விந்தைகள்
(பெ.நா.அப்புஸ்வாமி எழுதிய 'அற்புத உலகம்' நூலில் இருந்து)

சற்றேறக்குறைய இரண்டாயிரத்து அறுநூறு வருஷங்களுக்கு முன்னே பாபிலோனியாவிலே நேபுகாத் நேசார் என்னும் சக்கரவர்த்தி ஒருவன் இருந்தான். பாபிலோனியா ஒரே சமவெளியான பிரதேசம். அங்கே பெயருக்குக்கூட மலைகள் கிடையா. அவ்வரசனுக்கு உயிருக்குயிரான மனைவி ஒருத்தி இருந்தாள். அவள் மலைநாட்டிலிருந்து வந்தவள். பாபிலோனியாவின் சமவெளிகளைப் பார்த்துப் பார்த்து அவளுடைய அழகிய கண்கள் அலுத்துப் போயின. மலைநாட்டின் ஏற்றத்தையும், தாழ்வையும், உயர்வையும் சரிவையும் அவள் மீண்டும் பார்க்க விரும்பினாள். 'சக்கரவர்த்தியின் மனைவியாயிருந்தும் இயற்கையின் அழகை அநுபவிக்கும் பாக்கியம் நமக்கு இல்லையே!' என்று அவள் ஏங்கி மனம் வருந்தினாள். அவளுடைய வாடிய மனத்தைக் குளிர்விப்பதற்காகவும், அவளுடைய குவிந்த முகத்தை மலர்விப்பதற்காகவும் அரசனால் ஒரு பூந்தோட்டம் அமைக்கப்பட்டது.

இவ்வாச்சரியமான தோட்டமானது உப்பரிகையின்மேல் உப்பரிகையாகக் கட்டப்பட்டது. மேல் உப்பரிகையின் உயரம் முந்நூறு அடி. ஒவ்வோர் உப்பரிகையிலும் செடிகள், கொடிகள், மரங்கள். ஆ! எத்தனே நிறநிறமாய்ப் பூக்கும் புஷ்பச்செடிகள்! எத்தனை மரங்கள்! சோலைகள்! மேலும் கீழுமாய், மேடும் பள்ளமுமாய் மலைப்பிரதேசத்தைப் போலவே அமைந்திருந்தது இத்தோட்டம். இந்தத் தோட்டத்திலே எங்கே பார்த்தாலும் ஓடைகள் சலசலவென்று ஓடிக்கொண்டிருந்தன. நகரத்துக்குப் பக்கத்திலுள்ள யூப்ரடீஸ் நதியின் நீரை எத்தனையோ எந்திரங்கள் இறைத்து இத்தோட்டத்தில் பாய்ச்சின. பூந்தோட்டத்தில் உலவிவாழ்ந்த அரசி வெளியுலகத்தையே மறந்தாள்; பாபிலோனியாவின் சமவெளியையும் மறந்தாள். அவள் மனம் தளிர்த்துத் தழைத்தது; அவள் முகமும் மலர்ந்து சிரித்தது. தூர இருந்து பார்ப்போர் கண்களுக்கு அந்தத் தோட்டம் வானவெளியிலே தொங்குவதாகவே தோன்றிற்று. அரசனுடைய அன்பினால் பிறந்த அழகிய பூந்தோட்டம் சிலகாலமே நிலைத்திருந்தது; அந்தோ! காலத்தின் கொடுமையால் அழிந்து போய்விட்டது.

*****


சற்றேறக்குறைய இரண்டாயிரத்து நானூறு வருஷங்களுக்கு முன்னே கிரீஸ் தேசத்திலே பைடியஸ் என்ற ஒருவர் இருந்தார். அவர் மிகவும் புகழ்பெற்ற சிற்பி. அவர் கிரேக்க நாட்டின் பெருந்தெய்வமான ஸியுஸ் என்னும் கடவுளின் விக்கிரகம் ஒன்றைச் செய்தார். ஒலிம்பியா என்னும் இடத்திலே அதை ஸ்தாபித்தார். அந்த விக்கிரகத்தின் உயரம் அறுபது அடி. பொன்னாலும் தந்தத்தாலும் செய்யப்பட்ட அந்தத் தெய்வ விக்கிரகமானது மகோன்னதமாக வீற்றிருந்தது. அதன் அளவையும், காம்பீரியத்தையும், விலை மதிப்பையும், அழகையும் உலகம் கண்டு, எண்ணி, பாராட்டிக் கொண்டாடிற்று. அந்தோ! அதுவும் முற்றிலும் அழிந்து போயிற்று.

