ரவி ராஜன்
இனம், நிறம் என்கிற கண்ணாடிக் கூரைகளைத் தகர்த்து திரு. ரவி ராஜன் California Institute of the Arts (CalArts, LA) பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியை அடைந்துள்ளார். தமிழ் அமெரிக்கர்கள் பெருமைகொள்ள வேண்டிய மிகப்பெரிய சாதனை இது. சிறந்த நாடகத்துறை சாதனைகளைக் கௌரவிக்கும் Tony Awards Nominations தேர்வுக் குழுவில் இவர் ஒருவர். பர்ச்சேஸ் பல்கலைக் கழகத்தில் பணிபுரிகையில் Enterpreneurship in the Arts என்கிற பாடத்திட்டத்திற்கு இவர் வித்திட்டார். இசைத்துறையில் மிகுந்த ஈடுபாடுள்ள ரவி ராஜன் டிரம்பெட் வித்தகர் என்றாலும் இவரது ஆர்வங்கள் கணினி, அனிமேஷன், கலைகள், நாடகம், தொழில்முனைதல் என்று பலவாறாக விரிகிறது. இரண்டாம் தலைமுறைத் தமிழ் அமெரிக்கரான இவர், வழக்கத்துக்கு மாறாக, சராசரிப் பொருளாதாரம் கொண்ட குடும்பத்தில் பிறந்து STEM துறைகளைத் தேர்ந்தெடுக்காமல் புதியதொரு பாதையைத் தனக்கென அமைத்துக்கொண்ட துணிச்சல்காரர். இவற்றுக்கான பின்னணியையும், அவரது மனவோட்டத்தையும் அறிய, அவரோடு உரையாடினோம். அதிலிருந்து.....

*****


தொடக்க காலங்கள்...
என் தாய் குளித்தலையைச் சேர்ந்தவர். அப்பா ஊர் ஆங்கரை. இரண்டும் காவேரியை ஒட்டிய கிராமங்கள். அம்மாவின் அப்பா சாஸ்திரிகள். அப்பாவழித் தாத்தாவுக்கு ஸ்டேஷனரி கடை, பூர்வீக நிலங்கள் இருந்தன. அப்பா திருச்சி புனித ஜோஸஃப் கல்லூரியில் ஃபிசிக்ஸ் படித்தார். திருமணத்திற்குப் பின் மும்பை செம்பூரில் பெற்றோர் வசித்தனர். அப்பா அங்கு அணுசக்தி நிறுவனத்தில் வேலை பார்த்தார். என் முதல் சகோதரி அங்கு பிறந்தார். அடுத்ததாக ஒரு சகோதரி பிறந்து நான்கு வயதில் இறந்துவிட்டார்.

என் தந்தை அமெரிக்கா வர விரும்பினார். அப்போது, கல்வி போன்ற சில துறைகளைத் தவிர வேறு வழியில் இங்கு குடியேறுவதற்குத் தடை இருந்தது. அதனால் அவர் 1968ல், Atmospheric Sciences (Meteorology) படிக்க ஃபோர்ட் காலின்ஸ் (கொலராடோ) வந்தார். வெனிசுவேலாவில் ஆராய்ச்சிக்காகப் போனார். அப்போது அம்மா எனது சகோதரிகளுடன் மும்பையில் இருந்தார். அப்போதுதான் இரண்டாவது சகோதரி இறந்து போனது. தனியாக அந்தக் குழந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்தார் என்பதிலிருந்து அம்மாவின் மனவுறுதியைப் புரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்கா வருகை
ஓரிரு வருடங்களுக்குப் பின் எங்களுக்கு இங்கு வர அனுமதி கிடைத்தது. என் தந்தைக்கும் உதவித்தொகை கிடைத்தது. அதனால் கொலராடோவில் வாழ்க்கையைத் தொடங்கினர். ஏதோ காரணத்தால் உதவித்தொகை நின்றுபோகவே மாஸ்டர்ஸ் படிப்பிற்குப் பின் சியாட்டில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துக்கு Ph.D. ஆய்வுக்குச் சென்றார்.

நான் சியாட்டிலில் பிறந்தேன். என் தந்தை திங்கட்கிழமை தனது ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்தார். நான் அந்த வாரக் கடைசியில் பிறந்தேன். பின்னர் என் தந்தைக்கு ஓக்லஹாமா பல்கலைக் கழகத்தில் பணிவாய்ப்பு கிடைத்தது. எனக்கு ஒரு வயதாக இருந்தபோது நார்மன், ஓக்லஹாமாவுக்குக் குடியேறினோம். கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் அங்கு வசித்தேன். பள்ளிப்படிப்பு முழுவதும் அங்குள்ள பப்ளிக் பள்ளிகளில்தான். பின் அங்கேயே ஓக்லஹாமா பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றேன்.



