கடமையைச் செய்கிறீர்கள், கசப்பு வேண்டாம்.
அன்புள்ள சிநேகிதியே,

சமீபத்திய தென்றல் இதழில் நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். மாமியார், மருமகள், மகன் என்று அறிவுரை கொடுத்திருந்தீர்கள். ஆர்வத்துடன் படித்தேன். "உன் கதைபோல இருக்கிறது. படித்துப்பார்" என்று என் நண்பன் சொன்னான். அட்வைஸ் நன்றாகவே இருந்தது. என்னுடைய கேள்வி, "எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்?" என்பதுதான்.

நானும் என் அம்மாவை எதிர்த்துக் காதல் திருமணம் செய்துகொண்டவன்தான். ஆனால், பணக்காரன் இல்லை. என் மனைவி என்னைவிடச் சாதாரணம். ஆனால் அருமையான பெண். எதிர்த்து, அதிர்ந்து பேச மாட்டாள். புறநகர்க் கலாசாரம். வேலையில் எனக்கு ஜூனியராக வந்தாள். என்னைப் பயிற்சி தரச் சொன்னார்கள். அவளிடம் இருந்த அந்தப் பணிவு, வெட்கம் எல்லாம் என்னைக் கவர்ந்துவிட்டது. அம்மாவுக்குப் பிடிக்காமல்தான் மணந்துகொண்டேன். அம்மா மிகவும் நிர்த்தாட்சண்யமாகப் பேசுகிறவர். மனைவி திருமணமான புதிதில் சொற்களால் அடி வாங்கியிருக்கிறாள். என் தங்கைக்கு முன்னால் நான் அவசரப்பட்டு விட்டேன். சுயநலவாதி. அம்மா செய்த தியாகங்களை புரிந்துகொள்ளவில்லை. எவ்வளவோ பெரிய இடங்களில் வாய்ப்பு இருந்தது என்றெல்லாம் சொல்லித் தீர்த்தாள்.

என் மனைவியிடம் பொறுமையாக இருக்கச் சொன்னேன். அப்படித்தான் இருந்தாள். வருடா வருடம் இந்தியாவிற்குப் போய், அம்மாவின் கோபத்தைத் தணிக்க எங்களால் முடிந்ததையெல்லாம் செய்து பார்த்தோம். தொடர்ந்து கடுஞ்சொல்லை என் மனைவி தாங்கிக்கொண்டாள். எனக்கே போரடித்துப் போய்விட்டது. அப்புறம் குழந்தைகள், குடும்பம் என்று வாழ்க்கை பிசியாகப் போய்விட்டது. அடிக்கடிப் போகவும் முடியவில்லை. என் மனைவியைக் கூட வரும்படித் தொந்தரவு படுத்தவில்லை.

என் தங்கை அம்மா விரும்பியபடியே திருமணம் செய்துகொண்டாள். மிகவும் பெரிய இடம். அம்மாவுக்குத் திருப்தி. ரொம்பப் பெருமை. ஆனால், இந்தத் தமாஷைக் கேளுங்கள். தீபாவளிக்கு வந்த பெண்ணை அவள் கணவர் எங்கள் வீட்டில் தங்கவிடவில்லை. அம்மா இருப்பது ஒரு சின்ன அபார்ட்மெண்ட். அவர்களுடைய செர்வண்ட் குவார்ட்டர்ஸ்கூடப் பெரிதாக இருக்குமாம். தன் பெண்ணின் அழகுக்கும், அறிவுக்கும் ஏற்ற மாப்பிள்ளையின் அந்தஸ்துபற்றி அப்படிப் பெருமை அடித்துவிட்டு, அப்புறம் அவர்களுடைய அகங்காரத்தைப்பற்றி என்னிடம் புலம்பிக்கொண்டே இருந்தார். என் மனைவிக்குச் சிரிப்பாக வந்தது. என் அம்மாபேரில் எனக்குப் பாசம் உண்டு. அப்பா சின்னவயதில் போய், நிறையக் கஷ்டப்பட்டு வேலைபார்த்து, எங்களை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், எப்போதும், விமர்சித்துத்தான் பேசுவார். ரொம்ப ரோஷம் உண்டு.

போன மாதம் வழுக்கி விழுந்துவிட்டார். எனக்குச் செய்தி கிடைத்தது. நான் உடனே ஓடினேன். என் தங்கைக்குத் தெரியப்படுத்தவில்லை. நான் 10 நாளில் திரும்பி வரவேண்டும். என்ன செய்வதென்றே புரியவில்லை. என் மனைவி, அவளுடைய உறவினரான தம்பதிகளை அனுப்பி வைத்து ஒரு மாதம் அம்மாவுக்கு ஆதரவாக இருக்கச் செய்தாள். என் தங்கைக்கு நான் செய்தி சொல்லி, அவள் காலை ஃப்ளைட்டில் வந்து, மாலை திரும்பிப் போய்விட்டாள், அவர்கள் வீட்டில் ஏதோ அவசரம் என்று. நானும் திரும்பி வந்துவிட்டேன். அந்தத் தம்பதிகள் நான் திரும்பிப் போகும்வரை பார்த்துக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அம்மாவுடன் தினம் பேசுகிறேன். ஆனால், என் மனைவியைப் பற்றி விசாரிப்பது இல்லை. She takes things for granted. எனக்குக் கோபம் கோபமாக வருகிறது, இந்த மாமியாரின் பேரில்.

இப்படிக்கு,
........


அன்புள்ள சிநேகிதரே,

அறிவுரை என்று எழுதியிருந்தீர்கள். நான் வேண்டுகோள்தான் வைத்திருந்தேன். நீங்கள் "யார் கேட்கப் போகிறார்கள்?" என்று கேட்டிருந்தீர்கள். அது உண்மை. யாருடைய மனோபாவத்தையும் உடனே மாற்றிக்கொள்வது மிகவும் சிரமம். ஆனால், பிரச்சனையில் நமக்குப் பாதிப்பு ஏற்பட்டு மனநிம்மதியை இழக்கும்போது, கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டால்தான் முடியும். அது போன்ற சந்தர்ப்பம் உங்கள் அம்மாவுக்கு ஏற்படவில்லை. காரணம், உங்கள் மனைவி புரிந்துகொண்டு உறவின் இழப்பைத் தவிர்த்து உங்களுக்கும், உங்கள் தாய்க்கும் பாதிப்பு இல்லாமல் செய்திருக்கிறார். ஆகவே, உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கிறது.

இந்த வயதில் உங்கள் அம்மாவின் கண்ணோட்டத்தை மாற்றமுடியாது. சினிமாக்களில்தான் வரும் மனம்மாறி மன்னிப்புக் கேட்கும் காட்சிகள். நிறையப் பேர் மன உளைச்சலை வெளிப்படுத்திக் கொண்டே, புலம்பிக் கொண்டே இருப்பார்களே தவிர, கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். நான் இதைப்பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். Bitter sweetness என்பதுபோல, இது ஒரு ‘துக்க சந்தோஷமோ’ என்று.

நீங்கள் உங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். கோபம் வரலாம். தாயின்மேல் வெறுப்போ, கசப்போ வரவேண்டாம். அது உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிடும். உங்கள் அம்மா தேறி, மீண்டும் நலம்பெற்று வாழ வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com