ஏ,ஜி. எதிராஜுலு
முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும், மொழிபெயர்ப்பாளருமான ஏ.ஜி. எதிராஜுலு (83) ஆந்திர மாநிலம் சித்தூரில் காலமானார். இவர் 1934ல் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிறந்தவர். ஆந்திரத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். கம்யூனிஸ்ட் இயக்கத்தவருடன் தொடர்பு ஏற்பட்டது. தமிழ், தெலுங்கு, உருது, ஹிந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளை அறிந்திருந்த இவர், ஹிந்தியிலிருந்து தமிழுக்கும், தெலுங்கிலிருந்து தமிழுக்கும் பல முற்போக்கு இலக்கிய நூல்களை மொழியாக்கம் செய்தார். ராகுல சாங்கிருத்யாயன் தமிழில் பரவலாக அறிமுகமாவதற்கு இவரது மொழிபெயர்ப்பே காரணம். சோவியத் ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்க இலக்கியங்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். தமிழிலிருந்து தெலுங்கிற்கும் கு. சின்னப்பபாரதி உள்ளிட்ட பலரது நூல்களைக் கொண்டு சென்றிருக்கிறார். அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 'பொது உடைமைதான் என்ன?' 'ஊர்சுற்றி புராணம்', 'ஏழு தலைமுறைகள்' போன்ற நூல்கள் இன்றளவும் முற்போக்கு இயக்கத்தினரால் விரும்பி வாசிக்கப்படுபவை. எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் தன் படைப்புகளையே முன்னிறுத்தி வாழ்ந்தவர் இவர்.



© TamilOnline.com