ஜீவகரிகாலன்
பணம் சம்பாதிக்க யாருக்குத்தான் ஆசை இல்லை! ஜீவகரிகாலனுக்கும் அவரது நண்பர்களுக்கும் அந்த ஆசை வந்தது. பதிப்பகம் நடத்தினால் நிறையச் சம்பாதிக்கலாம் என்றெண்ணி அதில் இறங்கினார்கள். எல்லாருமே வேறு வேறு தொழில் செய்பவர்கள். பதிப்பகச் சூழலோ, அதன் பிரச்சனைகளோ அவர்களுக்குத் தெரியாது. இப்படித்தான் சில ஆண்டுகள் முன் 'யாவரும் பதிப்பகம்' உருவானது. ம்ம்ம்... பணம் சம்பாதிக்கும் நோக்கம் இன்றுவரை நிறைவேறவில்லைதான்! ஆனால், நல்ல புத்தகங்களை வெளியிடும் பதிப்பகம் என்ற பெயர் கிடைத்திருக்கிறது. 21 நூல்களை கடந்த மூன்றாண்டுகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். வெகுஜன இதழ்கள் கிட்டத்தட்டச் சிறுகதைகளைப் புறக்கணிக்கும் இந்தக் காலகட்டத்தில், தொடர்ந்து சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறது 'யாவரும்'. பதிப்பக நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் ஜீவகரிகாலன் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், வரலாற்றாய்வாளர், ஓவியம்/சிற்ப ஆர்வலர் எனப் பல திக்குகளில் ஈடுபாடுள்ளவர். தனியார் கார்கோ நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர், பாரம்பரியமான 'கணையாழி' இதழின் துணையாசிரியரும் கூட. 'ட்ரங்குப் பெட்டிக் கதைகள்' என்ற தனது முதல் சிறுகதைத் தொகுப்பைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அவரோடு பேசலாம் வாருங்கள்...

யாவரும் பதிப்பகத்தின் ஆரம்ப காலகட்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றதும் புன்னகைக்கிறார். "2011ன் இறுதியில் தொடங்கிய 'யாவரும்' அமைப்பு, ஆரம்பத்தில் இணைய இதழாகவும் நூல்களுக்கு அறிமுகக் கூட்டம், விமர்சனக் கூட்டம் நடத்தியும் வந்தது. எழுத்தார்வமுள்ள இளைஞர்கள் பலர் இதில் ஒன்றிணைந்தனர். கவிஞர் ஐயப்பமாதவன் எங்களுக்கு வழிகாட்டினார். புதிய எழுத்தாளர்கள், முதல் தொகுப்பு என இவற்றில் கவனம் செலுத்தினோம். நாமே ஒரு பதிப்பகம் துவங்கினால், அதில் வரும் பணத்தைக் கொண்டு தொடர்ந்து கூட்டங்கள் நடத்தலாம் என்று கணக்குப் போட்டோம். இடர்கள், எதிரிகள், அரசியலைச் சந்திப்போம் என்றெல்லாம் நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. புத்தக வெளியீட்டிலேயே எங்களது முழுக்கவனமும் இருந்தது. அப்படித்தான் 'யாவரும் பதிப்பகம்' ஆரம்பித்தது" என்கிறார்.