*****


இந்த விந்தை தோன்றி இருநூறு வருஷங்களுக்குப் பிறகு, அதாவது சுமார் இரண்டாயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன்பு, கிட்டத்தட்ட ஒரே காலத்தில் நான்கு விந்தைகள் தோன்றின. அவற்றுள் மூன்றை இயற்றியவர் கிரேக்க நாட்டுச் சிற்பிகள்.

ஆசியா மைனர் எனப்படும் தேசத்திலே முன்காலத்திலே கிரேக்கர்கள் மிகுதியாகக் குடியேறி வந்தார்கள். அங்கே உள்ளது எபீஸஸ் என்னும் சிறு நகரம். அந்தப் பிரதேசத்தில் உள்ள அந்நாட்டுப் பழைய ஜனங்கள் ஏதோ ஓர் இயற்கைத் தேவதையை வணங்கிக்கொண்டிருந்தார்கள். அந்தத் தெய்வமும் தாங்கள் வணங்கி வந்த ஆர்டிமிஸ் என்னும் பெண் தெய்வமும் பல அமிசங்களில் ஒத்திருப்பதைக் கண்ட கிரேக்கர்கள் அவ்விரண்டு தெய்வங்களையும் ஒன்றாக்கி, அதற்குக் கோயில் ஒன்றை எபீஸஸ் நகரத்திலே கட்டினார்கள். அந்தத் தேவதையை வழிபடுவோரின் தொகை நாளுக்கு நாள் மிகுந்துகொண்டு வரவே, அதற்கு ஏற்பக் கோயிலையும் அவர்கள் பெரிதாக்கிக்கொண்டே வந்தார்கள். இப்படிப் பல திருப்பணிகள் நடந்தன. ஐந்தாம் முறை திருப்பணி செய்து சிறப்பாக்கிய பெருங்கோயிலானது சுமார் இரண்டாயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன் கட்டிமுடிந்தது. ஐந்நூறு, அறுநூறு வருஷ காலம் உலகத்தில் அது புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருந்தது. பிறகு அந்நாட்டைப் படையெடுத்து வந்த அந்நிய நாட்டார் அதைச் சூறையிட்டு, நெருப்புக்கு இரையாக்கிப் பாழ்படுத்தினர். தெய்வத் திருக்கோயில் மண்ணோடு மண்ணாகிவிட்டது. அக்கோயிலிலிருந்த தூண்களின் சிதைவுண்ட அடிப்பாகங்களிற் சில இப்பொழுது லண்டன் மாநகரிலுள்ள காட்சிச்சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

*****


கிட்டத்தட்ட அதே காலத்தில், அதே நாட்டின் வேறொரு பாகத்தில் ஹெலிகர்னாஸஸ் என்னும் இடத்தில் மாஸோலஸ் என்னும் சிற்றரசன் ஒருவன் இருந்தான். அவன் மரணமடைந்ததும் அவனுடைய பிரிவாற்றாமைக்கு மிகவும் வருந்திய அவனுடைய மனைவி, அவனுடைய உடலை அடக்கம் செய்த இடத்திலே, அவனுடைய ஞாபகச்சின்னம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று எண்ணினாள். அந்தக் காலத்திலே பல்வகைக் கலைகளுக்கும் பெயர்போன கிரேக்க நாட்டிலிருந்து சிறந்த சிற்பிகளை வரவழைத்தாள். அச்சிற்பிகள் அரசனுடைய சமாதியின் மேலே நீண்ட சதுர வடிவமான ஒரு மேடையைக் கட்டினார்கள். அதற்குமேலே வேலைப்பாடமைந்த தூண்களை நிறுத்தினர்கள். அதற்கும் மேலே ஒரு தளவரிசையையும், அதன்மேலே நான்கு குதிரைகள் பூட்டிய அழகிய தேரையும் நியமித்தார்கள். அந்தத் தேரின் தட்டிலே அரசன், அரசி ஆகிய இருவருடைய பிரதிமைகளையும் வைத்தார்கள். அதைப்போல் அழகிய சமாதியை உலகத்தார் அதுவரையிலும் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. மாஸோலஸ் அரசனுடைய சமாதி என்பதால் அதற்கு மாஸோலியம் என்று பெயர் வழங்கலாயிற்று. சமாதி செய்த இடத்தில் கட்டப்படும் அழகிய ஞாபகச் சின்னத்தை இன்றளவும் 'மாஸோலியம்' என்று சொல்லுவதிலிருந்து அதன் சிறப்பு ஒருவாறு விளங்கும். ஆனால், மாஸோலஸ் அரசன் அடைந்த கதியை அவனுடைய சமாதியும் அடைந்துவிட்டது.

