பரிதாபப்படு, அது அன்பாக மாறும்....
அன்புள்ள சிநேகிதியே

[போன இதழில் மாமியார் மருமகள் இடையே ஏற்படும் இடைவெளி, எத்தனை வருடங்கள் ஆனாலும் (ஏதோ ஆரம்ப காலத்தில் சொன்ன சொற்களோ அல்லது நடத்தையோ மனதைப் புண்படுத்தியிருக்கும்) தொடர்கிறது என்பதைப்பற்றி இந்த இதழில் என் கருத்துக்களைத் தெரிவிப்பதாகச் சொல்லியிருந்தேன் ஆகவே இங்கே கேள்விக் கடிதம் இடம்பெறவில்லை]

தன் மகன் வீட்டைவிட்டு வெளிநாட்டிலோ, வெகுதூரத்திலோ படிப்பிற்காக, பதவிக்காகச் சென்ற பின்னும் பாசத்தைக் காட்டுகிறான் என்ற உணர்விலே, அவன் "தன்னுடைய வரம்பிற்குள்தான் இருக்கிறான்" என்ற நினைப்பு பல தாய்மார்களுக்கு உண்டு. "தன் சொல்மீறி நடக்கமாட்டான். தன்னை வருத்தப்பட வைக்கமாட்டான்" என்று ஆணித்தரமாக நினைப்பவர்களுக்கு அதிர்ச்சியாகப் போய்விடுகிறது அவனுடைய காதல் விவகாரம். உடல்ரீதியாக அவனை வாட்டசாட்டமாய் வளர்ப்பதில் பெருமை கொள்கிறோம். உயர்கல்விக்காக உலகம் சுற்றிவருவதைக் கண்டு பூரித்துப் போகிறோம். வெளியுலக அனுபவங்களால் அவன் தனக்கென ஒரு தனித்துவத்தையும், தனி வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ள ஆசைப்படும்போது, நம்மால் முடிந்தவரை எதிர்க்கிறோம். அதிர்ச்சி அடைகிறோம். ஏமாற்றப்பட்டது போல் உணர்கிறோம். வேதனை, வெறுப்பாக மாறுகிறது. எனக்குத் தெரிந்த நான்கைந்து உதாரணங்களைச் சொல்கிறேன்.

"எங்கள் கௌரவம் என்ன, வசதி என்ன? நன்றாக மயக்கியிருக்கிறாள் என் பையனை!" என்று ஒரு மாமியார் ஆரம்பகாலத்தில் சொன்னதை வைத்துக்கொண்டு, அந்தப் பையனுக்குத் திருமணம் ஆகி அவனுக்குக் குழந்தை பிறந்த பின்பும், அந்த மாமியாரை ஒதுக்கி வைத்திருக்கிறாள் ஒரு மருமகள். ஒரு வார்த்தை பேசுவதில்லை. ஏ.சி., டி.வி. எல்லா வசதியுடனும் ஓர் அறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் அந்த மாமியார்.

திருமணமான ஆரம்பகாலத்தில் மருமகள், தன் மகனை மிகக் கேவலமாகப் பேசி, தன் குடும்பத்தைப் பற்றியும் இழிவாகத் தன் எதிரிலேயே பேசியதால் மனம்நொந்த மாமியார் 'பிரிந்துவிடு' என்று பையனிடம் சொல்லிவிட்டார். ஆனால், அவர்கள் பிரியவில்லை. இரண்டு குழந்தைகள் பிறந்து, வளர்ந்து நன்கு படித்து முன்னேறியிருக்கிறார்கள். ஆனால், அந்த மாமியார் வீட்டுக்கு வந்தால் மருமகள் பேசமாட்டாள். "தண்ணீர் வேண்டுமா?" என்று கேட்கமாட்டாள். 25 வருடமாக இதே கதைதான்.

