செல்வி. ஜெ. ஜெயலலிதா
தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா தொடர்சிகிச்சை பலனில்லாமல் சென்னையில் காலமானார். ஃபிப்ரவரி 24, 1948 அன்று கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள மேல்கோட்டையில் சந்தியா-ஜெயராம் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். பெற்றோர்கள் வைத்த பெயர் கோமளவல்லி. இரண்டு வயதில் தந்தையை இழந்தார். தாயால் அன்புடன் வளர்க்கப்பட்டார். பெங்களூரின் பிஷப் காட்டன் பள்ளியிலும் சென்னை சர்ச் பார்க் கான்வென்டிலும் பயின்றார். பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதலிடமும் தங்கப்பதக்கமும் பெற்றார். குடும்பச்சூழலால் கல்லூரியில் பயில இயலவில்லை. முறையாக பரதநாட்டியம் பயின்று நடிகர் சிவாஜி கணேசன் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார். அதுவே பின்னாளில் திரைப்படங்களில் நடிக்கவும் காரணமானது. 'வெண்ணிற ஆடை' படத்தில் இயக்குநர் ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தொடர்ந்து எம்.ஜி.,ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் எனப் பலருடன் கதாநாயகியாக நடித்தார்.

பின் திரைப்படத்துறையிலிருந்து விலகினார். எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர், முதலில் எம்.பி. ஆகப் பணியாற்றினார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னான அரசியல் சூழலில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். எதிர்க்கட்சித் தலைவரானார். அடுத்துவந்த தேர்தலில் வென்று முதலமைச்சரானார். சைக்கிள், காலணி, புத்தகப்பை, லேப்டாப் எனப் பல நல்ல விலையில்லாத் திட்டங்களை மாணவர்கள் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தினார். இவர் அறிமுகப்படுத்திய 'தொட்டில் குழந்தைத் திட்டம்' உலக அளவில் பாராட்டப் பெற்றதாகும். அவர் அறிமுகப்படுத்திய 'அம்மா உணவகம்' இன்றைக்குப் பல மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தெரிந்தவர். இசை ரசிகர். பியானோ வாசிக்கக் கற்றவர். இளவயதில் தமிழ்ப் பத்திரிகைகளில் கதை, கட்டுரை, நாவல்கள் எழுதியிருக்கிறார்.

சென்னை அப்போலோவில் 75 நாட்கள் தொடர்சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட இதயக் கோளாறால் மரணமடைந்தார். மறைந்த முதல்வருக்குத் தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com