*****


கிரீஸ் தேசத்துக்கு அடுத்த ஈஜியன் கடலிலே, ஆசியா மைனர் நாட்டின் தென்மேற்குப் பாகத்துக்கு அடுத்தாற்போல் உள்ளது ரோட்ஸ் என்னும் சிறு தீவு. அந்தத் தீவிலே குடியேறிய கிரேக்கர்கள் சூரிய தேவனது விக்கிரகம் ஒன்றை அமைத்தார்கள். அதன் உயரம் நூறு அடி. கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்டதன்று அவ்வுருவம். செம்பையும் ஈயத்தையும் உருக்கி வார்த்த விக்கிரகம் அது. அங்கே உள்ள துறைமுகத்தின் வாயிலுக்குக் காவலாக அப்பெரும் பிரதிமையானது நின்றுகொண்டிருந்தது. அதன் ஆயுள் வெகுசீக்கிரம் முடிந்துவிட்டது. அதை நிலைநிறுத்தி அறுபது வருஷங்கள் ஆகுமுன் அந்த நாட்டிலே ஒரு பூகம்பம் உண்டாயிற்று. அப்போது அந்த விக்கிரகம் ஆடிச் சாய்ந்து கீழே விழுந்து துண்டு துண்டாய் உடைந்து போயிற்று. சற்றேறக்குறைய ஓர் ஆயிர வருஷ காலம் அது மண்ணோடு மண்ணாய்க் கிடந்தது. பிறகு உடைந்து சிதறிக் கிடந்த துண்டுகளை அங்குள்ளோர் பொறுக்கி எடுத்துப் பழைய வெண்கல விலைக்கு ராத்தற் கணக்காக எடை போட்டு விற்றார்கள். என்ன கொடுமை!

*****


எகிப்து தேசத்திலே அலெக்ஸாந்திரியா நகரத்துக்குப் பக்கத்திலே உள்ள சிறு தீவு ஒன்றுக்குப் பாரோஸ் என்பது அக்காலத்துப் பெயர். அந்தத் தீவின் கீழ்ப்புறத்திலே எகிப்து நாட்டு மன்னர் மன்னனாகிய இரண்டாம் டாலெமியரசன் கலங்கரைவிளக்கம் ஒன்றைக் கட்டுவித்தான். அவ்விளக்கம் ஐந்நூறு அடி உயரமுள்ளதாயும், அடி முதல் சிகரம் வரையில், முழுவதும், வெள்ளை வெளேரென்ற தூய சலவைக்கல்லால் கட்டப்பட்டதாயும் இருந்தது. அதன்மீது வெயில்படும்போது அந்த ஸ்தம்பம் முழுவதுமே ஒளி வடிவமாகத் தோன்றுமாம். அழகும் பயனும் ஒருங்கு சேர்ந்து உருவெடுத்தது அக்கலங்கரை விளக்கம். அதுவும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