"உன் மனைவிக்கு ஏன் dress sense இல்லை. இந்தியா வரும்போதுகூட முக்கால் பேண்ட் போட்டுக்கொண்டு கிராமத்திற்கு வருகிறாளே!" என்று கேட்டுவிட்டாள் ஒருதாய் தன் மகனிடம். அவ்வளவுதான், இந்தியா வந்தாலும் மாமியார் வீட்டிற்கு வருவதில்லை. வருவதைத் தெரிவிப்பதும் இல்லை. அவர்கள் வந்துவிட்டுப் போனதை மற்ற உறவினர்மூலம் தெரிந்துகொண்டு வேதனைப்படுகிறார். பேரனுக்கு ஏழு வயது; பேத்திக்கு 3. பார்க்க ஆசைப்படுகிறாள். அவனைச் சின்ன வயதில் 'அப்படி வளர்த்தேனே, இப்படி வளர்த்தேனே' என்று மாய்ந்துபோகிறார். 'போன் செய்தால்கூடப் பேசமாட்டேன் என்கிறானே. மருந்து வைத்து விட்டாளோ, என்னவோ!' என்று மருமகளை இன்னும் வெறுத்துப் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

இன்னொரு குடும்பத்தில், மகன் மேற்படிப்பிற்குச் சென்ற இடத்தில் ஒரு யூதப் பெண்ணை விரும்பித் திருமணம் செய்து கொண்டதில் மனமுடைந்த அம்மா, இந்தியாவிற்குத் திரும்பி வந்து வாராவாரம் விரதம் எடுத்துக் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறார். அவன், அவளை விவாகரத்து செய்துவிட்டு, தான் பார்த்துவைக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமாம். ஐந்து வருடம் ஆகிறது. அவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண். ஆனால், அந்த அம்மாளின் வேண்டுதல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பையன் ஆசாரமான குடும்பம். மருமகள் அசைவம். வேதனையிலும் அழுகையிலும் தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில நாட்கள் தங்கியபோது, மாமியார், மருமகளிடம் இந்த வீட்டு விதிமுறைப் படிதான் நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். மருமகளுக்குப் பிடிக்கவில்லை அந்த மாமியார் சொன்ன விதம். இப்போது மாமியார் இங்கே பிள்ளையின் வீட்டிற்கு வந்திருக்கிறார். மீனும், கறியும் சமைத்துக் கொண்டிருக்கிறாள் மருமகள். கேட்டால், இது என் வீடு. என் விதிமுறைப்படிதான் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டாள் மருமகள்.

நான் எடுத்துக்காட்டிய பிரச்சனைகள் எல்லாம் கலாசார அதிர்ச்சிக்குத் தயார்செய்து கொள்ளாத மாமியார்களையும், அறிவுத்திறன் இருந்தாலும், மனமுதிர்ச்சி அடையாத, அன்பைக் காட்டத் தெரியாத மருமகள்களையும் பற்றியது; பெரும்பாலும் இந்தியத் தாய்மார்களின் நெறிமுறைக்கும் அமெரிக்காவில் இருக்கும் இளைய தலைமுறையினரின் வாழ்முறைக்கும் ஏற்பட்டிருக்கும் இடைவெளி பற்றியது.

'தன்னுடைய சமூகத்திலும், கலாசாரத்திலுமே ஊறிப்போய், தங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, மகன் தன்னைத் தேர்ந்தெடுத்து விட்டான். ஏதோ ஆத்திரத்தில் சொல்லிவிட்டாள் அந்தத் தாய்' என்று அந்த மருமகள், மாமியார் சொன்ன வார்த்தைகளை உதறித் தள்ளிவிட்டு, சகஜமாக இருக்கப் பார்த்திருக்கலாம்.

"தன்னுடைய மகன் சந்தோஷமாக இருக்கிறான். அவர்கள் நன்றாக இருக்கட்டும். இனி என் பிள்ளை அவளுக்குத்தான் சொந்தம். அவனை வளர்த்து ஆளாக்கி, பெருமையாகப் பார்த்துவிட்டேன். இனிமேல் அவனை ஒரு பொறுப்புள்ள கணவனாக, தந்தையாக இருப்பதை அவள் பார்த்துப் பெருமைப் படட்டும்" என்ற முதிர்ச்சி அந்த மாமியாருக்கு இருந்திருந்தாலும் பிரச்சனை வந்திருக்காது.