கலை ஆர்வம்
எனக்குக் கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது ஒரு சுவாரசியமான கதை. என் சகோதரி ஒரு மருத்துவர். அவர் ஒரு ஆஸ்திரேலியரை மணம் புரிந்து, மெல்பர்னில் வசிக்கிறார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது குழந்தைகள்நல மருத்துவர் ஆக விரும்பினேன். எனக்கு அரசியல் பிடிக்கும். இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. மும்பையிலிருந்த எனது மாமா நான் நான்காம் வகுப்பில் இருந்தபோது எனக்கு ஒரு கேமரா பரிசளித்தார். அதனால் புகைப்படக் கலையிலும் ஆர்வம் ஏற்பட்டது. நார்மன் நகரப் பள்ளிகள் இசைத்துறைக்குப் பெயர் பெற்றவை. இலவசமும்கூட. அதனால் நான் அங்கு இசைக்கருவி வாசித்தேன்.

எங்கள் குடும்பம் வசதிமிக்கதல்ல. அப்பா பேராசிரியராக இருந்தபோதும் நாங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் வசிக்கவில்லை. பொதுவாகத் தெற்காசியக் குடும்பங்களில் கணவன், மனைவி இருவரும் பணி புரிவார்கள். ஆறு இலக்க வருமானத்துடன், நல்ல புறநகர்ப் பகுதியில் வசிப்பார்கள். எங்கள் குடும்பம் அப்படியல்ல. அப்பா கல்லூரிப் பேராசிரியாக இருந்தாலும், மற்ற கல்லூரி ஊழியர் குடும்பம் போலஅல்லாமல் சாதாரண நார்மன் நகர மக்களைப் போல எங்கள் வாழ்க்கை இருந்தது.

என் அம்மா ஆம்புலன்ஸில் கீ பஞ்ச் ஆப்பரேட்டராகத் தொடங்கினார். பின் உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்து, ஒரு வங்கியில் சேர்ந்தார். பின்னர் கம்ப்யூட்டர் புரோகிராமராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் நார்மன் மற்றும் ஓக்லஹாமா மாகாணத்தின் அரசு ஊழியரானார். பட்டதாரி இல்லாவிட்டாலும் அவருக்கு நிலையான வேலை. சில வருடங்களுக்கு முன்தான் ஓய்வு பெற்றார்.

நான் சீனியர் வகுப்பை அடைந்தபோது, ஏற்கனவே பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றிருந்தேன். இசையில் மூழ்கியிருந்தேன். டிரம்பெட் வாசித்தேன். ஜாஸ் இசைப்பேன். இப்படிப் பல விஷயங்கள். என் சகோதரி எனக்கு 'And the band played on' என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அது AIDS நோய் பற்றியது. மருத்துவர்கள் மக்களுக்குச் சேவை செய்பவர்கள், நானும் சேவை செய்யவேண்டும் என அப்போது நினைத்தேன். மருத்துவர்கள் நோயாளிகளைக் குணப்படுத்துவார்கள். ஆனால் கலைஞர்கள் மனித வாழ்க்கையை ஆனந்தமானதாக ஆக்குகிறார்கள், இல்லையா?

நான் விரும்பிய கல்வி
இதுதான் சீனியர் வகுப்பில் எனக்குள் ஏற்பட்ட மாற்றம். நான் எப்போதும் மக்களிடையே இருக்க விரும்புகிறேன். I am a people person. நான் சற்றே வித்தியாசமான வழியில் மானிடத்தைப் பேண விரும்பினேன். I wanted their social and emotional wellbeing. இவை உடல்நலனுக்கு எவ்வளவு முக்கியமானது என்று இந்தியர்களுக்குத் தெரியும். அதனால் இந்தத் திசையில் பயணித்தேன்.

அதனால் ஓக்லஹாமா பல்கலைக் கழகத்தில் இசைக்கல்வி படித்தேன். அதற்கு 1500 டாலர்தான் கல்விக் கட்டணம் என்பது காரணம் (சிரிக்கிறார்). எனக்கு அந்தப் படிப்பு மிகவும் பிடித்திருந்தது. நார்மன் நகர பப்ளிக் பள்ளிகளில், நான் படித்த அதே இசை வகுப்புகளில், சிறிதுகாலம் கற்பித்தேன். ஆசிரியர் வேலை மிகவும் பிடித்திருந்தது. மாணவர்களுடன் ஊடாடுவது பிடித்திருந்தது.

