மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: முடியும்... ஆனா முடியாது!
சூதாட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறைகளைச் சொன்னோம். அதாவது, சூது சமமானவர்களுக்கிடையில்தான் நடைபெற வேண்டும்; அரசனும் அடிமையும் சூதாடினால், அதைப் பொழுதுபோக்காக வேண்டுமானால் கொள்ளலாமே ஒழிய, பணயம் வைத்து ஆடக்கூடாது; சூதிலே வைக்கப்படும் பொருள், ஆடுபவனின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வைக்கப்படவேண்டும். 'இன்ன பொருளை வை' என்று வற்புறுத்தியோ ஆசைகாட்டியோ கேட்டு, அதனடிப்படையில் வைக்கக்கூடாது. இவற்றையெல்லாம் பார்த்தோம். அதுமட்டுமல்ல, சூதிலே பணயம் வைக்கவும் விதிமுறைகள் உண்டு. ஒவ்வொரு முறையும் 'இந்தப் பொருள் என்னுடையது; எனக்குரியது. இதை நான் ஆட்டத்தில் வைக்கிறேன்' என்று அறிவித்துவிட்டே வைக்க வேண்டும். வைக்கின்ற பொருள் இன்னின்ன பெருமைகளைக் கொண்டது, உயர்வானது என்பதையும் சொல்லவேண்டும். தருமபுத்திரன் இதை நெடுகிலும், ஒவ்வொரு முறையும் கடைப்பிடிப்பதைக் காண்கிறோம். எல்லாவற்றையும் இழந்து, பசுக் கூட்டங்களையும் பிறவற்றையும் வைக்கும்போது, "சகுனியே! பசுக்கள் நிரம்பின மந்தைகளும் குதிரைக் கூட்டமும் எண்ணிறந்த வெள்ளாடுகளும் செம்மறியாடுகளின் கூட்டமும் ஸிந்து நதிக்குக் கிழக்கே பர்ணாசியென்னும் நதியின் கரையில் இருக்கின்றன. அவையெல்லாம் என்னுடைய தனங்கள். அதனால் உன்னுடன் ஆடுவேன்' என்று சொன்னார்" (ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 88, பக்: 277).

இவற்றை இழந்தபின்னர், நகரமும் தேசமும் பூமியனைத்தும் சிலவகை தனங்களும், சிலவகை மனிதர்களும்தாம் தனக்கு மிச்சமுள்ள பொருள்கள் என்றும், இதனால் நான் உன்னுடன் ஆடுவேன் என்பதாகவும் சொல்லியே தருமன் நாட்டை ஆட்டத்தில் வைக்கிறான். இவற்றையும் சகுனி ‘மோசத்தைக் கடைப்பிடித்து' தான் வெல்கிறான். இங்கேதான் பாரதிக்குக் கோபம் பொங்குகிறது. "நாட்டு மாந்தரெல்லாம், தம்போல் நரர்களென்று கருதார்; ஆட்டுமந்தையா மென்று (உ)லகை அரசரெண்ணி விட்டார்" என்று சுட்டெரிக்கிறான். மக்களை ஆட்டத்தில் வைப்பதுபற்றி அவனுக்குக் கோபமாக இருக்கலாம். ஆனால் மக்களைப் பொருத்தவரையிலே தருமன் தோற்பதால் அவர்கள் அடிமைகளாகவில்லை; அவர்களை ஆள்பவர்கள்தாம் மாறுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதன் பிறகு தம்பியர் அணிந்திருக்கும் ஆபரணங்களை வைக்கிறார். "ராஜனே! இந்த ராஜகுமாரர்கள் எவற்றினால் அலங்கரிக்கப்பட்டு விளங்குகின்றனரோ இந்தக் குண்டலங்கள் கண்டிகைகள் முதலான ராஜ ஆபரணங்கள் அனைத்தும் எனது தனம். அரசனே! இவைகளால் நான் உன்னோடு ஆடுவேன் என்று சொன்னார்" (மேற்படி). இவற்றையும் சகுனி 'மோசத்தைக் கடைப்பிடித்து' வென்றதாக வியாசர் தவறாமல் குறிப்பிடுகிறார்.