பல வருடங்கள் ஆனாலும், முதலில் ஏற்பட்ட கசப்பை வைத்து ஒவ்வொரு முறையும் இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டு, உறவின் அருமையைப் புரிந்துகொள்ள முடியாத மருமகள்களுக்கும், மாமியார்களுக்கும் எனது வேண்டுகோள்.

மருமகளே நீஅருமையானவள். அறிவில் சிறந்தும் இருக்கிறாய். உன் குடும்பத்தை - உன் காதல் கணவனையும் குழந்தைகளையும் - பொறுப்பாகப் பார்த்துக் கொள்கிறாய். உன் வாழ்க்கை வளம்பெறப் பாடுபடுகிறாய். இதோ சிறிய வீட்டைவிட்டுப் பெரிய வீட்டிற்குச் செல்ல இருக்கிறாய். எல்லாம் புதிதாக இருக்க வேண்டும் என்று பழையதெல்லாம் கழிக்கிறாய். உன் மனதுக்குப் பிடித்த நீ விரும்பும் பொருட்கள் மட்டும் அந்தப் புதிய வீட்டில் இருக்கின்றன. அதேபோல உன் சிந்தனையும் இருக்கட்டும். பல வருடங்களாகப் போற்றிப் போற்றி ஏன் கசப்பையும், வெறுப்பையும் பாதுகாக்கிறாய்? நல்ல நினைவுகள் மட்டும் உன்னிடம் தங்கட்டும். உன் கணவரைப் பெற்றவரை இனிப் பார்க்கும்போது, உனக்குள் பாசம் பொங்க முடியாவிட்டால் அதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், அன்பு, அக்கறை என்ற கண்ணோட்டத்தில் பார். அவர் அதிகாரத்துடன் பேசலாம்; அகங்காரத்துடன் பேசலாம்; ஆதிக்கம் செலுத்திப் பேசலாம். வயதாகியும், முதிர்ச்சி இல்லாதவர் என்று நினைத்துக்கொள். அப்போது மனதில் கோபம் வராது. "நான் என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதைப் போல என் கணவரை இந்தத் தாய் பார்த்துக் கொண்டு, எனக்குச் சொந்தமாக்கி விட்டிருக்கிறார்" என்று நினைத்துக்கொள். பாசத்துக்கு ஏங்குகிறாள். பரிதாபப்படு. அது அன்பாக மாறும். இன்னும் உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் இருக்கும் நெருக்கம் பெருகும். இது என்னுடைய அனுபவம்.

மாமியாருக்கு என் அன்பான வேண்டுகோள். உங்கள் மனதால்கூட உங்கள் மருமகளுக்குக் கெடுதல் நினைக்காதீர்கள். உங்கள் மகனின் வாழ்க்கையே, மகிழ்ச்சியே அவளிடம் பொறுப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் உறவுக்குப் பசையாக இருங்கள். அவர்களுடைய உலகத்தில் உங்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என்றால், அந்தக் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். நீங்கள் சுதந்திரம் என்று நினைப்பதே அவர்களுடன் ஒத்துப்போகும் நிலைமைதான். அப்போது இடைவெளி குறுகும். அன்னியம் விலகும். உங்கள் உரிமை வளரும். "இது என்னுடைய மகனின் வாழ்க்கை. அவன் மகிழ்ச்சி, நான் விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது" என்று நினைத்தாலே உங்கள் கண்ணோட்டம் மாறும். பாசம் என்பது விட்டுக் கொடுப்பதில்தான். இல்லாவிட்டால் அது சுயநலம். மறுமுறை, உங்கள் மகன்/மருமகளைப் பார்க்கும்போது, நினைத்துக் கொள்ளுங்கள். "இந்தப் பெண் இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவள். என்னுடைய கலாசார வட்டத்தில் வரமாட்டாள். வந்தால் நல்லது. இல்லாவிட்டால் என் அணுகுமுறையை நான் மாற்றிக் கொள்கிறேன். என்னுடன் நெருங்கி வருவாள்" என்று சொல்லிக்கொண்டே இருங்கள், மனதில்.

கணவர்களுக்கு/பிள்ளைகளுக்கு உங்களுக்கு எந்த வேண்டுகோளும் இல்லை. நீங்கள்தான் மாட்டிக்கொண்டு விழிக்கிறீர்களே :-)

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com