முதல்நூலைப் பற்றிக் கேட்கிறோம். "ஏழுபேர் சேர்ந்து தொடங்கினோம். எழுவருக்குமே எழுத்தாளர் வா. மணிகண்டனின் சிறுகதைகளைக் கொண்டுவருவதுதான் திட்டமாக இருந்தது. அவரது இருபத்தைந்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து 'லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன்' என்ற தொகுப்பைக் கொண்டுவந்தோம். அது வெளியான 2014ம் ஆண்டில் சென்னைப் புத்தகக் கண்காட்சியிலேயே கிட்டதட்ட 1000 பிரதிகள் விற்றன. இன்றுவரை எங்கள் பதிப்பகத்தின் சிறந்த விற்பனை இதுதான். இப்போது நான்காம் பதிப்பில் இருக்கிறது. நிறையப் புதியவர்கள் இந்த நூலின் வாயிலாக இலக்கியம் வாசிக்க வந்திருக்கிறார்கள். பதிப்பகத்தை இத்தனை இக்கட்டான சூழலிலும் நடத்தக் காரணம் அந்த வெற்றிதான். இதற்கு முன்னால் உயிர்மை, காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் வாயிலாக நூல்களைப் பதிப்பித்திருந்த வா. மணிகண்டனை வேறு சில பதிப்பகங்கள் அழைத்தும், இளைஞர்கள், புதியவர்கள் என்ற காரணத்தால் எங்களுக்கு வாய்ப்பளித்தார். இன்று நல்ல நண்பராக அவருடன் சேர்ந்து சில இலக்குகளை நோக்கிப் பயணித்து வருகிறோம்" என்கிறார் நன்றியுடன்.

"தற்காலத்தில் வெகுஜன இதழ்களிலேயே சிறுகதைகள் அதிகம் வெளிவருவதில்லை. ஆனால், நீங்களோ சிறுகதைத் தொகுப்புகளை அதிகம் கொண்டு வருகிறீர்கள், காரணம்?" மேலும் துருவுகிறோம். "ஆமாம். அதுவேதான் காரணம். தரமான புதிய சிறுகதை எழுத்தாளர்கள் புதிய நூற்றாண்டில் அதிகம் இல்லையோ என்று தோன்றியது. விற்பனையை மட்டுமே குறிவைத்து பல பெரும் பதிப்பகங்கள் செயல்படும்பொழுது, சிறுகதை புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தோம். தனிப்பட்ட முறையிலும் சிறுகதைகள்மீது கொண்ட ஈடுபாடு அதில் எம் கவனத்தைக் குவித்தது. இந்த வருடப் புத்தகச் சந்தையில் முன்னணிப் பதிப்பகங்களுக்கு இணையாக எங்கள் பதிப்பகத்தின் சிறுகதைகள் பேசப்பட்டன. நாங்கள் வெளியிட்டுள்ள 21 நூல்களில் 11 சிறுகதைத் தொகுப்புகள்" என்கிறார் பெருமிதத்துடன்.

"சவால்கள் என்றீர்களே, அவை என்ன?" என்று கேட்டதற்கு, "மிகப்பெரிய சவால் என்றால், இங்கே சிறு பதிப்பகங்களுக்கு எதிராக அவர்களது விற்பனை வாயில்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைச் சொல்லலாம். உதாரணம் ஒரு பெரிய பதிப்பகத்தாரிடம் பிரச்சனை என்ன என்று கேட்டால், அரசின் உதவி கிடைப்பதில்லை என்பார்கள். எங்களைப் போன்ற சிறிய பதிப்பகங்களுக்கு, பபாசி நடத்தும் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றுப் புத்தகங்களை விற்கக்கூட இடம் கிடைப்பதில்லை. அதில் உறுப்பினராக முடிவதில்லை. அதுபோல தமிழகத்தின் முக்கிய ஊடகங்கள் பலவற்றில் சிறிய பதிப்பகங்களின் புத்தகங்களைக் கண்டுகொள்ளாத அளவு நிலவும் குழுவாதப் போக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை. அரசு உதவியில்லாமலே பதிப்பகத்தை ஓரளவு நன்றாகவே நடத்த முடியும், மேற்சொன்னவை மாறினால். எல்லாவற்றிற்கும் அரசையே கைகாட்ட முடியாது, அப்படிக் கைகாட்டினால் பதிப்பகங்களுக்கு வேரிகோஸ் வெயின் (சிரைப் புடைப்பு) வந்துவிடும். ஏற்கனவே வந்திருக்குமோ என்று எனக்குச் சந்தேகம் உண்டு" என்று சொல்லிச் சிரிக்கிறார்.



