கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்
விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே.

- சம்பந்தர் தேவாரம்

தமிழ்நாட்டில் திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள நகரம் கரூர். கொங்குநாட்டில் உள்ள ஏழு சிவஸ்தலங்களில் கரூரும் ஒன்று. ஜமக்காளம், போர்வை, பெட்ஷீட்டிற்குப் புகழ்பெற்ற ஊர். இங்குள்ள ஆதிகருவூர் பசுபதீஸ்வரர் ஆலயம் அக்காலச் சேர மன்னர்களின் வஞ்சித் தலைநகராகவும், சோழ, பாண்டிய, பல்லவர் காலத்தில் சிறப்புற்றதாகவும் விளங்கியிருக்கிறது. சுந்தரர், சம்பந்தரால் பாடல்பெற்ற தலம். அருணகிரிநாதரும் பாடியுள்ளார். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான புகழ்ச்சோழர் ஆண்ட தலம். சிவகாமி ஆண்டார் மலர்த்தொண்டு செய்த தலம். எறிபத்த நாயனார், திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவரின் அவதாரத் தலம்.

மூலவர் ஆநிலையப்பர், பசுபதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி, சௌந்தரநாயகி (வடிவுடையாள்), கிருபாநாயகி (அலங்காரவல்லி). பசுபதீஸ்வரர் இவ்வாலயத்தில் சிவசக்தி ரூபமாகத் திகழ்கிறார். பசுபதி என்றால் ஜீவர்களாகிய பசுக்களை நெறிப்படுத்தி நற்கதியில் சேர்க்கும் தலைவன் என்பது பொருள். இறைவனுக்குப் பாலாபிஷேகம் செய்யும்போது அம்பிகையின் திரிபங்கத் தோற்றம் செதுக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. தீர்த்தம் அமராவதி நதி. தலவிருட்சம் வஞ்சி மரம்.

படைப்புத் திறனால் கர்வம் கொண்ட பிரம்மனை அடக்க நினைத்தார் சிவபெருமான். நாரதரின் அறிவுரைப்படி தெய்வீகப் பசுவாகியாக காமதேனு இத்தலத்தில் தவம் செய்துவரும்போது, "புற்று ஒன்றிற்குள் ஆதிலிங்கம் உள்ளது. அதனை வழிபடு" என்று அசரீரி உரைத்தது. அதன்படி காமதேனுவும் புற்றின்மீது பாலைச் சொரிந்து வழிபட்டது. ஒருநாள் காமதேனு பால்சொரியும்போது அதன் குளம்பு இறைவனின் திருவடிமீது பட்டுவிட லிங்கத்தின்மேல் ரத்தம் வழிந்தது. காமதேனு இதனால் மனம் வருந்த, சிவபெருமான் அதன்முன் தோன்றி, "நீ வழிபட்டதனால் இவ்வுலகம் என்னை 'பசுபதி' என்ற பெயரால் அழைக்கும். என்மீது நீ பாலைப் பொழிந்ததனால் நீயும் பிரம்மனைப்போல் படைப்புத் தொழில் செய்யக் கடவாய்" என அருள்செய்தார். இதனால் பிரம்மன் கர்வம் நீங்கினான் என்பது தலவரலாறு. காமதேனுவின் குளம்பு லிங்கத்தின்மீது ஏற்படுத்திய தழும்பை இன்றளவும் காணலாம்.

கோயில் உள்ளே நுழையும்போது கருங்கல்லால் ஆன கொடிமரத்தைக் காணலாம். கிழக்கு நோக்கிய சன்னதியில் வடக்கு நோக்கிச் சாய்வாக அமைந்துள்ளது இறைவன் திருமேனி. கருவூர்ச் சித்தரைத் தம்முடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளவே சாய்ந்து இடம் ஏற்படுத்தினார் இறைவன் எனக் கூறப்படுகிறது. கோயிலின் தென்மேற்கு மூலையில் கருவூராருக்குச் சன்னிதி உள்ளது. கோயில் 2065 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உயரம் 120 அடி. இறைவன் சன்னதியின் வெளிச்சுவற்றில் தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகின்றனர். தக்ஷிணாமூர்த்தி அமைந்துள்ள மண்டபத்தூண்களில் சனகாதி முனிவர்களின் வடிவங்கள், திருச்சுற்றில் வலம்புரி விநாயகர், பிக்ஷாடனர் உருவங்கள் கலையழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷண்முக சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். வடக்கே இரண்டு அம்பிகைகள் சன்னிதி உள்ளது.