எனக்கு இடமாற்றம் தேவை என்ற எண்ணம் வந்தது. என் அக்கா வடகரோலினாவில் மருத்துவ ரெசிடென்ஸி முடித்துவிட்டு, நியூ யார்க்கில் வசித்து வந்தார். எனக்குச் சிறுவயது முதலே நியூ யார்க் மீது ஒரு ஈர்ப்பு. எண்பதுகளில் அங்கு சென்றிருந்த போது வாங்கிய சப்வே வரைபடத்தை இன்னும் வைத்திருக்கிறேன். அதன் காரணமாக நான் அங்கு போய்ச்சேர்ந்தேன். அங்கிருக்கும் சுவர்க் கிறுக்கல்கள் (graffiti), அழுக்கு எல்லாவற்றின் மேலும் எனக்குக் காதல். இதே காரணங்களுக்காக எனக்கு மும்பை நகரமும் பிடிக்கும்.

யேல் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் படிக்கச் சென்றேன். அங்கு நான் இளநிலை மாணவர்களுக்குக் கற்பித்தேன். அதனால் கல்விக் கட்டணம் கிடையாது. சிறிது உதவித் தொகையும் கிடைத்தது. அத்தோடு, என் நெருங்கிய நண்பன் தொடங்கிய வீடியோ நிறுவனத்திற்கு உதவினேன். அது வீடியோ உலகம் கம்ப்யூட்டருடன் இணையத் தொடங்கியிருந்த காலகட்டம். Non-linear வீடியோ எடிட்டிங் அப்போது புதுமையானது. Avids தொழில்நுட்பத்தை, தொழில்முறை கலைஞர்கள் உபயோகித்து வந்திருந்தனர். அதன் விலை சாதாரண மக்களும் உபயோகிக்கும் விதத்தில் குறைந்ததோடு, தொழில்நுட்பமும் எளிமை அடைந்தது.



கம்ப்யூட்டர் மொழிகளை நானே கற்றேன்
எனது இளநிலைப் படிப்புக்காலம் முழுவதும் அதில் ஈடுபட்டேன், பணமும் சம்பாதித்தேன். அதற்குத் தேவையான கம்ப்யூட்டர் அறிவைப் பெற நான் நார்மன் நகரின் பொதுநூலகங்களுக்குப் போவேன். அங்கு கம்ப்யூட்டர்கள் இருக்கும், உபயோகிப்பவர் அதிகம் கிடையாது. நான் குளிரூட்டப்பட்ட அந்த நூலகங்களுக்குப் போவேன். ஓக்லஹாமா வெய்யில் காலத்துக்கு அது மிகவும் அவசியம். ஆரம்பப் பள்ளிக்கும், நடுநிலைப் பள்ளிக்கும் இடைப்பட்ட நாட்களில், நான் அங்கு சென்று BASIC, பாஸ்கல் போன்ற கம்ப்யூட்டர் மொழிகளைக் கற்றுக்கொண்டேன்.

அங்கு புத்தகங்கள் கிடைக்கும். கம்ப்யூட்டர் முன்னால் புத்தகங்களை வைத்துக்கொண்டு நாமே கற்கலாம். சிறுவயதில், சம்மர் விடுமுறை முழுவதும் அங்கு தினமும் பலமணி நேரம் செலவழித்தேன். சிறுவயதில் அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. இன்றைக்கு முடியாது, இல்லையா? மால்கம் கிலாட்வெல் எழுதிய 'Outliers' புத்தகத்தில், பில் கேட்ஸ் பள்ளியின் மெயின்ஃப்ரேம் கம்ப்யூட்டரை டயல் அப் மோடம் உபயோகித்து 10,000 மணி நேரம் கற்பதற்குச் செலவிட்டதை விவரித்திருப்பார்.

பொதுநூலகம் இல்லாவிட்டால் என்னால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இருக்கவே முடியாது. இப்படிப்பட்ட அமெரிக்கச் சமூக அமைப்புகள் நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு உதவின. அதை என்னால் மறக்க முடியாது. அது முக்கியம். இன்றைக்கு இவையெல்லாம் மாறிவிட்டதைப் பார்க்கிறோம்.

கிராட் ஸ்கூல் காலத்தில் இசைத்துறையில் நிறையப் பரிசோதனைகள் செய்தேன். யேல் பல்கலையில் அற்புதமான நாடகத்துறை, ஆர்ட்ஸ் துறை, நூலகங்கள் எல்லாம் உண்டு. இம்மாதிரியான வளங்களைப்பற்றி நான் கனவுகூடக் கண்டிருக்க முடியாது. அதனால் அந்த நாடகத்துறையில் டைரக்‌ஷன் படிக்க விரும்பினேன். நான் டைரக்‌ஷன் வகுப்பு ஆசிரியரிடம் அவர் வகுப்பில் சேரலாமா எனக் கேட்டேன். அதற்கு அவர் “நான் நாடகக் கலைஞர்களுக்கும், கதாசிரியர்களுக்கும் நடத்தும் வகுப்பு ஒன்று உள்ளது. அதில் டைரக்‌ஷனும் உண்டு. அதில் ஏன் சேரக்கூடாது?” என்றார். பிராட் வெஸ்டர்ஃபீல்டின் சர்வதேச உறவுகள் வகுப்புகளுக்கும் சென்றேன்.

