திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயம்
முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த புனிதன்
பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன்
தனியன் சேயன் தானொருவனாகிலும் தன்னடியார்க்கு இனியன்
எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே.

(திருமங்கையாழ்வார்)

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் ரயில் பாதையில் அமைந்துள்ளது திருவள்ளூர். சென்னையிலிருந்து நிறையப் பேருந்துகள் செல்கின்றன. கோவில் பேருந்துநிலையத்திற்கு அருகிலேயே உள்ளது.

108 திவ்யதேசங்களில் ஒன்று இத்தலம். திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தூப்புல் வேதாந்ததேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இது தொண்டைநாட்டின் முக்கியப் பதிகளுள் ஒன்று. 'வீட்சாரண்யம்' என்ற பெயரும் உண்டு. வள்ளலார் பெருமான் இத்தலத்து இறைவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். இறைவன் திருநாமம், 'திருஎவ்வூர் கிடந்தான்' என்கிற வீரராகவப் பெருமாள். தாயார், வசுமதி என்னும் கனகவல்லித் தாயார். தீர்த்தம், ஹ்ருத்தாபநாசினி புஷ்கரணி. மகிமை வாய்ந்த இது, ஆலயத்தின் மேற்கில் அமைந்துள்ளது.

புத்திரப் பேறின்றி வருந்திய பிரத்யும்ன மஹராஜன் இத்தீர்த்த மஹிமையைக் கேள்விப்பட்டு ஸ்ரீமன் நாராயணனை வேண்டித் தவம்செய்தார். பகவான் மன்னனின் பக்திக்கு மனமிரங்கிக் காட்சிதந்தார். அவரிடம் "இங்கு வந்து வேண்டுபவருக்கு புத்திரபாக்கியம் அருளுவதுடன், பூமியில் உள்ள எல்லாத் தீர்த்தங்களைக் காட்டிலும் இத்தீர்த்தத்திற்கு அதிக மகிமை உண்டாகவேண்டும்" என்று மன்னன் வேண்டினான். பகவானும் அவ்வாறே அருளினார். அனைத்து மகரிஷிகள் உள்ளிட்டோர் இந்தத் தீர்த்தத்தில் நீராடி இறைவன் அருள்பெற்றதாக வரலாறு. புருபுண்யர் என்னும் முனிவர் மஹாவிஷ்ணுவிடம் சத்புத்திரன் வேண்டித் தவம்செய்தார். சாலி யக்ஞத்தின் விளைவால் பிறந்த குழந்தைக்கு 'சாலி கோத்ரா' என்று பெயர் சூட்டினார். சாலி கோத்ர முனிவரும் சிறந்த விஷ்ணுபக்தர். தினமும் பெருமாளுக்காக தினைமாவு செய்து, நிவேதித்து, யாருக்காவது கொடுத்தபின்பு தான் உண்பது என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒருநாள் பூஜையின்போது முதியவர் ஒருவர் வந்து உணவுகேட்டார். முனிவரும் தினைமாவை அவருக்கு அளித்தார். தான் களைப்பாக இருப்பதாகச் சொன்ன முதியவர், முனிவரிடம் தான் எங்கே படுப்பது என்ற பொருளில், "எவ்வுள்?" என்று ஒரே வார்த்தையில் கேட்டு, பின் மகாவிஷ்ணுவாகக் காட்சி அளித்தார். அதனால் பெருமாளுக்கு "எவ்வுள் கிடந்தான்" என்ற நாமம் அமைந்து, ஊரும் 'திருஎவ்வுளூர்' எனப் பெயர் பெற்று நாளடைவில் மருவி 'திருவள்ளூர்' ஆயிற்று.

கனகவல்லித் தாயார் இப்பகுதியை ஆண்ட 'தர்மசேனன்' என்ற ராஜாவின் மகளாகப் பிறந்தார். மகளுக்கு நல்லவரன் அமையப் பெருமாளை வேண்டினான் மன்னன். பெருமாளும் இளைஞனாக வடிவங்கொண்டு கனகவல்லித் தாயாரை திருமணம் செய்துதரும்படிக் கேட்க, மன்னன் தன் மகளை மணம் முடித்துத்தந்தான். பின்னர் இருவரும் சுவாமி சன்னதிக்குள் சென்று மறைந்தனர். தன்னிடம் மகளாக வளர்ந்தது கனகவல்லித் தாயார்தான் என அறிந்து மன்னன் பரவசப்பட்டான். வசுமதி என்ற பெயரும் தாயாருக்கு உண்டு. பின் தாயாருக்கு தனிச்சன்னிதி கட்டப்பட்டது.

ஒருசமயம் மகரிஷிகள் சிலர் இங்கு யாகம் நடத்தியபோது இரண்டு அசுரர்கள் யாகம் நடத்தவிடாமல் செய்ததால் ரிஷிகள், மகாவிஷ்ணுவை வேண்ட, அவர் அசுரர்களை வென்று யாகம் நடத்த உதவினார். இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் 'விஜயகோடி' விமானம் அமைக்கப்பட்டது.

கோயில் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. திருமங்கை ஆழ்வார் பாசுரத்தில் ராவணனை சம்ஹாரம் செய்த ராமன் பள்ளிகொண்டிருப்பதாக மங்களாசாசனம் செய்துள்ளார். கோவில் ஐந்தடுக்கு ராஜகோபுரத்தை உடையது. வீரராகவப்பெருமாள், வைத்ய வீரராகவப்பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். பெருமாள் புஜங்க சயனத்தில் கிழக்குநோக்கி உள்ளார். வலதுபுறம் சாலிகோத்ர மகரிஷி இடதுபுறம் பிரம்மாவுக்கு உபதேசிக்கும் ஞானமுத்திரையுடன் காட்சி தருகிறார். சந்தனத் தைலத்தால் பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. கனகவல்லித் தாயார் சன்னிதி அருகிலுள்ளது. ஆழ்வார், கணேசர், கஜலட்சுமித் தாயார், கோபாலன், நம்மாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ராமானுஜாசார்யர், லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், ஹனுமான் சன்னிதிகளும் அமைந்துள்ளன. சாலிகோத்ர மகரிஷிக்கு தை அமாவாசையன்று பெருமாள் காட்சி தந்ததால் தை அமாவாசை வழிபாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும் என்பது ஐதீகம். சிவபெருமான் தனது தோஷம் நீங்க இத்தலத்துப் பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றதாக வரலாறு. தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் 9 கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளைத் தரிசித்தால் தீராதநோய் நீங்கிப் பாவம் அகலும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் வசித்த பேசமுடியாத ஒருவர் அமாவாசைதோறும் இங்கு தீர்த்தமாடுவார். வாழ்நாள் முழுவதும் பேசாத இவர், இறுதிக்காலத்தில் "பெருமாள் வந்து என்னை அழைத்துப் போகிறார்" என்று இரண்டுமுறை சொல்லி உயிர்நீத்தார். தன்னை வழிபட்டவர்களைப் பெருமாளே வந்து அந்திம காலத்தில் அழைத்துச் செல்வதாக ஐதீகம்.

இத்தலத்தில் அமாவாசை சிறந்த வழிபாட்டு நாளாகக் கருதப்படுகிறது. பிரம்மோத்சவம், சித்திரை உற்சவம் நடைபெறுகிறது. கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாத சனிக்கிழமை, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பக்தவச்சலப் பெருமாளுக்கும் கண்ணமங்கைத் தாயாருக்கும் தினசரி ஆறுகால பூஜை பாரம்பரிய முறைப்படி நடக்கிறது.

சீதாதுரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com