கோயிலுக்கு கிழக்கு நோக்கி அம்பாள் அலங்காரவல்லி, ஸ்ரீசக்ரராஜ சிம்மாசனத்தில் நிற்கிறாள். திருவடியில் ஸ்ரீசக்ர பீடம், அழகிய தீட்சண்யங்களுடன் கூடிய அம்பாள் வடிவம். தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் வடிவமான சௌந்தரநாயகியின் சன்னிதி பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இத்தலத்திற்கு மேற்கே நான்கு கல் தொலைவில் உள்ள அப்பிப் பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த வடிவுடையாள், இறைவன்மீது பிரேமபக்தி கொண்டு, தன் பக்தியின் பங்குனி உத்திரப் பெருநாள் விழாவில் ஈசனை மணந்து இறைவனோடு ஐக்கியமானார். இவரே அம்பாளாக, சௌந்தரநாயகி என்னும் திருநாமத்துடன் அமையப் பெற்றிருக்கிறார். ஈசன், பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று அப்பிப் பாளையம் செல்கிறார். ஏழாம்நாள் மாலையுடன் பல்லக்கில் அமர்த்தி வடிவுடையாளுடன் திரும்பி வருகிறார்.

கொடிக்கம்பத்தின் அருகே ஞானசம்பந்தர், முசுகுந்தச் சக்கரவர்த்தி உருவங்கள் காணப்படுகின்றன. முசுகுந்தர் இத்தலத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. முசுகுந்தருக்கு அருகே புகழ்ச்சோழரும் எறிபத்த நாயனாரும் சிற்ப வடிவில் உள்ளனர். கருவூர்ச்சித்தர் சன்னிதியில் பதினெண் சித்தர்களின் சிலை உருவங்கள் உள்ளன. சுத்தமான சிறுகோசாலை, சண்டிகேஸ்வரர் சன்னதி போன்றவை ஆலயப் பிரகாரங்களில் அமைந்துள்ளன. ஆலயச் சுவர்களில் திருமந்திரம், தேவாரம், அபிராமி அந்தாதி, தாயுமானவர் பாடல்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள நூற்றுக்கால் மண்டபம் புகழ்ச்சோழ மண்டபம் என அழைக்கப்படுகிறது. சிவகாமி ஆண்டாரின் நித்யபூஜையை புகழ்ச்சோழ மன்னனின் பட்டத்து யானை, மலர்க் கூடையைப் பறித்தெறிந்து விரதபங்கம் செய்தது. சிவனடியாரின் துன்பம் பொறுக்காத எறிபத்த நாயனார் அதன் தும்பிக்கியை வெட்டி வீழ்த்தினார். செய்தியறிந்த புகழ்ச்சோழ மன்னன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளப் போனான். அப்போது அங்கே இறைவன் தோன்றி அவனைத் தடுத்தாட்கொண்டார். யானையையும் உயிர்ப்பித்தார். இந்த நிகழ்வு இங்கே பங்குனிப் பெருவிழாவின் போது கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் குறிப்பிட்ட மூன்று நாட்களில் சூரியனின் கிரணங்கள் சிவன்மீது விழுகின்றது. சூரியன் ஒளி வடிவில் இங்கே ஈசனை வழிபடுவதாக ஐதீகம். சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் அன்னாபிஷேகம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், நவராத்திரி, பங்குனி உத்திரப் பெருவிழா என அனைத்தும் இங்கே மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. தைப்பூசத்தன்று கருவூரார் இறைவனுடன் கலந்ததால் அன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

இத்தலத்து இறைவனை வணங்க மனநிம்மதி கிடைக்கின்றது. பக்தர்கள் திருமண வரம், குழந்தைப்பேறு, வேலையில் உயர்வு போன்றவற்றிற்குப் பிரார்த்தனை செய்து, நிறைவேறியதும் காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர். அவசியம் தரிசிக்கவேண்டிய திருத்தலம் கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com