யேல் பல்கலையில்
யேல் பல்கலைக் கழகத்தில் இருந்த 2 வருடங்களில், என் துறை சம்பந்தப்படாத பல்வேறு விஷயங்களைக் கற்க முடிந்தது. எனக்கு நிறைய நேரம் இருந்தது. I also did some sort of desktop computing support and made some money. I was doing the desktop support. யேலில் பட்டம் பெற்றேன். நியூ யார்க் நகருக்குக் குடிபெயர விரும்பினேன். ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் ஊடகத் தயாரிப்பு வேலை கிடைத்தது. ராக்ஃபெல்லர் ஒரு மருத்துவ ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம். இப்படியாக வாழ்க்கை ஒரு முழுச்சுற்று வந்துவிட்டது.

CalArts பல்கலையும், யேல் பல்கலையும் ஒரே மாதிரியானவை. CalArts-ல் இளநிலைப் படிப்பும் உண்டு என்பது ஒரு வித்தியாசம். கால்டெக், ராக்ஃபெல்லர் பெரிய பல்கலைக்கழகங்கள் வகையில் சேராதவை, வித்தியாசமான நோக்கங்களுக்காக இயங்கும் பிரத்தியேக நிறுவனங்கள். ராக்ஃபெல்லர் மீடியா துறையில் ஒருவருடம் வேலை செய்தேன். பால் கிரீன்கார்டுடன் (Paul Greengard) அவர் நோபல் பரிசுபெற்ற சமயத்தில் வேலை செய்தேன். அனிமேஷன், வலையேற்றல், பத்திரிகையாளர் கூட்டம் ஏற்பாடு எல்லாம் செய்தேன். நேரடி வலை ஒளிபரப்பும் செய்தோம். அது 2000 ஆண்டு. அப்போது வலையில் நேரடி ஒளிபரப்பு அவ்வளவு எளிதல்ல, ஆரம்பநிலை. ஆனால், என்னைச் சுற்றி மாணவர்கள் இல்லாததை வெறுமையாக உணர்ந்தேன்.


நான் கல்வித்துறையில் பட்டம் பெற்றவன். அதனால், பர்ச்சேஸ் யுனிவர்சிடியின் கலைத்துறையில், கம்ப்யூட்டிங் செய்யவும், கற்பிக்கவும் வாய்ப்புக் கிடைத்ததும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். பர்ச்சேஸ் பல்கலையும் கலைத்துறைக்குப் பெயர்போனது. இப்படித்தான் நான் இசைத்துறையை விட்டுவிட்டு, கலைத்துறையில் சென்று சேர்ந்தேன்.

அங்கு படிப்படியாகப் பாடத்திட்டம் தயாரிப்பது, மற்ற ஆசிரியர்களுடன் இணைந்து வேலை செய்வது என முன்னேறினேன். அவர்கள் என்னை ஆதரித்ததுடன், நான் துறைத்தலைவர் ஆகவேண்டும் எனவும் விரும்பினர். அவர்கள் சொல்ல விரும்பியதை நான் சொல்வதாகக் கூறினர். அதுதான் என் பல்கலைக்கழகத் தொழில் வாழ்க்கைக்கு வழிவகுத்தது.

அந்நிறுவனம் என் செயல்பாடுகளை ஆதரித்தது. ஆதரிக்க முடியாது எனச் சொல்லியிருக்கலாம், அப்படிச் சொல்லவில்லை. இப்படி எங்கெல்லாமோ சுற்றி இந்த இடத்தை அடைந்தேன். சம்பிரதாயமான வழியல்ல என்னுடையது. இசை, கலை, புகைப்படம் என எந்தத் துறையும் தனித்தனியாக இல்லாமல், எல்லா அனுபவங்களும் சேர்ந்து என்னை இந்த இடத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளது.

எல்லோரையும் போல் நானும் ஒரே நேர்கோட்டில் பயணித்திருந்தால், ஏதாவது ஆரம்பநிலை நிறுவனத்தில் தொடங்கி, நிறையப் பணம் சம்பாதித்திருப்பேன். ஆனால் இதைவிடச் சந்தோஷமாக இருந்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.

பர்ச்சேஸ் பல்கலையின் நாடகத்துறை மிகவும் புகழ்பெற்றது. நான் இசை பயிலும் காலத்திலேயே வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாசித்திருக்கிறேன். சிறுவனாக இருக்கும்போதே நாடக ஆர்வம் இருந்தது. நாடகக்கலையில் ஆர்வமுள்ள ஓர் இசைக்கலைஞனான எனக்கு, தியேட்டருக்கு வாசிப்பதுதான் சரி எனத் தோன்றியது. அப்படித்தான் பிராட்வேயுடன் என் உறவு தொடங்கியது.



