மணவை முஸ்தபா
தனித்தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, அறிவியல் தமிழுக்காக பல கலைச்சொற்களை உருவாக்கி அளித்த மணவை முஸ்தபா (82) சென்னையில் காலமானார். 1935ம் ஜூன் 15 அன்று பிறந்த இவர், இளவயதிலேயே தமிழார்வம் கொண்டு விளங்கினார். யுனெஸ்கோ கூரியர் இதழின் ஆசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றினார். பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின் தமிழ்ப் பதிப்பாசிரியராகச் சிலகாலம் இருந்தார். சிறுவர் இலக்கிய வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு பல நூல்களை எழுதியிருக்கிறார். 'இன்றைய தென்னக இலக்கியப் போக்கு', 'இளையர் அறிவியல் களஞ்சியம்', 'அன்றாட வாழ்வில் அழகுதமிழ்', 'அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி', 'செம்மொழி உள்ளும் புறமும்', 'தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்' போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. 'இளைஞர் இஸ்லாமிய கலைக்களஞ்சியம்', 'இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?', 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்', 'தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்', 'சிந்தைக்கினிய சீறா', 'தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்' போன்ற சமயம் சார்ந்த நூல்களும் முக்கியமானவை. இவரது நூல்கள் பலவற்றுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்துள்ளது. 'அறிவியல் தமிழ் அறக்கட்டளை' என்னும் அமைப்பின் மூலம் பல நற்பணிகளை ஆற்றியுள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களும், விருதுகளும் பெற்றவர். புகழ்பெற்ற பல அமைப்புகளில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். இவரது நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.



© TamilOnline.com