மருத்துவ உலகில் புதியவை
ஆர்காக்சியா தடை

Merck நிறுவனத்தின் புதிய வலி மருந்தான (Arcoxia) ஆர்காக்சியாவுக்கு FDA தடை விதித்துள்ளது. முன்பு இந்த நிறுவனத்தின் மருந்தாகிய Vioxx இருதய நோயை அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவித்தன. அதனால், பல வருடப் புழக்கத்துக்குப் பிறகு Vioxx தடை செய்யப்பட்டது. இதையொட்டி, நூற்றுக்கணக்கான வழக்குகள் Merck நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், Vioxx-ன் அடுத்த தலைமுறையாக ஆர்காக்சியா தயாரிக்கப்பட்டது. மூட்டு வலிக்கு என்று தயாரிக்கப்பட்ட இந்த மருந்து மாரடைப்பு நோயை அதிகமாக்கும் சாத்தியக்கூறுகள் கொண்டுள்ளதால், FDA இந்த மருந்தையும் தடை செய்துள்ளது. அமெரிக்காவில் தடை செய்யப்பட்டாலும், இந்த மருந்து வேறு சில நாடுகளில் புழக்கத்தில் இருந்து வருகின்றது.

புகை பிடிப்பதை நிறுத்தப் புது மருந்து

இரண்டு மாதங்களுக்கு முன்னால், புகை பிடிப்பதை நிறுத்துவது பற்றித் தென்றலில் பேசினோம். சமீபத்தில், Chantix என்ற மருந்து இதற்காகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதை 12 வாரங்களுக்கு எடுத்துக் கொள்வதின் மூலம் புகை பிடிப்பதை நிறுத்த முடிகிறது. Zyban என்ற மருந்தும் இதே ரீதியில் வேலை செய்யக் கூடியது. Chantix-ல் நிகோடின் இல்லை. ஆனால் நிகோடின் வேலை செய்யும் இடத்தில், இந்த மருந்து ஆக்கிரமித்து, நிகோடின் தேவை என்ற எண்ணத்தைக் குறைக்கிறது. மருத்துவர் பரிந்துரை மூலமாக மட்டுமே இந்த மருந்தை உபயோகிக்க முடியும்.

நீரிழிவு நோய்- புதிய தகவல்கள்

நீரிழிவு நோயின் மரபணுத் தொடர்புகள் பல புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பு மூலம், நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.

Exubera என்று சொல்லப்படும் ஒரு வித இன்சுலின் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதை inhaler முறையில் மூக்கின் வழியே எடுத்துக்கொள்ள முடியும். Type 2 நீரிழிவு நோய்க்கு, இந்த வகை இன்சுலின் தீர்வளிக்கலாம். Type 1 நீரிழிவு வகைக்கு, இத்துடன், ஊசி மூலம் ஏற்றும் இன்சுலின் தேவைப்படலாம்.

ஊசி வழியே ஏற்றும் Symlin என்ற மருந்தும் உபயோகத்தில் இருக்கின்றது. அதிக இன்சுலின் தேவைப்பட்டால், இது உபயோகப்படுத்தப்படுகிறது.

நெஞ்சுக் கரிப்பும் உடற்பருமனும்

நெஞ்சுக் கரிப்பு என்று சொல்லப்படும் reflux வியாதியான GERD (Gastroesophageal Reflux Disease), எடை அதிகரிப்பதால் ஏற்படுவது ஆராய்ச்சிகள் மூலம் உறுதிசெய்யப் பட்டிருக்கிறது. எடை அதிகரிப்பதால் ஏற்படும் கேடுகளில் ஒன்று, அமிலம் சுரப்பதால் ஏற்படும் வயிற்றுப் புண் (ulcer). எடையைக் குறைத்தால், அமிலத்தால் ஏற்படுத்தும் வயிற்றுப் புண் குறைய வாய்ப்புகள் உள்ளன.

இரத்த அழுத்தம்

140/80 என்ற இரத்த அழுத்தம் 'normal' என்று வர்ணிக்கப்பட்ட காலம் போய்விட்டது. சென்ற வருடம் வெளியிட்ட அறிக்கைகளில், இரத்த அழுத்ததில், 'pre hypertensive' என்று ஒரு புதிய வகை உருவாக்கப் பட்டுள்ளது. இதன்படி 120/70க்கு மேல் இருப்பவர்கள் யாவரும், தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுரை வழங்கப் படுகிறது. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு 130/80 இருப்பது நல்லது என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது. பல, பழைய மருந்துகள் இன்னமும் நல்ல முறையில் வேலை செய்வதும் இந்த அறிக்கையில் தெளிவாகிறது.

மாரடைப்பும் LDL கொழுப்பும்

மாரடப்புக்கும், LDL என்ற தீயவகைக் கொழுப்பின் அளவுக்கும் உள்ள சம்பந்தம் அனைவரும் அறிந்ததே. முன்பெல்லாம், இந்த LDL அளவு 160, 130 அல்லது 100க்குக் கீழ் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இரண்டுக்கு மேற்பட்ட மாரடைப்பு சாத்தியக்கூறுகள் (risk factors) உடையவர்கள் 130க்குக் கீழும், இரண்டுக்குக் குறைவாக சாத்தியக்கூறு உடையவர்கள் 160க்கு கீழாகவும் LDL அளவை வைக்க அறிவுறுத்தப்பட்டு வந்தது. மாரடைப்பு நோய் வந்தவர்கள் 100க்குக் கீழ் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி, எவ் வளவுக்கு LDL குறைவாக இருக்கிறதோ அவ்வளவுக்கு நல்லது என்பது உறுதியாகிறது. நீரிழிவு நோய் உடையவர்களை மாரடைப்பு நோய் உடையவர்கள் போலவே நடத்த வேண்டும் என்பதும் உறுதிப்பட்டது. இவர்களுக்கு 70க்கும் கீழ் LDL அளவைக் குறைப்பது நல்லது. உணவு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரைகள் மூலம் இதைச் செய்யவேண்டும்.

இன்னும் வரும்...

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com