டோனி விருதுகள்
Broadway League மற்றும் Theater wing இணைந்துதான் டோனி விருதுகளை நடத்தியது. பிராட்வே லீகில் நிறையக் குழுக்கள் உண்டு. அதில் ஒன்று தேர்வுக் குழு (Nominating Committee). அதில்தான் நான் இடம் பெற்றுள்ளேன். அங்கு செயற்குழு, நிர்வாகக் குழு எல்லாமும் உண்டு. ஒரு புதியவரின் பெயர் அவர்களிடம் சென்றால், அவரது தகுதிகளைப் பற்றிக் கண்டறிவார்கள். அதைத் தாண்டினால் உங்களது CV கொடுக்கும்படி கேட்பார்கள். எனக்கு ஆர்வம் இருக்கிறதா எனக் கேட்டார்கள். சரி என்றேன்.

அந்த சீசனில் வெளியாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்க்க வேண்டும். 40 முதல் 50 புதிய நிகழ்ச்சிகள் பார்க்கவேண்டும். அவற்றைப் பற்றி பேசமுடியாது. நிகழ்ச்சியின் மூலப் பாத்திரங்கள் நடிக்கும்போது பார்க்க வேண்டும். அதனால் நாடகம் மேடையேறிய சில நாட்களுக்குள் பார்க்கவேண்டும். ஏனென்றால் எந்தக் கலைஞருக்காவது உடல் நலக்குறைவோ வேறு ஏதாவது அசௌகரியமோ ஏற்பட்டு, மற்றொருவர் அதில் நடித்தால் நீங்கள் மறுபடியும் பார்க்கவேண்டும். நிரந்தரமாக ஒருவருடைய பாத்திரத்தை வேறொருவர் ஏற்றிருந்து நீங்கள் அதைப் பார்க்கத் தவறினாலோ அல்லது அந்த சீசனில் ஒரு நிகழ்ச்சியைத் தவற விட்டிருந்தாலோ, நீங்கள் தேர்வாளராக வாக்களிக்க முடியாது.

அந்த சீசன் முடிவில், ஒரு காலக்கெடு வழங்கப்படும். வெள்ளிக் கிழமைதான் காலக்கெடு. வெள்ளி தொடங்கி ஏதாவது நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டியிருந்தால் பார்த்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை பெயர்களைக் கொடுக்கவேண்டும். முக்கிய நடிகர், நடிகை, துணை நடிகர் நடிகையர் எனப் பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கணக்கான பெயர்கள் இருக்கும் (சிரிக்கிறார்). அந்தப் பட்டியலில் இருந்து, உங்களுடைய குறிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் இவற்றின் உதவியோடு நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என முடிவு செய்யவேண்டும்.

எல்லா நிகழ்ச்சிகளையும் தவறவிடாமல் பார்த்தவர்கள், திங்கட்கிழமை ஒரு குழுவாகக் கூடி, வாக்களிப்போம். ஆனால் எதையும் முன்கூட்டி விவாதிப்பதில்லை. அதன் வழிமுறை எல்லாம் வெப்சைட்டில் காணக் கிடைக்கும். சட்டதிட்டங்கள் உள்ளன. செய்தி கசிந்தால் நடிகர்களின் புகழுக்கும், பணரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் எல்லாமே மிகவும் நெறிமுறையோடு இருக்கும். தேவையில்லாமல் பத்திரிகைகளிடம் போவதில்லை. பத்திரிகைகள் சிலசமயம் கிசுகிசுக்களைக் கசியவிடும். அது சரியல்ல, இல்லையா?

'Entrepreueurship in Arts' என்றால் என்ன?
ப: அதுவொரு நீண்ட பாதை. மக்களுக்கும் கலைக்கும் இடையேயான தொடர்பு நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலை தருவதாக இருக்கிறது. வாழ்க்கை சிற்றறைகளாகப் பிரிந்து போய்விட்டது.

கலை தருகிற ஆனந்தம் எனக்கு உற்சாகமூட்டுகிறது என்று முன்னர் கூறினேன். எல்லாம் பெரிதாக இருக்கவேண்டும் என்றெண்ணும் அமெரிக்கக் கலாசாரம்தான் இதற்குப் பெரிய ஆபத்து. இங்கு எல்லாமே Too big to fail concept தான். மிகப்பெரிய சிம்ஃபொனி ஆர்க்கெஸ்ட்ரா, லிங்கன் சென்டர், கென்னடி சென்டர் போன்ற பிரம்மாண்டங்களை உருவாக்கியுள்ளோம். ஃபோர்டு மோட்டார்ஸ் அசெம்பிளி லைன் போல உருவாக்கிவிட்டோம்.

