வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது
தமிழின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவரான வண்ணதாசனுக்குத் தமிழுக்கான இந்த ஆண்டின் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது. அவர் எழுதிய 'ஒரு சிறு இசை' என்னும் படைப்பை விருதுக்குரியதாக டாக்டர் டி. செல்வராஜ், டாக்டர் கே.எஸ். சுப்ரமணியன், டாக்டர் எம். ராமலிங்கம் அடங்கிய குழு தேர்ந்தெடுத்துள்ளது. வண்ணதாசனின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். விமர்சகரும், சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான தி.க. சிவசங்கரனின் மகனான இவர், கல்யாண்ஜி என்ற புனைபெயரில் கவிதைகளையும் எழுதிவருகிறார். நா. பார்த்தசாரதியின் 'தீபம்' இதழில் துவங்கிய இவரது எழுத்துப் பயணம் இன்றும் வற்றாத ஊற்றாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'கலைக்க முடியாத ஒப்பனைகள்', 'சமவெளி', 'கனிவு', 'நடுகை', 'பெயர் தெரியாமல் ஒரு பறவை', 'கிருஷ்ணன் வைத்த வீடு' போன்றவை இவரது முக்கியமான சிறுகதைத் தொகுப்புகளாகும். 'புலரி', 'முன்பின்", 'அந்நியமற்ற நதி', 'மணல் உள்ள ஆறு' போன்றவை குறிப்பிடத்தகுந்த கவிதைத் தொகுப்புகளாகும். இதுதவிர, 'அகமும் புறமும்' என்ற கட்டுரை தொகுப்பும், வண்ணதாசன் கடிதங்கள் என்ற தொகுப்பு நூலும் வெளியாகியுள்ளன. கலைமாமணி, இலக்கியச் சிந்தனை உள்படப் பல விருதுகளைப் பெற்றவர். சமீபத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பாக வழங்கப்படும் விஷ்ணுபுரம் இலக்கிய விருதுக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆற்றொழுக்கான நடையில் செல்லும் அமைதியான ஓடம் போன்றது இவரது எழுத்து என்ற மதிப்பீடு உண்டு. எதார்த்தவாத அழகியலை முன்னிறுத்தி எழுதியவர். இவரது பல சிறுகதைகள் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. கேடயமும், பரிசுத்தொகை ரூபாய் 1 லட்சமும் கொண்டது சாகித்ய அகாதமி விருது. வண்ணதாசனுக்குத் தென்றலின் வாழ்த்துகள்!

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com