இனி, தம்பியரைச் சூதிலே வைக்கின்ற கட்டம். இங்கிருந்து, நமக்குக் கிடைக்கின்ற அனைத்துக் குறிப்புகளும் மூலத்தோடு வேறுபடுகின்றன. ஒவ்வொரு பொருளையும் ஆட்டத்தில் வைக்கின்றபோதும் 'இது எனக்குச் சொந்தமான, எனக்குரிய பொருள்' என்று சொல்லித்தானே தருமன் பந்தயம் வைக்கிறான்? அப்படியானால், தம்பியரை வைக்கும்போதும் இப்படிச் சொல்ல வேண்டுமல்லவா? ஒவ்வொரு தம்பியை வைக்கும்போதும் இப்படிச் சொல்ல வேண்டும். அதுதானே முறை? இந்தக் கட்டம் வரையில் வியாசரை வரிக்கு வரி ஒட்டி நடந்த பாரதி, வில்லிக்குக் கட்சி மாறிவிடுகிறான்! 'இன்ன பொருளை ஆட்டத்தில் வை' என்று வற்புறுத்தியோ ஆசைகாட்டியோ கேட்கக்கூடாது என்பது விதிமுறையாக இருக்க (இங்கே ஒன்று சொல்லிவிடுகிறேன். இவையெல்லாம் வியாச பாரதத்தில் மிகப் பரவலாகவும் ஆங்காங்கேயும் காணப்படும் குறிப்புகள். இவற்றைத் திரட்டியெடுத்து இங்கே வைத்திருக்கிறேன். இந்த 'விதிமுறைகள்' எனப்படுபவனவற்றை நாம் உய்த்துணரத்தான் முடிகிறது. இதையும் போதிய அனுமான ஆதாரங்களை வைத்துத்தான் செய்திருக்கிறேன்.) வில்லி பாரதத்தில், 'தம்பியரையும் தன்னையும் சேர்த்து ஆட்டத்தில் வைக்கச் சொல்லுங்கள்' என்று சகுனிக்கு துரியோதனன் சொல்லி, அதன் பின்னர் சகுனி அவ்வாறு செய்யச் சொல்கிறான். "யாவையும் கொடுத்திருப்ப இளைஞரோம் எய்த்த அக்கோவையும் குறிக்க என்று குருகுலேசன் மொழியவே'—என்று துரியோதனன் சொல்லவே, "உன்னையும் குறித்து வன்புரைத்த தம்பிமாரினம் தன்னையும் குறித்திசைத்துத் தருக; வந்து பொருக" என்று சகுனி அழைப்பதாக வில்லி பேசுகிறார். வில்லி பாரதத்தின்படி ஐவரும் ஒரே ஆட்டத்திலே அடிமைகள் ஆகிவிடுகின்றனர். ஒவ்வொருவரும் தனித்தனியாக வைக்கப்படவில்லை. ஒரு பாட்டில், இரண்டே அடிகளில் பஞ்ச பாண்டவரும் அடிமைகள் ஆகிவிடுகின்றனர்.