போன பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தொழிற்புரட்சிக் கருத்துகளைத் துறைவாரியாகச் சிதைத்துவிட்டோம். ஆனால் கலை, கலாசாரத் துறைகளில் அத்தனை வேகமான மாற்றம் இல்லை. ஒரு சிறிய ஸ்டார்ட் அப் போல, எப்படித் தொடங்குவது, சவால்களை எப்படிச் சமாளிப்பது என்பதையெல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லை. அதைச் சொல்லிக் கொடுக்காவிட்டால் பெரிய இலக்கை அடைவதில் ஆபத்து ஏற்படும். இவற்றை நாங்கள் சொல்லிக் கொடுக்கப் போகிறோம். தொழில்முனைவோர் என்ற சொல்லைக் கலைத்துறைக்குப் பயன்படுத்துவது எப்படி? கலைஞர்களுக்கு வணிகத்திறன் சொல்லித் தருவது என்றும் கூறலாம். படைப்பாக்கத் துறையில் புத்தாக்கத் திறனைக் கட்டவிழ்த்துவிடுவது எப்படி என்பது ஒரு கேள்வி. அதற்கு இதையும் ஒரு ஸ்டார்ட் அப் ஆகப் பார்க்கும் அணுகுமுறையைக் கற்றுத்தர வேண்டும், அதற்கான முயற்சிதான் இது என்றும் சொல்லலாம்.

இதை 'Entity creation' என்று நேரடியாகச் சொல்லலாம். இந்தப் புதிய என்டிடி படைப்புத் துறையின் மாற்றங்களுக்கு அடித்தளமாக அமையவேண்டும்.

'என்டிடி' என்றால் என்ன என்பதை வரையறுக்கப் போவது படிக்க வரும் மாணவர்கள்தாம். ஒரு நாடக ஆசிரியன் தனது நாடகத்தைப் படைப்பாற்றலின் கொள்கலனாகக் கொள்கிறான். அதுபோல இந்த என்டிடி இவர்களின் படைப்பாற்றலின் கொள்கலனாக இருக்கும். அது பலர் கூட்டுறவில் செய்யப்படும் திட்டமிட்ட பணியாக இருக்கலாம். அதில் கலைத்துறையினர் ஒன்றுசேருவார்கள். அது சமுதாயம் சார்ந்த சிறிய அமைப்பாக இருக்கும். அவர்கள் செய்வதை லிங்கன் சென்டர் செய்யாது, செய்யமுடியாது. ஏனென்றால் அது புரட்சிகரமானதாக இருக்கலாம். ஆனால் அதை இந்தச் சிறிய அமைப்பு செய்தவுடன் லிங்கன் சென்டரை 'நாம் ஏன் இதைச் செய்யவில்லை?' என்று யோசிக்கவைக்கும்.

இப்போதெல்லாம் சமுதாயத்தில் மக்கள் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து பாடுவதில்லை. தனக்கெனச் சமுதாயம் என்பதே இல்லை. எல்லாம் மிகப் பெரியதாகி விட்டது. சிம்ஃபொனிக்குப் போய்க் கேட்கவேண்டும் என்பது ஒரு லட்சியமாகி விட்டது. பள்ளி நாட்களில் இசை கற்காவிட்டால், இசையுடன் தொடர்பே இல்லாமல் போய்விடும். அது என்னவென்றே தெரியாதபோது அதற்கு நூறு டாலர் கொடுத்து யார் போவார்கள்? அப்படித்தான் இன்றைக்கு ஆகிவிட்டது. நாம் நாட்களைக் கடத்துகிறோமே அன்றிக் கற்பனையோடு உறவாடுவதில்லை.

கலைத்துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம்
அமெரிக்காவில் நாம் பார்க்கிறோம், கார் தொழிற்சாலையில் அசெம்பிளி லைனில் நின்று ரிவெட் அடிக்கிற வேலை காணாமல் போனது. வேறேதாவது கற்றால்தான் வேலை என்று ஆனது. இதற்கெல்லாம் STEM (அறிவியல், டெக்னாலஜி, எஞ்சினியரிங், கணிதம்) என்பதாக வளர்ச்சி கண்ட தொழில்நுட்பத்துறை காரணமாயிற்று. இந்தப் படிப்புக்கான ஆர்வம் தீப்பிடித்து எரிகிறதைப் பார்த்தோம். ஐரோப்பாவில் பக்கவாட்டுச் சிந்தனை (lateral thinking) தழைக்கிறது. அவர்கள் மாறுபட்டுச் சிந்திக்கிறார்கள்.