"பகுதி நேரமாகப் பதிப்பகம் நடத்துகிறேன். அதுவே ஒரு ப்ளஸ்தான். ஒருசமயம். ரயிலில் மும்பை செல்லும் வழியில் ஒரு நண்பர் என்னிடம் நான் என்ன செய்கிறேன் என்று கேட்டார். நான் முழுநேரம் செய்பவன்போல் 'பதிப்பகம் நடத்துகிறேன்' என்றேன். 'தமிழிலா?' என்று கேட்டவர், அடுத்த நொடி 'அப்போது சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார். இன்று நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. பதிப்பகம் வளரத் தொடங்கிவிட்டது அலுவலகம், பணியாள் எல்லாம் இனிமேல் தேவைப்படும். அதுவரை பகுதிநேரத் தொழிலாகப் பார்த்துக்கொண்டிருப்பது ப்ளஸ்தான்" என்று தன் வளர்ச்சியை விளக்குகிறார். முதலீடு பெரிதாக இருக்குமே? "நண்பர்கள் தலா நான்காயிரம் ரூபாய் கொடுத்து ஆரம்பித்தததுதான். வா. மணிகண்டன், இன்பா சுப்ரமணியன் போன்றவர்களின் புத்தகங்களுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பே இதைச் சாத்தியப்படுத்தியது. நானும் எனது பங்குதாரர் கண்ணதாசனின் பெரும் பங்களிப்புமே இதுவரையிலான கடல்குதிரையின் பயணம்" என்கிறார்.

சூடாக பதில் வரும் என்று தெரிந்தே "புத்தகக் கண்காட்சிகள்..." என்று தொடங்கியதும், "புதிய பதிப்பகங்களுக்கு இடம் கொடுக்கும் சூழலில்லை என்று முதலில் கூறிய கருத்தோடு ஆரம்பிக்கிறேன். ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் அமேசான் நிறுவனமும் ஒரு ஸ்டால் எடுத்திருந்தது. மிகவும் கவர்ச்சிகரமாக, ஏ.டீ.எம். கவுண்டர்களுக்கு அடுத்து, கேண்டீன் கவுண்டர்களுக்கு இணையாக ஆட்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இது சற்றே அச்சமூட்டும் செய்திதான். பணமதிப்பிழப்பு, அரங்குக்குச் செல்லும் வழியில் இருந்த போக்குவரத்து நெருக்கடி போன்ற காரணங்களினால், இந்த ஆண்டு, அநேகமாக எல்லாப் பதிப்பகங்களுக்கும் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே விற்பனை ஆகியிருக்கும். ஸ்டால் போடாவிட்டாலும் பிற பதிப்பக நண்பர்கள் மூலமாக எங்கள் புத்தகங்கள் கண்காட்சிகளில் இடம் பெறுகின்றன. எங்களுக்குத் தோள் கொடுக்கும் 'டிஸ்கவரி புக் பேலஸ்' வேடியப்பன், தோழமை பூபதி, கவிஞர் பிரம்மராஜன், ஓவியர் பாலசுப்ரமணியன், நரேந்திரபாபு, சீனிவாசன், என்னுடன் பணிபுரியும் ஓவியர் கணபதி சுப்ரமணியம் ஆகியோருக்கு நான் நிறையவே கடமைப்பட்டிருக்கிறேன்" என்கிறார்.

இது மின்னூல்களின் காலம். அவற்றில் கவனம் செலுத்துகிறார்களா என்று அறிய ஆசைப்பட்டோம். "அதுதான் எங்கள் இலக்காக முதலில் இருந்தது. www.yaavarum.com ஆரம்பித்தபோதே மின்னூலுக்கான தொடக்கமாக அமைய வேண்டும்; அதனைப் படிப்பதற்கான கைபேசிச்செயலி உருவாக்க வேண்டும் என்று அதற்கான வேலையில் இறங்கினோம். எங்கள் நூல்களை 'லீமர் இணையதளம்' மூலம் மின்னூலாகப் பெறமுடியும். அமேசான் கிண்டில் போன்ற பெருநிறுவனங்களின் குடைக்குள் இயங்குவது பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை" என்கிறார்.