அப்படியானால், தம்பியரை வைத்தாடும்படி துரியோதனனும் சகுனியும் கேட்டுதான் தருமன் வைத்திருக்கிறான்; ஆகவே, 'இது எனக்கு உரிமையானது, சொந்தமானது' என்று சொல்லவில்லை' என்று நினைக்கத் தோன்றும். வியாசருடைய முறைப்படி ஐவரையும் தனித்தனி ஆட்டத்தில் அடிமைகளாக ஆக்குவதை எடுத்துக் கொண்ட பாரதி, வில்லிபுத்தூரரை ஒட்டி, ஒவ்வொருவரையும் சகுனி பந்தயமாக வைக்கச் சொல்வதாகத் தன் காப்பியத்தை நடத்துகிறான். வியாசரில் காணப்படுகின்ற 'இது எனக்குச் சொந்தமான பொருள்' என்ற வெளிப்படையான பிரகடனத்தை வில்லியிலும் பாரதியிலும் காணமுடியவில்லை. இதைக் கவிஞர்களுடைய மனோதர்மம் என்று விட்டுவிடலாம். இந்தப் பிரகடனத்தை ஒவ்வொரு முறையும் சொல்வது நாடகப் போக்குக்கு இடையூறாக இருக்கிறது என்று கவிஞர்கள் கருதியிருக்கலாம். ஆகவே இதைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். ஆனால் மூலம் ஒவ்வொரு முறையும் இதைத் தவறாமல் சொல்கிறது. வில்லியும் பாரதியும் சொல்வதைப் போலல்லாமல், தருமன் தம்பியரையும் தன்னையும் ஆட்டத்தில் வைத்திழந்தது தன் சொந்த விருப்பந்தான் என்று சொல்ல முடியுமா? முடியும்; ஆனால் முடியாது! இதற்கு அப்புறமாக வருகிறேன். 'இது எனக்கு உரியது' என்று சொல்லித்தான் ஒவ்வொன்றையும் ஆட்டத்தில் வைத்தான் என்றால் தம்பியரை வைக்கும்போது தருமன், 'இவர்கள் என்னுடைய பொருட்கள்' என்றோ 'எனக்குக் கட்டுப்பட்டவர்கள், உரிமையானவர்கள்' என்றோ மூலத்திலும் சொல்லியிருக்க வேண்டுமல்லவா? இங்கேதான் சூதின் போக்கில் சிக்கல்கள் தொடங்குகின்றன.

தம்பியரை வைத்தாடு என்று சகுனி சொல்லாமலேயே நகுலனை வைக்கும்போது தருமன், "கறுத்தவனும் இளம் வயதிலிருப்பவனும் சிவந்த கண்களும் சிம்மம் போன்ற தோள்களும் நீண்ட கைகளும் உள்ளவனுமாகிய நகுலன் ஒருவனே எனக்குப் பந்தயம். இவன் எனது தனம் என்றறி" என்று சொல்வதாகத் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கிறது. 'இவன் எனது தனம் என்றறி'. அதாவது நகுலனைத் தன்னுடைய 'பொருள்' என்று தருமன் அறிவிக்கிறான். இப்படித் தருமன் அறிவித்திருப்பது நகுலன் ஒருவனை மட்டுமே. அதைத் தொடர்ந்து சகதேவனை வைக்கின்றபோது, "இந்தச் சகதேவன் தர்மங்களை உபதேசிப்பவன். இவ்வுலகத்தில் பண்டிதனென்று பெயர்பெற்றவன். என் அன்பனாகிய இந்த ராஜகுமாரன் பந்தயத்துக்குத் தகாதவனானாலும் இவனை வேண்டாதவனைப் போல பந்தயம் வைத்தாடுகிறேன்" என்று பேசுகிறானே தவிர, "இவன் என் பொருள், தனம்' என்ற அறிவிப்பு இங்கே இல்லை.

இதன் பிறகுதான் சிக்கலின் முடிச்சு மேலும் இறுகுகிறது. பீமனையும் அர்ஜுனனையும் தருமன் சுயவிருப்பத்தின் பேரில் மட்டும்தான் வைத்தானா அல்லது வைக்குமாறு தூண்டப்பட்டானா? தன் பொருள் என்று நகுலனை அறிவித்து, சகதேவனை அறிவிக்காதபோது, பீமனையும் அர்ஜுனனையும் தருமன் எவ்வாறு குறித்தான்? இவற்றையும் தருமன் தன்னை இழந்ததையும் அதன் பின்னர் பாஞ்சாலியை வைக்க நேர்ந்தது எப்படி என்பதையும் படிப்படியாகப் பார்ப்போம். அதுவும் பாஞ்சாலியை வைக்கும்போது தருமன் அடிமையாகிவிட்டான். ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையில் சூது நடந்தால் அதற்கான விதிமுறை என்னவென்பதையும் பார்த்திருக்கிறோம். இந்தச் சூழலில், பாஞ்சாலியை வைத்தாடியது செல்லுமா? செல்லாதென்றால் வைத்தது எப்படி? இதைச் சபையில் அனைவரும் ஏற்றார்களா? துரியோதனனின் தம்பியரில் அனைவருமே இதனை ஏற்றார்களா? பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com