தெரியுமா?: தமிழ் ஆன்லைன் நிதி நல்கைகள்
உங்கள் அபிமானத் 'தென்றல்' இதழோடு தொடர்புடைய தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை இவ்வாண்டில் டாலஸ் பகுதியிலுள்ள 5 தமிழ்ப் பள்ளிகளுக்கு 7,500 டாலர் நிதியை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் புதிதாகத் தொடங்கப்படும் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளி அல்லது அதன் கிளைக்கு முதல் இரண்டாண்டுகளுக்குத் தலா 1,500 டாலர் வீதம் நிதி வழங்கப்படும் என மூன்றாண்டுகளுக்கு முன்னர் அறக்கட்டளை அறிவித்திருந்தது. சமுதாயத்தில் தமிழ்க்கல்வியை ஊக்குவிக்கும் முகமாக இதனைச் செய்து வருகிறோம். 2015-16 கல்வியாண்டில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் அகடமி தொடங்கிய 4 பள்ளிகளுக்கு $6,000 வழங்கப்பட்டது.

"எமது தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதி வழங்கிய உங்களுக்கும் அறக்கட்டளை ஆலோசகர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி. இவ்வாண்டில் இடவாடகைகள் மிகவும் அதிகரித்துவிட்டதை ஈடுசெய்ய இது மிக உதவியாக அமையும். சரியான சமயத்தில் செய்யப்பட்ட இந்த உதவிக்கும், உங்கள் வள்ளன்மைக்கும், தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்யும் சேவைக்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம்" என்கிறார் திருமதி. கீதா அருணாசலம், டெக்சஸ்.

நீங்கள் ஒரு தமிழ்ப்பள்ளி அல்லது அதன் கிளை தொடங்குவதற்கு நிதியுதவி பெற விரும்பினால், www.tamilonline.com/tolfoundation என்ற வலைப்பக்கத்திற்குச் சென்று, அங்குள்ள படிவத்தை நிறைவு செய்யவும். தகவலை எங்களுக்கு thendral@tamilonline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிர்வாகம்

© TamilOnline.com