ஜீவரிகாலன், எளிய மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்மா, அப்பா, தம்பியுடன் சென்னையில் வசிக்கிறார். தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். "சிறுவயதிலிருந்தே நிறைய பிரச்சினைகள், கடன் தொல்லை, தொழில் நட்டம், பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டே படிப்பு என ஒவ்வொருமுறையும் துயரங்களின் பிடியில் இருக்கும்போதும் என்னை அரவணைத்து இன்றைய நிலைக்கு வரக் காரணமானவர் என் அம்மா. எனது வாசிப்பு, எழுத்து, பதிப்புலக ஆசை என எல்லாவற்றிலும் முழுமையாகப் புரிந்து வைத்திருப்பவர் என் தாயார்தான். என் நற்செயல் எனப் பாராட்டப்படும் யாவும் அவரது பெருஞ்சக்தியின் ஒரு துளியே" என்னும்போது குரல் தழுதழுக்கிறது.

தனக்கு உறுதுணையாக இருப்பவர்கள் பற்றி "நான் பத்து வருடங்களாக ஒரு தனியார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் பணி செய்கிறேன். நான் எழுத்தாளன் என்பதைத் தெரிந்துகொண்ட எனது முதலாளிகள், அவர்களது Corporate Social Responsibility ஆக என்னைத் தொடரவிடுவதே எனக்குப் பெரிய உற்சாகம். திரு. மணிகண்டன் மற்றும் திரு. ரவீந்திரன் அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். கண்ணதாசன் என்கிற நண்பன் எனது எல்லாவித இம்சைகளையும் சகித்துக்கொண்டு என்னோடு நிற்பவன். இதுபோக பாலா இளம்பிறையும், வேல்கண்ணனும் கணேஷ்குமாரும், சாத்தப்பனும் எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். எழுத்தாளர் வா. மணிகண்டன் எங்களுடைய பலம். இதுபோக மிகப்பெரிய இடம்கொடுத்து ஆதரித்து வரும் கணையாழி இதழின் ஆசிரியர் ம. ராஜேந்திரன் அவர்களும், புத்தகங்கள் ஆக்கத்திலும் நட்பிலும் உடனிருக்கும் ஓவியர் கோபு ராசுவேல் அவர்களும் 'யாவரும்' பதிப்பகம் சிறக்க முக்கியக் காரணம். முயற்சிகளுக்குத் துணைநிற்கும் எழுத்தாளர்கள் அகரமுதல்வன், கவிதைக்காரன் இளங்கோ, பாலசுப்ரமணியன் பொன்ராஜ், கடங்கநேரியான், உமாசக்தி, அகநாழிகை பொன்வாசுதேவன் என்று பலரைச் சொல்லலாம்" என்கிறார்.

ஓவியம், சிற்பம், வரலாற்றாய்வு போன்ற ஆர்வங்களைப் பற்றிக் கேட்கிறோம். "ஸ்கேலில் ஒரு கோடு போட்டால்கூட கோணலாக இருக்கிறது என்று அடிவாங்கும் எனக்கு, திடீரென்று இந்த கேள்விக்கு பதில் யோசித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வடிவங்கள், செய்நேர்த்தி, அழகு என்பதை தாய்க்கு நிகராக எனது தந்தையும் வலியுறுத்துவார். அவரது சைக்கிள் கம்பியில் துண்டு ஒன்றைப் போட்டு அமர்ந்தபடி கண்மாய்க் கரைகளிலும், சாலைகளிலும், அந்திவேளையை ரசிக்கக் கற்றுக்கொடுத்த அழகியல் தன்மைதான், அன்றாடம் வீட்டு முற்றத்தில் கட்டிலில் மல்லாந்து படுத்து மணிக்கணக்கில் வானத்தைப் பார்க்க என்னை அனுமதித்த பெற்றோர்கள்தான் என் கற்பனை வளத்தை, கதை சொல்லலைப் பெரிதும் ஊக்குவித்தவர்கள். மொழியைக் கடந்த ஆதிமொழியில் என் கற்பனைகளுக்கு இடமிருந்தன. என் கதைகளில் கூட வாசிப்பிலிருந்து எழுந்தவை சொற்பமே. பெரும்பான்மையும் ஓவியங்களிடமிருந்தும், கலைஞர்களிடமிருந்தும் தான். அதுவே அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமூட்டியது. பின்னர் ஓவியங்கள் குறித்தும் எழுத ஆரம்பித்தேன். சிற்பம், படிமவியல் போன்ற துறைகளில் நிறையப் பயிற்சிகள் மேற்கொண்டேன். ஓவியங்கள் குறித்த புத்தகங்களும் பதிப்பிக்க எண்ணமுண்டு. ஈடேறும்." என்கிறார்.