எனது நண்பர் ஏமி விடகர் 'Art Thinking' என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். ஒரு வெள்ளைத் தாளை ஓர் ஓவியன் பார்த்தால் அவன் மனதில் என்ன தோன்றும் என்பதை அதில் விவரித்திருப்பார். வியாபாரத்தில் பார்த்தால், ஒரு புள்ளியிலிருந்து மறுபுள்ளிக்குப் (A to B) போவதைப்பற்றிச் சிந்திக்கிறோம். அது சுற்றிவளைத்துப் போகலாம். ஆனால் ஒரு கலைஞன் A என்ற புள்ளியிலிருந்து கேள்விக்குறியை நோக்கிப் போகிறான். அவனுக்கு B தெரியாது. அவன் எதார்த்தத்தைச் சிருஷ்டிக்கிறான். அவனுக்குப் பாதை முக்கியமல்ல. சென்றடையும் இடந்தான் மிகமுக்கியம். அங்கே போய்ச்சேர அவன் அஞ்சுவதில்லை. சற்றும் கவலையின்றி அவன் இதைச் செய்கிறான். அமெரிக்க வரலாற்றில் இதைக் காணமுடியும். நம்முடைய பலங்களில் இது ஒன்று.

STEM படிப்பு ஒரு தற்காலிக மோகம்தான். சீனாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே உற்பத்தி நடக்கிறது. அதனால் எஞ்சினியர்கள் அங்கே வேலை செய்கிறார்கள். அது குறைந்த மதிப்புள்ள உற்பத்தி. ஆனால் அமெரிக்காவில் இருப்பவர்கள் இவற்றை வடிவமைக்கிறார்கள், அது உயர்ந்த சம்பளமுள்ள வேலையாக இருக்கிறது. இதைச் சீனப் பிரதமர் புரிந்துகொண்டிருக்கிறார். சீனர் இங்குள்ள பல்கலைகளுக்கு வந்து, நீங்கள் எப்படி படைப்பாற்றலைக் கற்றுக் கொடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.


அனிமேஷனுக்காக CalArts கல்லூரிக்கு வருகிறார்கள். இங்கே வந்து டிஸ்னிக்கு இணையாக Pixar என்பதை உருவாக்குகிறார்கள். அனிமேஷன் செய்வதற்கு ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தார்கள். அங்கே அவர்களுக்குக் கிடைத்தது ஒரு பெரிய கம்ப்யூட்டர் லேப் அல்ல, புத்தாக்கம் செய்வதற்கான ஊக்கமும் திறந்த மனநிலையும்தான். அது அந்தச் சூழலில் கிடைத்ததே அல்லாமல் பாடத்திட்டத்தில் அல்ல. இப்படிப்பட்ட புதிய அணுகுமுறைகள் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவும்.

ஸ்பஞ்ச்பாப் ஸ்க்வேர்பேண்ட்ஸை உருவாக்கிய ஸ்டீவன் ஹிலன்பர்க் ஒரு சோதனைமுறை அனிமேட்டர். இங்கே எல்லாமே சோதனைமுறையில் தானே தவிர, ஒற்றையடித் தடமல்ல. அதனால் இங்கே வரும் மாணவர்கள் எல்லாவற்றையுமே விமர்சனப் பார்வையோடு அணுகுகிறார்கள்.

ஒரு வாத்தியத்தை ஒருவர் வாசிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் ஒரு ஸ்வரத்தை வாசிக்கிறார். அது சரியாகப் பிடிபடும்வரை திரும்பத் திரும்ப வாசிப்பார். வாசிக்க வாசிக்க அது மேம்படலாம் அல்லது மோசமாகலாம். எதனால் அப்படி ஆகிறது என்று தெரியாவிட்டால், யாரிடமாவது போய்க் கேட்கக்கூடும். இப்படித் திரும்பத் திரும்பச் செய்வதில் கலைகளும் அறிவியலும் ஒன்றுபோலத்தான்.

ஆனால், அறிவியல் துறையில் ஏதோவொரு யூகத்தை வைத்துக்கொண்டு அதற்காக பில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம். அது நல்லதுதான். அப்படிச் செய்யாவிட்டால் புதிதாக எதையும் கண்டுபிடிக்க மாட்டோம்.

அதை இப்போது படைப்புக் கலைகளுக்கும் செய்யவேண்டும். அதில் விமர்சனப் பார்வை, பக்கவாட்டுச் சிந்தனை இரண்டையும் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் நாம் மிகப்புதிதான ஒன்றை அடைய முடியும். உதாரணத்துக்கு, ஒரு நிதி ஆலோசகர்கள் குழு இருந்தால் அவர்களது அணுகுமுறை நிதிநிலை குறித்ததாகவே இருக்கும். அதில் ஒரு கலைஞரை உள்ளே கொண்டுவந்தால் அவரது அணுகுமுறை அவர்களுக்குள் மாறுபட்ட சிந்தனையை, ஓர் இசைவை ஏற்படுத்தலாம். ஆக, இப்போது CalArts வெவ்வேறு விஷயங்களை, ஒரு வெளிநோக்கிய பார்வையோடு வெவ்வேறு விஷயங்களை செய்வதைப் பற்றி நான் பேசுவதைக் கேட்டிருக்கலாம்.

