தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது
2016ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதை பேராசிரியர் க. பூரணச்சந்திரன் பெறுகிறார். மனு ஜோசப் ஆங்கிலத்தில் எழுதிய Serious Men என்னும் புகழ்பெற்ற நாவலை 'பொறுப்புமிக்க மனிதர்கள்' என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்ததற்காக இவ்விருது வழங்கப்படுகிறது. எதிர் வெளியீடு இந்நூலை வெளியிட்டுள்ளது. 50,000 ரூபாயும் செப்புப் பட்டயமும் இவ்விருதில்அடங்கும். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற பூரணசந்திரன், மாணவர்களுக்காக பல நூல்களைத் தந்தவர். வேலூர் ஊரிசுக் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றவர். ஜெர்மன், வடமொழி, பிராகிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை மிக்கவர். திறனாய்வு மற்றும் இலக்கியக் கொள்கைகளை விளக்கிப் பல நூல்களை எழுதியுள்ளார். கோட்பாடு சார்ந்து பல இலக்கிய இதழ்களில் முக்கியமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதழியல் துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார். 'தமிழிலக்கிய திறனாய்வு வரலாறு', 'அமைப்பியமும் பின்னமைப்பியமும்', 'தமிழ் இலக்கியத்தில் மேற்கத்திய கொள்கைகளின் தாக்கம்', 'இந்திய மொழிகள் ஓர் அறிமுகம்', 'இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள்', 'பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம்' போன்ற இவரது நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.



© TamilOnline.com