பிப்ரவரி 2017: வாசகர் கடிதம்
நான் கனெக்டிகட் மாநிலம் வெஸ்ட் ஹார்ட்ஃபோர்டுக்கு வந்துள்ளேன். இங்குதான் 'தென்றல்' இதழை முதன்முதலாகப் பார்த்தேன். கடந்த ஓராண்டிதழ்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதழ்கள் மிகச்சிறப்பாகவும் அருமையான வடிவமைப்புடனும் தரமான கதை கட்டுரைகளுடனும் இருந்தன. மனநெகிழ்வுடன் கூடிய என் வாழ்த்துக்கள்.

குறிஞ்சிவேலன்,
ஆசிரியர் மற்றும் பதிப்பாளர், 'திசை எட்டும்' மொழியாக்கக் காலாண்டிதழ்

*****


டிசம்பர், ஜனவரி 'தென்றல்' இதழ்களில் "பசுமைப் போராளி M. ரேவதி' நேர்காணல் வழியே இயற்கை விவசாயம், இயற்கைச் சீற்றங்களால் மலடாகிவிட்ட மண்ணை மறுபடி சரிசெய்யத் தேவையான உழைப்பு போன்ற கடினமான விஷயங்களை மிக அழகாக விவரித்திருந்தார். அவர்களின் பணி சிறப்படைய வாழ்த்துக்கள்.

அறிவியல் தமிழர் பெ.நா. அப்புஸ்வாமி அவர்களைப் பற்றியும் ,அவர் எழுதிய 'அற்புத உலகம்' நூலிலிருந்து வெளியிட்ட விந்தைகள் என்ற படைப்பும் மிக அற்புதமாக இருந்தன. ஆச்சரியப்பட வைத்தனர் அருட்செல்வப் பேரரசன் மற்றும் 'தாழம்பூ' கோவிந்தராசன் ஆகியோர்.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

*****


தென்றல் டிசம்பர் இதழ் பார்த்தேன். அருமை. நான் டல்ஸாவில் என் மகள் வீட்டுக்கு வந்தபோது தென்றல் பத்திரிகையைப் பார்த்தேன். 30 வருடங்கள் முன்பு தமிழ்நாட்டில் கணையாழி என்ற இலக்கியப் பத்திரிகையில் அசோகமித்திரன் ஆசிரியராக இருந்தபோது நான் எழுதியிருக்கிறேன். தென்றலைப் படிக்கும்போது எனக்கு ஒரு நல்ல இலக்கியப் பத்திரிகையை படித்த திருப்தி இருந்தது. வாழ்த்துக்கள்.

பாஸ்கர்,
டல்ஸா, ஓக்லஹாமா

*****


தென்றல் ஜனவரி இதழ் சிறப்பாக இருந்தது. குறிப்பாக நேர்காணல். ஆயிரக்கணக்கான பாமரர்கள் மகாபாரதத்தைப் படிக்கும்படித் தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் அருட்செல்வப்பேரரசன் அவர்களை இதயபூர்வமாகப் பாராட்டுகிறேன். மற்றப் பகுதிகளும் அருமை.

கே. ராகவன்,
பெங்களூரு, இந்தியா

© TamilOnline.com