பிள்ளையார் தெரு முதல் வீடு
பிள்ளையார் தெருவின் முதல் வீட்டில் ஒரே பரபரப்பு. பொங்கல் பண்டிகை கொண்டாட வீட்டின் பின்புறத்தில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தாயார் சமையலறைக்கும் பின்கட்டுக்கும் நடந்து கொண்டிருந்தாள். தந்தை மும்முரமாக லக்ஷ்மியைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். லக்ஷ்மியோ மிகவும் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கன்று அமைதியாக அருகில் தூங்கிக் கொண்டிருந்தது. சிறுமி செல்வி ஒரு மூலையில் கோலப்புத்தகத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள்.

அன்று கதிரவன் மட்டும் சர்க்கரைப் பொங்கலுக்கு ஏங்கினபடி காத்திருக்கவில்லை, எட்டுவயதுச் செந்திலும்தான். செந்திலுக்கு இனிப்பு என்றால் ஒரு மோகம். கரும்பைக் கடித்து ரசித்துக் கொண்டிருந்தான். அருகில் அரிசியும் பருப்பும் பானையில் கொதிக்க, அதன்மேல் விழி வைத்துக் கொண்டிருந்தான்.

திடீரென செந்திலுக்கு ஒரு அல்ப ஆசை. கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பாதிச் சர்க்கரையை பொங்கல் பானையில் கொட்டினான். ஒட்டிக்கொண்டிருந்த வெள்ளை நிற மீதிப் பொடியை நக்கினான்.

அப்போதுதான் தெரிந்தது அது சர்க்கரையே இல்லை, கோலமாவு என்பது. பயந்துபோன செந்தில் அங்கிருந்து ஓடிவிட்டான். அச்சமயம் தாயார் 'செந்திலு.. செந்திலு..' என்று கூப்பிட, லக்ஷ்மி முரண்டு பிடித்தபடி பொங்கல் பானையை 'டமால்' என்று எட்டி உதைத்தாள். வேகாத அத்தனை பொங்கலும் கீழே கொட்டிப் போனது.

ஆனால் தாயாருக்கோ பொறுமை அதிகம். மறுபடியும் சர்க்கரைப் பொங்கல் செய்ய ஆரம்பித்தாள். ஒருமணி நேரம் கழிந்தபின் செந்தில் மறுபடியும் அங்கே வந்தான். தாயார் சர்க்கரைப் பொங்கலை ருசி பார்த்துக் கொண்டிருந்தாள். 'வாடா என் கண்ணே. இனிப்பை முதலில் நீ ருசிக்காமல் வேறு யார்..." என்று கூறியபடி, அன்புடன் ஒருபிடிப் பொங்கலைச் செந்திலிடம் நீட்டினாள்.

செந்தில், "ஐயோ... ஐயோ... வேண்டாம் அம்மா. வேண்டாம்..." என்று கெஞ்சினான்.

"என்னடா... எவ்வளவு கஷ்டப்பட்டுச் செஞ்சிருக்கேன். லக்ஷ்மி வேற பானையத் தட்டிவிட்டு, மொதல்ல செஞ்ச பொங்கலை எல்லாம் கொட்டி... ஐயோ அதை ஏன் கேக்கற...." என்றாள்.

இதைக் கேட்ட செந்திலின் முகத்தில் இருந்த கவலை நீங்கி புன்சிரிப்பு மலர்ந்தது.

அதே நிமிடம், "ஐயோ அம்மா.... ஒரே எறும்பு!" என்று ஓர் அலறல்.

தாயார் திரும்பிப் பார்த்தாள். அங்கே செல்வியின் காலின்கீழ் ஒரு கோலம். கையில் சர்க்கரைப் பாத்திரம். தாயாருக்குப் புரிந்தது. கோலமாவும் சர்க்கரையும் இடம் மாறியிருக்கிறது என்று.

"என்ன நல்லநாளும் அதுவுமா ஒரே ஐயோ ஐயோ! பொங்கலோ பொங்கல்னு சொல்லுங்க" என்று தந்தை குடும்பத்திற்கு ஞாபகப்படுத்தினார்.

அன்று பிள்ளையார் தெரு முதல் வீட்டில் சர்க்கரைப் பொங்கலும், வெண்பொங்கலும் மட்டுமல்ல, கிண்டல், கும்மாளம், சந்தோஷம் தவிர, மகிழ்ச்சி நிறைந்த மனங்களும் பொங்கின.

மீரா ஸ்ரீராம்,
பெர்க்கலி, கலிஃபோர்னியா

© TamilOnline.com