது நன்மை பயப்பதாக அமைகிறது" என்று அவர் குறிப்பிட்டார். நியூ ஜெர்சி (பிரிட்ஜ்வாட்டர், மார்ல்பரோ) தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்நூலில் உள்ள பாடல்களில் சிலவற்றைப் பாடியதோடு சில வரலாறுகளைக் கூறினார்கள்.

ஒருங்கிணைப்பாளர் க. சிவகுமார் இயக்கத்தின் அமெரிக்கச் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். நூலாசிரியர் வி. சுப்பிரமணியன் ஏற்புரையில், "இந்த நூல் மாணவர்களின் மொழிவளத்தை ஊக்குவிப்பதோடு அவர்களுக்கு வாழும்நெறியைக் காட்டி, மன உறுதியை அளித்து, அவர்கள் நல்லவர்களாகவும் நம் பண்பாட்டிலும் மொழியிலும் ஈடுபாடு உள்ளவர்களாகவும் வாழ உதவும்” என்று குறிப்பிட்டார். நூலின் துணையாசிரியர் நர்மதா கிருஷ்ணசாமி "இந்தப் புத்தகத்தை அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் துணைப்பாடமாகக் கற்பிக்க முன்வரவேண்டும்" என்று சொன்னார்.

முனைவர் கபிலன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ரவி பெருமாள்சாமி நன்றி நவின்றார். சின்னசாமி, ரவி, உதயகுமார், தனசேகரன் உள்ளிட்ட நியூ ஜெர்சித் தமிழ்க் கலைக்குழுவினர் பறையிசை முழக்கம் செய்து விழாவிற்குக் களை சேர்த்தனர்.

மேலும் தகவல்களுக்கு:
email: thirunerihelp@gmail.com
blog: thiruneri-usa.blogspot.com

© TamilOnline.com