என் பிரியமான பக்தனுக்கு...
ஒருநாள் காசி விஸ்வநாதர் கோவிலில் திடீரென்று ஏதோ உலோகம் விழும் ஒலி கேட்டது. பார்த்தால், தரையில் ஒரு தங்கத்தட்டு கிடந்தது. கர்ப்பகிருகத்தின் முன்னிருந்த அரங்கத்தின் உச்சியிலிருந்த திறந்தவெளி வழியே அது விழுந்திருக்க வேண்டும்.

எல்லோரும் ஆச்சரியத்துடன் அதைச் சூழ்ந்து நின்றனர். அதனருகே தலைமைப் பூஜாரி சென்று கூர்ந்து பார்த்தார். "என் பிரியமான பக்தனுக்கு உரியது இது" என்று அதில் எழுதப்பட்டிருந்தது. புரோகிதர் அதை உரக்கப் படித்தார். எல்லாப் பூஜாரிகளும் அதைப் பிடுங்கிக்கொள்ளப் போட்டி போட்டனர், "என்னைவிட யார் பெரிய பக்தன்? எனது நேரம், திறமை, பலம் எல்லாவற்றையும் நான் விஸ்வநாதரைப் பூஜிப்பதிலேயே செலவிடுகிறேன்!" என்றனர். ஆனால், யார் தொட்டாலும் அந்தத் தட்டு மண்ணால் ஆனதாக மாறிப்போனது.

தங்கத் தட்டைப் பற்றிய தகவல் காட்டுத்தீ போல எங்கும் பரவியது. பண்டிதர்கள், பாடகர்கள், கவிஞர்கள், உபன்யாசகர்கள் என்று எல்லோரும் அங்கே வந்தனர். ஆனால் யாருக்கும் அதிர்ஷ்டம் இருக்கவில்லை. காலம் உருண்டோடியது. தங்கத்தட்டு கேட்பாரில்லாமல் இருந்தது.

ஒருநாள் ஓர் வெளியூர்க்காரன் அங்கே வந்தான். கோவில் வாசலில் நின்றிருந்த பிச்சைக்காரர்கள், கண்ணிழந்தோர், காது கேளாதோர், அங்கம் குறைந்தோர் போன்றவர்கள் பிச்சை கேட்கும் பரிதாபக் குரலைக் கேட்டு அவன் கண்களில் நீர் நிரம்பியது. அவர்களுடைய துன்பத்தையும் பசியையும் தன்னால் நீக்க முடியவில்லையே என்று அவன் வெட்கமடைந்தான். அதற்காக தெய்வத்திடம் பிரார்த்திக்கலாம் என்றெண்ணிக் கோவிலுக்குள் நுழைந்தான்.

ஓரிடத்தில் மக்கள் கும்பலாக நின்றுகொண்டு எதையோ விவாதிப்பதைப் பார்த்தான். அவர்களிடையே நுழைந்து பார்த்தான். நடுவில் ஒரு தங்கத்தட்டு இருந்தது. அதன் கதையைக் கேட்டறிந்தான். அங்கிருந்தவர்களும் பூஜாரிகளும் பிரபஞ்ச நாயகனான விஸ்வநாதனைப் பெற முயலாமல், தங்கத்தட்டை அடைய முயற்சிப்பதை அறிந்து அவன் வருத்தமுற்றான். தங்கத்தட்டை அவன் கண்டுகொள்ளவில்லை என்பதைப் பார்த்து பூஜாரி அவனிடம் அந்தத் தட்டை எடுக்கும்படிக் கூறினார். அதற்கு அவன், "மரியாதைக்குரியவரே! எனக்கு வெள்ளியோ தங்கமோ ஒரு பொருட்டல்ல. கடவுளின் கருணை ஒன்றுக்காகவே நான் ஏங்கித் தவிக்கிறேன்" என்றான்.

பூஜாரிக்கு அவன்மீதிருந்த மரியாதை கூடியது. "எங்களுக்காகவாவது நீ அதை உன் கையில் எடு" என்றார் அவர். அதன்மீது சற்றும் பற்றில்லாமல் அதைத் தொட்டான். என்ன ஆச்சரியம்! அந்தத் தட்டு பலமடங்கு ஒளிவீசியது!

எல்லாப் புரோகிதர்களும் அவனைச் சூழ்ந்துகொண்டு, "ஐயா, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன படித்திருக்கிறீர்கள்? எந்தெந்த கல்விப் பிரிவுகளில் நீங்கள் வித்வான்? எத்தனை ஆண்டுகள் நீங்கள் தவம் செய்திருக்கிறீர்கள்?" என்றெல்லாம் கேட்டனர்.

"நான் எவ்வூரையும் சேர்ந்தவனல்ல. கடினமாக உழைத்து எனது ரொட்டியை நான் சம்பாதிக்கிறேன். நான் நாமஸ்மரணம் என்னும் சாதனை ஒன்றுமட்டுமே செய்கிறேன். அது என் இதயத்தைத் தூய்மையாக்கி அன்பாலும் கருணையாலும் நிரப்பியிருக்க வேண்டும். என் மனதையும் புலன்களையும் அடக்கும் ஆற்றலை அது எனக்குத் தந்தது. எந்த சாஸ்திரத்தையோ கல்வியையோ நான் கற்கவில்லை. தெய்வ நாமத்தைச் சொல்லும் கலை ஒன்றைத்தான் நான் கற்றுள்ளேன். நான் செய்யும் ஒரே செயல் ஏழைகளுக்குக் கருணை காட்டுவதுதான்" என்றான் அவன்.

தெய்வத்தின் அன்பைப் பெறுவதற்குத் தேவையான தகுதி, கருணையும் புலனடக்கமுமே. முழுமையான நம்பிக்கையோடு தெய்வத்தின் பெயரை இடையறாமல் ஜபிப்பதன் மூலம் இவற்றைப் பெறமுடியும்.

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com