எதிர்காலத் திட்டங்கள் இல்லாமலா! "நல்ல பதிப்பாளன் என்பவன் யார்? அவன் ஒரு சமூகத்தின் அறிவுத்துறைக்கான பெட்டகத்தை வைத்திருப்பவன். 2010க்குப் பின்பு எழுதவந்த நாங்கள் சமகாலத்தின் கூறுகளையும் எதிர்காலம் குறித்த அனுமானத்தில் கொஞ்சம் நல்ல மதிப்பீடுகளையும் கொண்டிருக்கிறோம். சிறுகதைகளை ஊக்குவிப்பதன் மூலம் இலக்கியம் - வெகுஜன வாசகர்கள் என்று தனித்தனியாகப் பிரித்துக் கட்டி வைத்திருக்கும் துர்ச்சங்கிலியை அறுத்தெறிய ஆசைப்படுகிறோம். நிறைய இளம் எழுத்தாளர்களைக் கொண்டு வரவேண்டும். அந்தப் பயணத்தில் அவர்களது அங்கீகாரம் உள்ளிட்ட சில விஷயங்களில் பங்கெடுத்து எல்லா மக்களுக்கும் இலக்கியத்தைக் கொண்டு செல்லும் வேலைகளைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறோம்."

"நண்பர் ஓவியர் கணபதி சுப்ரமணியத்துடன் இணைந்து எனது கதை ஒன்று மாங்கா வடிவம் போன்ற கிராஃபிக் நாவலாக வரவிருக்கிறது. அதுபோக தமிழில் சிறந்த சமகாலச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அதையும் மாங்கா வடிவத்தில் கொண்டுவந்து, அதன் வாயிலாக நாடுதழுவிய இலக்கிய உலகோடு வெகுஜன மக்களையும் இலக்கியம் வாசிக்க வைக்க முயலும் திட்டமும் உண்டு. சில இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து நிகழ்வுகள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். தமிழுணர்வை அடிப்படையாக வைத்து கலை, இலக்கிய அமைப்பாக அது செயல்படும். யாவரும் பதிப்பகம், கூழாங்கற்கள், மோக்லி பதிப்பகம் ஆகியவை ஒன்றாகச் சில வேலைகளை இணைந்து செய்யும். அவ்வாறு சிற்றிதழ்ப் போக்கிலும் ஒருமித்துச் செயல்படும்போது வியாபார ரீதியான சில அழுத்தங்களையும் கடந்து நிற்கமுடியும் என்று நம்புகிறோம். சிறுகதைகளுக்கென ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் வழியே, புனைவிலக்கியம் படைப்போருக்குத் தூண்டுகோலாய் இருப்பதற்கானவற்றைச் செய்ய விருப்பம்; அதற்கான பயிற்சிப்பட்டறை, குழு விவாதம், குழு விமர்சனம் உள்ளிட்ட நிறைய விஷயங்களைத் திட்டமிட வேண்டும்; தொழில்நுட்பம், வரலாறு சார்ந்த புதிய படைப்புகளை உருவாக்க நிறைய இடமளிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டங்கள் உள்ளன" என்கிறார்.