நான் இப்போது கலையை வணிகமயமாக்குவது பற்றிப் பேசவில்லை. அதன் தொழில் நிர்வாகம், ஆலோசனை தருதல் ஆகியவை குறித்துப் பேசுகிறேன். கலைஞர்கள் தொழிலகங்களின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவமுடியும். அண்மையில் NASA தனது மிஷன்களில் கலைஞர்களையும் சேர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஏன்? அங்கே சென்று அவற்றைப் படம் வரையவா? இல்லை. கலைஞர்கள் மாறுபட்டுச் சிந்திப்பவர்கள். பயோ டைவெர்சிடி என்பதுபோல இதைக் கருத்துப் பன்முகத்தன்மை என்று சொல்லலாம்.

(தொடரும்)

உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன், அபி ஆழ்வார்
தமிழில்: மீனாட்சி கணபதி

*****


STEM Vs STEAM
அதுவொரு எதிர்வினைதான். அப்படிப் பின்வினை ஆற்ற நான் விரும்பவில்லை. STEM என்பதில் Arts சேர்த்து STEAM ஆக்கிவிடலாம் என்கிறார்கள். நல்லதுதான். இதற்குப் பணம் செலவழித்தால் அதற்கும் செலவழிக்கலாம் என்கிறார்கள். அது சரியாகப் படவில்லை. ஒரு பின்யோசனையாகக் கலைஞனைச் சேர்க்கக்கூடாது. எதைச் செய்ய நினைத்தாலும் அதில் கலைஞனுக்கும் ஓரிடம் கொடுக்கும் எண்ணம் முதலில் வரவேண்டும். நான் புதிதாக எதையும் சொல்லவில்லை. அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இப்படித்தான் இருந்தது, மாறிப்போய்விட்டது, அது மீண்டும் வரவேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

- ரவி ராஜன்

*****


ஓர் இந்திய அமெரிக்கனாக எப்படி உணர்கிறேன்?

ஓர் இந்தியக் குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவனாக இருப்பது என் பணியில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கேட்டிருக்கிறீர்கள். அதையே நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லமுடியாது. ஆனால் நாம் பன்முகத்தன்மை என்று பேசினோம், இதுதானே அது. இங்கு குடிபுகுந்தவன் என்கிற முறையில் என் பார்வை மாறுபட்டிருக்கிறது. அது முக்கியம். இந்திய கலாசாரம், அமெரிக்கக் கலாசாரம் என்பவை உள்ளன. அமெரிக்கக் கலாசாரம் மிகக் கலவையானது. இங்கு கலாசாரம் மாறிவருவதாகக் கூறினால் இவர்கள் என்னை ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள். அதில் தப்பெதுவும் இல்லை. ஆனால், நான் வாழ்ந்த எதார்த்தம் மாறுபட்டது என்பதால் எனது கலாசாரம் மாறுபட்டிருக்கிறது. வீட்டுக் கலாசாரமும் வெளிப்புறக் கலாசாரமும் வேறுபட்டவை என்பதை நான் கலைகளைக் கற்றதன்மூலம் புரிந்துகொண்டேன். ஆக எனது வாழ்க்கை அனுபவத்தைக் கமலா ஹாரிஸ் போன்ற ஒருவரின் அனுபவத்துக்கு ஒப்பிட முடியும். அவருடைய அம்மா இந்தியர், அப்பா ஜமைகாவைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். அது அவர் செய்யும், பார்க்கும், தீர்மானிக்கும் ஒவ்வொன்றையும் மாறுபடுத்திக் காட்டுகிறது. இங்கேதான் பன்முகத்தன்மையை ஏற்பது முக்கியமாகிறது.

- ரவி ராஜன்

*****


சமத்துவமும் சமவிகிதப் பங்கும்
நாம் சமத்துவத்தைப் பற்றி (equality) நிறையப் பேசுகிறோம், ஆனால் சமவிகிதப் பங்கைப் பற்றி (equity) பேசுவதில்லை, சரியா? வெவ்வேறு நிலைகளிலிருந்து தொடங்குவோருக்கு ஒரே மாதிரியான வாய்ப்புகள் கிடைக்காவிட்டால், சமத்துவம் எதையும் சாதித்துவிடாது. சிலர் பிற்பட்ட நிலையிலிருந்து தொடங்குகிறார்கள் என்ற உண்மையை ஏற்றாக வேண்டும். என்னுடைய வாழ்க்கை அனுபவம் இதை என் கண்ணுக்குக் காண்பிக்கிறது.

- ரவி ராஜன்

© TamilOnline.com