ஹார்வர்டு பல்கலையில் தமிழுக்கோர் அரியணை
தமிழ்நாட்டின் இசைமேதை ஏ.ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்க சினிமா கலை விஞ்ஞானக் கழகம் (Academy of Motion Picture Arts and Sciences) ஆஸ்கர் விருது அளித்துக் கௌரவித்தபோது நமக்கு எப்படிப் புல்லரித்தது, நினைவிருக்கிறதா? அதேபோல், தமிழ்மொழியை உலகம் போற்றும் ஒரு பொன் அரியணையில் அமர்த்திச் சரித்திர சாதனை ஒன்றைப் படைக்கும் முயற்ச்சியை 'ஹார்வர்டு தமிழ் இருக்கை' (Harvard Tamil Chair) இயக்கம் தொடங்கியுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகம் பாஸ்டன் நகரத்தில் சுமார் 400 வருடங்களாக இயங்கிவரும், கல்விக்குப் பெயர்போன, மிகவும் மதிக்கப்படும் ஐவி லீக் (Ivy League) பல்கலை ஆகும். கோடீஸ்வரத் தொழிலதிபர்கள் (பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பர்க்), அமெரிக்க ஜனாதிபதிகள் (ஒபாமா, புஷ், கென்னெடி, ரூஸ்வெல்ட்), பிற நாட்டு அதிபர்கள் (ட்ரூடோ, பேனசீர் புட்டோ), உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் (வில்லியம் ரெனிக்விஸ்ட், ஜான் ராபர்ட்ஸ்), நோபல் பரிசு பெற்றவர்கள், புலிட்சர் பரிசு பெற்றவர்கள், என்று புகழின் உச்சியை அடைந்த பல சரித்திர நாயகர்கள் ஹார்வர்டில் படித்தவர்கள். சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு சமஸ்கிருதக் கல்வி மற்றும் ஆய்வை நிரந்தரமாக ஆதரிப்பதற்காக Wales Professor of Sanskrit என்ற நன்கொடை இருக்கை (Endowed Chair) இங்கு நிறுவப்பட்டது.

இந்தப் பெருமை வாய்ந்த பல்கலையில் தொன்மை வாய்ந்த ஆனால் பசுமை மாறாத, தேமதுரத் தமிழ்மொழியைக் கற்பிக்க ஒரு நிரந்தர இருக்கையை ஏற்படுத்தினால் அமெரிக்காவிலுள்ள இரண்டு லட்சம் தமிழர்களுக்கும், சந்ததியினருக்கும் தமிழின் பாரம்பரியத்தைக் காத்து வளர்க்க எவ்வளவு ஆதரவாக இருக்கும் என்ற சிந்தனை ஏற்பட்டது தமிழன்பர்கள் டாக்டர் விஜய் ஜானகிராமன் மற்றும் டாக்டர் சுந்தரேசன் சம்பந்தம் இருவருக்கும். ஹார்வர்டு பல்கலைகழகமும் தமிழிருக்கை நிறுவ ஆர்வம் காட்டியவுடன், உடனே களத்தில் இறங்கிவிட்டார்கள்.

ஹார்வர்டில் நிரந்தர இருக்கை நிறுவ ஆறு மில்லியன் டாலர் நன்கொடை தேவை. இதிலிருந்து வரும் வட்டி வருமானம்தான் தமிழ் இருக்கையை தொடர்ந்து நடத்தப் பயன்படுத்தப்படும். ஜானகிராமன் சம்பந்தம் இருவரும் சொந்தக் காணிக்கையாகச் சமபங்களித்து, ஒரு மில்லியன் டாலரை அளித்துத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். மேலும் 'ஹார்வர்டு தமிழ் இருக்கை' (Harvard Tamil Chair) என்ற இயக்கத்தின் மூலம் இவர்கள் உலக அளவில் மீதமுள்ள ஐந்து மில்லியன் டாலர் தொகையைத் திரட்டும் பணியில் இறங்கியுள்ளனர். இவர்களுடன் திரு. பால் பாண்டியன் (டெக்சஸ்), டாக்டர். சொர்ணம் சங்கர் (மேரிலாண்டு), திரு. அப்பாத்துரை முத்துலிங்கம் (கனடா), திரு. ஆறுமுகம் முருகய்யா பிள்ளை (சென்னை) உட்பட எண்ணற்றோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். அமெரிக்க அன்பர் ஹார்வர்டு தமிழ் விரிவுரையாளர் டாக்டர். ஜோனதன் ரிப்ளீ, வால்மார்ட், பெப்ஸி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகள் (CTO/CDO) வகித்த திருமதி. சுஜா சந்திரசேகர், மதுரை தியாகராஜர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் பேச்சி முத்தையா என்று பலர் இந்த முயற்சிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். (YouTubeல் காணலாம்). இதுவரை மொத்தம் இரண்டு மில்லியன் டாலர் திரட்டப்பட்டு இருக்கிறது.

தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல. அது பழமை வாய்ந்த பாரம்பரியம், ஆழமான பண்பாடு, 2000 ஆண்டுகளுக்கு மேல் இடைவிடாமல் தொடரும் கலாசாரம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை நிறுவுவதன் மூலம் தமிழ்க் கல்வி, ஆராய்ச்சி பெருகும், அமெரிக்காவில் தமிழ் மலரும், உலகெங்கும் தமிழின் பெருமை என்றென்றும் பரவும். நமது அமுதத் தமிழை ஒரு நிரந்தரமான சிம்மாசனத்தில் அமர்த்தும் இந்த சரித்திர நிகழ்வை ஆதரிப்போம். உங்களால் முடிந்த நன்கொடையை இந்த முயற்சிக்கு இப்பொழுதே அளிக்கலாமே! நன்கொடைகளுக்கு அமெரிக்க 501(C)(3) Non-profit வரி விலக்கு உண்டு.

நன்கொடை அளிக்கவும் மேலும் அறியவும்: harvardtamilchair.org

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
நியூ யார்க்

© TamilOnline.com