குறள் இளவரசி சீதா ராமசாமி
12ம் வகுப்புப் படிக்கும் சீதா ராமசாமி சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 10வது ஆண்டுத் திருக்குறள் போட்டியில் பங்கேற்று, 1330 குறட்பாக்களையும் 3 மணி 45 நிமிடநேரத்தில் கூறிச் சாதனை படைத்தார். போட்டியின் நிறைவில், சீதாவைப் பாராட்டி 'குறள் இளவரசி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

அறக்கட்டளை இயக்குனர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சீதாவை வாழ்த்திப் பேசினார்கள். தமிழ்மணி பேசுகையில் சீதாவின் தமிழாசிரியருள் ஒருவரான தனக்கு, இந்தச் சாதனை நிகழ்விலும் நடுவராகக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். குழந்தைப் பருவம் முதலாகவே பார்த்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் அவருக்கு தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது என்று தீபா குறிப்பிட்டார். சீதா ஒவ்வோர் ஆண்டும் ஒப்பிக்கும் குறள்களின் எண்ணிக்கையைக் கூட்டியதோடு, அனைத்துக் குறளையும் பொருள் புரிந்தே படித்து வந்துள்ளார் என்றார் பழநிசாமி. ஜெய்சங்கர் பேசும்போது, 12ம் வகுப்பு மாணவிக்குப் படிப்புச்சுமை, அடுத்துக் கல்லூரிக்குத் தயாராக வேண்டிய பணிகளும் நிறைய உள்ளன. அவற்றோடு திருக்குறளையும் படித்தது பாராட்டவேண்டிய ஒன்றாகும் என்றார். அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சிக்குச் சீதாவின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று சித்ரா மகேஷ் கூறினார்.

வேலு ராமன் பேசுகையில், பத்தாவது ஆண்டின் திருக்குறள் போட்டிக்கு மகுடமாக சீதாவின் சாதனை அமைந்துள்ளது என்றார். அமெரிக்காவில் பிறந்த சீதா, ப்ளேனோ தமிழ்ப்பள்ளியில் படித்து, 1330 குறள்களையும் சொல்லி தமிழ்க் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் என்று விசாலாட்சி ராமன் கூறினார்.

2012ம் ஆண்டு போட்டியில் முதன்முறையாகச் சீதா 155 குறள்கள் சொன்னார். அவற்றின் பொருளைத் தனது சொந்த நடையிலேயே கூறி ஆச்சரியப்படுத்தினார். 2013ல் 320, 2014ல் 505 என்று தொடர்ந்தவர், 2015ம் ஆண்டு கொன்றை வேந்தன் மூதுரை எனப் பரிமளித்தார். 2016ல் 778 பாக்கள் கூறிய அவர் இந்த ஆண்டில் முப்பால் முழுமையும் சொல்லிப் பெருமைபெற்றார்.

இந்த ஆண்டு பள்ளியில் மிக அதிகமான சுமை இருப்பதால், கல்லூரி சென்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் கூறினோம். சீதாவோ, பள்ளி மாணவியாகவே சாதனை படைக்க விரும்பினார். அனைவருடைய நல்லாசியுடன் அதைச் சாதித்துவிட்டார் என்று தாயார் சாந்தி மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

சீதா 11 ஆண்டுகளாகக் கர்நாடக சங்கீதம் கற்றுவருகிறார். ப்ளேனோ கிழக்கு உயர்நிலைப் பள்ளி ஆர்க்கெஸ்ட்ராவில் வயலின் வாசிக்கிறார். குழந்தைகளுக்கு இசை கற்பிப்பதென்றால் சீதாவுக்கு மிகவும் விருப்பம். பல தன்னார்வ அமைப்புகளில் சேவை செய்துவருகிறார்.

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றிலும் பங்கேற்ற சீதா தனது ஏற்புரையில், அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்தபிறகும் தமிழ்ப் பயணத்தைத் தொடரவிருப்பதாகக் கூறினார். ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரத்தைத் தமிழ் வாசிக்க, எழுத, பேச பயில்வதற்குச் செலவிடப் போவதாகவும் தெரிவித்தார்.

குறள் இளவரசிக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்!

தகவல்: தினகர்,
டாலஸ், டெக்சஸ்.

© TamilOnline.com