விரிந்து பரந்த வானம் அவரது கண்ணின் பாவைக்குள் பிரதிபலிக்கிறது. வானம் வசப்படும் என்பதையே வாழ்த்தாகச் சொல்லி விடைபெறுகிறோம்.

உரையாடல்: அரவிந்த்

*****


எங்களது நூல்கள்
மூன்றாண்டுகளில் நாங்கள் வெளியிட்ட 21 நூல்களில் 11 சிறுகதைத் தொகுப்புகள். அதில் ஐந்து பேர் புதிய எழுத்தாளர்கள். நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்புக் கவிதை போன்றவற்றையும் வெளியிடுகிறோம். வா. மணிகண்டனின் 'மூன்றாம் நதி' என்கிற குறுநாவல் ஒரு கல்லூரிப் பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு சேர்க்கப்பட இருக்கிறது. கவிஞர் இன்பா சுப்ரமணியன் எழுதிய 'வையாசி 19' நாவலுக்கு மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. ஆறாண்டுகால உழைப்பில் உருவான இந்தப் படைப்பு, இந்திய டையாஸ்போராவின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கார்ட்டூனிஸ்ட் பாலா ஓர் கட்டுரையாளராக அறிமுகமாகியிருக்கும் நூலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பாலசுப்ரமணியன் பொன்ராஜின் 'துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை' எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் பாராட்டைப் பெற்றுள்ளது. ரமேஷ் ரக்சனின் 'ரகசியம் இருப்பதாய்' நூல் ஜெயந்தன் விருது பெற்றுள்ளது. தூயனின் 'இருமுனை' நூலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய 'பேரிவனவாதத் தீ' ஒரு முக்கியமான நூல். கவிஞர் ஷான் கருப்பசாமி, யாவரும் பதிப்பகம் வாயிலாகப் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் எழுதிய 'ஆண்ட்ராய்டின் கதை' நல்ல கவனம் பெற்றிருக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்து வெளிவந்திருக்கின்ற நூல்களில் மிக முக்கியமான நூலாக இதைச் சொல்லலாம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஐரோப்பியக் கவிஞர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான மிரோஸ்லாவ் ஹோலூபின் கவிதைகள், பிரம்மராஜனால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. நவீனக் கவிதைகளை எழுதும், வாசிக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.

நூல்களை வாங்க: docs.google.com
ஆன்லைனில் வாங்க: www.wecanshopping.com

- ஜீவகரிகாலன்

*****


ட்ரங்கு பெட்டிக் கதைகள்
ஜீவகரிகாலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. "கதைகளுடனான என் பயணம், காத்திருப்பு, தேர்வு என எல்லாமும் ட்ரங்குப் பெட்டியின் வாழ்க்கையைப் போலவே" என்கிறார் முன்னுரையில். 'நீரோடை', 'காட்சி', 'மஞ்சள் பூ' என்ற கதைகள் விதவிதமான கருத்துகளில் உள்ளன. 'தூத்துக்குடி கேசரி' நல்ல நகைச்சுவைக் கதை. 'தேய்பிறை' இழப்பை எதிர்கொள்வதைப் பற்றியது; அமானுஷ்யம் கலந்த சிறுகதை. தொகுப்பின் சிறந்த சிறுகதையாக 'தொடுதல்' கதையைச் சொல்லலாம். எந்த மாதிரியான பாதுகாப்பற்ற சூழலில் பெண்கள் வாழ வேண்டியுள்ளது என்பதை ஓர் இரவுநேரப் பேருந்துப் பயணத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜீவகரிகாலன். 'வசந்த மண்டபத்தின் சாபம்' சிறுகதையின் முடிவை யாருமே எளிதில் ஊகிக்க முடியாது thoyyil.blogspot.inஎன்பது இவரது வலைப்பூ.

- ஜீவகரிகாலன்

*****

© TamilOnline.com