*****


பண்டைக் காலங்களிலே எகிப்து தேசமானது நாகரிகத்தில் சிறந்து விளங்கியது. அத்தேசத்து மன்னர்களுக்குப் பார்வோன்கள் என்று பெயர். அவர்கள் இறந்துபோன பிறகு அவர்களுடைய உடலுக்குப் பரிமள கந்தங்களிட்டுப் பக்குவப்படுத்துவது அந்நாட்டு முறை. அவர்கள் இவ்வுலகத்தை விட்டுப் பரலோகம் சென்றபோது, இம்மையில் அவர்கள் அநுபவித்த சுகங்களையெல்லாம் மறுமையிலும் அவர்கள் அடையும் பொருட்டு, அவர்களுடைய மனைவியர்களையும் ஏவலாட்களையும், தேர் குதிரை முதலிய வாகனங்களையும், ஆபரணங்களையும், பொன்னையும், விசிறி, சாமரம் முதலியவற்றையும் அவர்களோடு அடக்கம் செய்வது வழக்கம். அவை அனைத்தையும் ஒன்றாக வைக்கும் பொருட்டுக் கட்டிய பெரிய சமாதிகளுக்குப் பிரமிடுகள் என்று பெயர். அடிப்புறத்திலே அகன்று சச்சவுக்கமாகவும், உச்சிப்புறம் சிறுத்து முனையாகவும் உள்ளது அவற்றின் வடிவம். எகிப்து நாட்டிலே சுமார் எழுபத்தைந்து பிரமிடுகள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானவை கீஸே என்னும் இடத்திலுள்ள மூன்று பெரிய பிரமிடுகள். அவற்றுள் ஒன்று மிகமிகப் பெரியது. அதன் அடிப்புறத்திலே ஒவ்வொரு பக்கத்தின் அளவும் கிட்டத்தட்ட ஒன்றரை மைல் நீளம் உள்ளதாக இருக்கிறது. அதன் உயரம் நானூற்று எண்பத்தோரடி. அதிலுள்ள கற்களைக்கொண்டு சென்னை ராஜதானி, மைசூர், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை ஆகிய இவற்றைச் சுற்றி ஒரு கற்சுவர் கட்டலாமாம்! கட்டினது போகக் கற்களும் மிஞ்சும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

அது சுமார் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னாலே கட்டப்பட்டது. ஆதலால் முற்கூறிய விந்தைகள் எல்லாவற்றைக் காட்டிலும் அது காலத்தால் முற்பட்டது. அதற்குப் பிற்பட்டுத் தோன்றிய மற்ற விந்தைகள் யாவும் அழிந்துபோன போதிலும், இன்றுவரை அது தங்கி நிற்கின்றது. காலம் செல்லச் செல்ல அதன் விந்தை மிகுந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். ஆயினும் இக்காலத்தில் நாம் அதையுங்கூட அவ்வளவு பெரிய விந்தையாக மதிப்பதில்லை.

ஏன்?

அதனினும் பெரிய விந்தைகள் இப்பொழுது நம்முடைய மனத்தைக் கவர்ந்துவிட்டன. பழைய விந்தைகளுக்கு நமது மனத்தில் இடமில்லாமல் போய்விட்டது. இவ்வாறு நமது சின்னஞ்சிறு மனத்திலே வந்து குடிகொண்ட புதிய விந்தைகள் ஒன்றிரண்டல்ல; அவை எத்தனையோ ஆகி விட்டன.

ஆகாயத்தில் பக்ஷிகளைக் காட்டிலும் உயரமாய்ப் பறப்பது, கடலில் மீன்களைக் காட்டிலும் வேகமாய் நீந்துவது, நிலத்தின்மேல் காற்றைக் காட்டிலும் கடுமையாய்ச் செல்வது, ஓரிடத்திலுள்ளோர் ஒருவர் பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள மற்றொருவரோடு பேசுவது, அவ்வாறே ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது, இரும்புப் பெட்டிக்குள் இருக்கும் பொருளையும் பளிங்குப் பெட்டியில் இருப்பதைப்போல் காண்பது, புண்ணில் கனல் நுழையினும் நோவில்லாதிருப்பது, ஆகாசவாணி அசரீரியாய்ப் பேசுவது, எமதூதர்கள் போன்ற கொடிய நோய்களோடு போராடி அவைகளை வெல்வது முதலிய விந்தைகள் நாள்தோறும் நிகழ்கின்றன. இவற்றினிடையே கல்லுக்கும் கட்டடத்துக்கும் இடம் ஏது? பழைய விந்தைகள் போயின. புது விந்தைகள் வந்து குவிந்து கொண்டேயிருக்கின்றன.

இவை யாவற்றினும் பெரிய விந்தை இன்னும் ஒன்று இருக்கிறது. என்னவெனில், நாம் வாழும் அற்புத உலகத்தில் நமது கண்ணெதிரில் நிகழ்ந்து கொண்டேயிருக்கும் இத்தனை விந்தைகளையும் நாம் கண்டும் கேட்டும் அநுபவித்தும் வந்த போதிலும், இவற்றின் நுட்பங்களைச் சிறிதேனும் அறிந்துகொள்ள முயலாதிருக்கும் விந்தையே அவ்விந்தை,

பெ.நா.அப்புஸ்வாமி

© TamilOnline.com