சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்
குழந்தைகளே! எல்லாரும் நல்லா இருக்கீங்க தானே! நல்லது. நாம எப்பவுமே, எல்லாரையுமே மதிக்கக் கத்துக்கணும். பார்க்க சில பேரு சாதாரணமா இருக்காங்கங்கறதுக்காக நாம அவங்களை ரொம்ப சாதாரணமா நினைக்கக் கூடாது. எல்லோர்கிட்டயும் பணிவோடயும் அன்போடயும் நடந்துக்கணும் சரியா? இந்தக் கதையைக் கேளுங்க!

அது ஒரு பெரிய காடு. அங்கே இருந்த மிருகங்கள் எல்லாம் மிகவும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்தன. அடிக்கடி அங்கே ஏதாவது போட்டி நடக்கும். அதில் சிங்கம், புலி, சிறுத்தை என்று பெரிய மிருகங்கள் தனியாகக் கலந்து கொள்ளும். அது போன்று முயல், மான், காளை, எருது எல்லாம் தனியாக கலந்து கொள்ளும்.

அன்றும் அப்படித்தான் ஒரு போட்டி நடக்க இருந்தது. அது இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்லும் ஓட்டப் பந்தயம். வேகமாக ஓடும் மானும், தாவிக் குதித்து ஓடும் முயலும் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள இருந்தன. இரண்டுக்குமே மிகுந்த தலைக்கனம். தாங்கள் தான் வேகமாக ஓடக்கூடியவர்கள், மிக அழகானவர்கள், தாங்கள் தான் ஜெயிப்போம் என்று இரண்டுமே மனதுக்குள் நினைத்துக் கொண்டன.

அப்போது திடீரென்று நானும் போட்டியில் கலந்து கொள்கிறேன் என்று வந்து நின்றது தவளை. முயல், மான் இரண்டுக்கும் ஒரே எகத்தாளம். தவளையைப் பலவறாகக் கிண்டல் செய்ய ஆரம்பித்தன.

'நீயும் உன் மூஞ்சியும், என்னைப் போல வேகமாக ஓட உன்னால் முடியுமா? இது வீண் முயற்சி' என்று கூறியது முயல். மானோ, 'இதோ பார் பேசாமல் போய் விடு. உன்னாலெல்லாம் எதுவும் முடியாது' என்று அதைரியப் படுத்தியது.

தவளை 'நான் போட்டியில் கலந்து கொள்ளத் தான் போகிறேன்' என்று திட்டவட்டமாகக் கூறி விட்டது. போட்டியும் தொடங்கியது. மானும், முயலும் வேக வேகமாக ஓட ஆரம்பித்தன. தவளையும் தத்திக் குதித்து அவர்களைத் தொடர்ந்தது.

வேகமாகச் சென்று கொண்டிருந்த மானின் கொம்பு காட்டுக் கொடிகளுக்கிடையே மாட்டிக் கொண்டு விட்டது. அதனால் அங்கிருந்து விடுவித்துக் கொண்டு ஓடவே முடியவில்லை.

முயலோ வெகு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. வழியில் ஒரு பெரிய ஆறு. அது வழக்கமாக வற்றி இருக்கும். ஆனால், அன்று பார்த்து அதில் பெரு வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றில் இறங்கினால் நிச்சயம் அடித்துக் கொண்டு போய்விடும் என்பது முயலுக்குத் தெரிந்துவிட்டது. வெள்ளத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு சோகமாக உட்கார்ந்து விட்டது முயல். வெகுநேரம் அப்படியே கழிந்தது.

அப்போது அங்கே வந்து சேர்ந்தது தவளை. சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் முயலைப் பார்த்தது. ஆற்றில் பெருகி வந்து கொண்டிருக்கும் வெள்ளத்தையும் பார்த்தது. அப்போது ஆற்றில் ஒரு கட்டை மிதந்து வந்து கொண்டிருந்தது. அதன் மீது தாவியது தவளை. அதன் போக்கிலேயே போய் எதிர்க்கரைக்குத் தாவியது. போட்டியில் வெற்றியும் பெற்றது.

தவளையைப் பார்த்துக் கேலி பேசிய முயலும், மானும் போட்டியில் தோற்று வெட்கித் தலைகுனிந்தன.

என்ன குழந்தைகளே! ஆணவப் பேச்சும், அலட்சிய மனோபாவமும் என்ன நிலைக்கு ஆளாக்கும் என்பதைத் தெரிந்து கொண்டீர்கள் தானே! அடுத்த மாதம் வேறொரு கதையோடு உங்களைச் சந்திக்கிறேன். வரட்டுமா!

சுப்புத் தாத்தா

குழந்தைகளே!

ஒவ்வொரு வாரமும் புதுப்புதுக் கதையோடு சுப்புத் தாத்தா வருகிறார். நீங்களும் அதை ரசிக்கிறீர்கள்.

இந்த வாரக் கதைக்கு தலைப்புக் கொடுக்கவில்லை. ஏன் தெரியுமா?

அதை நீங்கள்தான் கொடுக்க வேண்டும்.

நீங்கள் கொடுக்கும் தலைப்பு சுவையாகவும், கற்பனை மிகுந்ததாகவும் இருக்க வேண்டும். சிறந்த தலைப்பு ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்.

நீங்கள் கொடுத்த தலைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டால் உங்களுக்கு ஒரு அழகான சான்றிதழ் அனுப்புவோம். அதுமட்டுமல்ல. உங்கள் பகுதியில் இருக்கும் தமிழ்ப் பள்ளிக்கு $10 அன்பளிப்பாக அனுப்புவோம்.

அனுப்ப வேண்டிய முகவரி: thendral@tamilonline.com மின்னஞ்சலின் subject பகுதியில் 'Ilam thendral story caption contest என்று குறிப்பிட மறக்கதீர்கள்

வெற்றி பெற வாழ்த்துகள்!

© TamilOnline.com