அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இருந்தார். அந்தப் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை வேண்டும் என்று தனது நெருங்கிய உறவினரைச் சந்தித்து எழுதச் சொன்னார். அந்த உறவினருக்கு ஆங்கிலம் நன்கு தெரியும். வடமொழியும் கற்றிருந்தார். ஆனால் தமிழில் எழுதக் கொஞ்சம் தயக்கம். "நான் தமிழை முறையாகப் படிக்கவில்லை; என் மனைவிக்கு ஒரு காதல் கடிதம்கூட எழுதியதில்லை; நான் எப்படித் தமிழில் எழுதுவேன்!" என்று சொல்லி வருந்தினார். "இதோ பார்! உனக்குத் தமிழில் ஆர்வம் உண்டு என்பது எனக்குத் தெரியும். 'நைடதம்', 'கம்பராமாயணம்' எல்லாம் விரும்பி வாசித்தவன் நீ என்பதும் அறிவேன் தமிழ்ப்புலமை மிக்க பலர் உனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதும் தெரியும். அதனால் இந்தத் தயக்கமெல்லாம் வேண்டாம். நீ எழுது. தேவைப்பட்டால் நான் திருத்திக்கொள்கிறேன்" என்று சொல்லவே அவர் எழுதினார். அக்காலத்தின் பிரபலமான 'தமிழ்நேசன்' பத்திரிக்கையின் ஜூலை 1917 இதழில், 'பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா?' என்னும் அக்கட்டுரை வெளியானது. அதுதான் அவரது முதல் கட்டுரை. அதன் பிறகு அவர் எழுதிய கட்டுரைகள் ஐயாயிரத்திற்கு மேல். புத்தகங்களோ ஐம்பதுக்கும்மேல். முதலில் அவ்வாறு எழுதத் தயங்கி, பிற்காலத்தில் இப்படி எழுதிக் குவித்தவர்தான் பெருங்குளம் நாராயணையர் அப்புஸ்வாமி என்னும் பெ.நா. அப்புஸ்வாமி. அவரை எழுதத் தூண்டியவர் பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாசிரியருமாகிய அ. மாதவையா.
'அறிவியல் தமிழர்' என்று போற்றப்படும் பெ.நா. அப்புஸ்வாமி, திருநெல்வேலியை அடுத்த பெருங்குளத்தில் டிசம்பர் 31, 1891ல் நாராயணையருக்கும், அம்மணி அம்மாளுக்கும் மகவாகப் பிறந்தார். தந்தை மருத்துவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமைமிக்கவர். துவக்கக்கல்வியை முடித்த பெ.நா., மேற்கல்வியை சென்னை ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பிற்காலத்தில் புகழ்பெற்ற பி.ஸ்ரீ. ஆச்சார்யா, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, எஸ். வையாபுரிப்பிள்ளை, கா. சுப்பிரமணியப் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் பலர் இவருடன் அக்காலத்தில் உடன்பயின்றனர். பெ.நா.வுக்கு இளவயதிலேயே சுப்புலட்சுமி அம்மையாருடன் திருமணம் நிகழ்ந்தது. சென்னை மாநிலக்கல்லூரியில் வேதியியல் பி.ஏ. பட்டம் பெற்றிருந்த பெ.நா. மருத்துவம் படிக்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பயிலவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் மனம் வருந்திய அப்புஸ்வாமி, பேராசிரியர் ஜே.எல். சைமன்ஸனிடம், "உங்களிடம் நான் கற்றதை வீணாக்காமல் பயன்படுத்துவேன்" என்று வாக்குத் தந்தார். (பிற்காலத்தில் அதனை அவ்வாறே அறிவியல் கட்டுரைகள் எழுதி நிறைவேற்றினார்). முயன்று பயின்று பி.எல். பட்டம் பெற்றார். வழக்குரைஞராகப் பணி துவங்கினார்.
விவேக சிந்தாமணியின் ஆசிரியர் சி.வி. சாமிநாதையர், பெ.நா.வின் தந்தைக்குத் நெருங்கிய நண்பர். தந்தையின் தமிழறிஞர்களான நண்பர்கள் பலர் அடிக்கடி இல்லத்துக்கு வந்து சென்றதால் அப்புஸ்வாமிக்கு இயல்பிலேயே தமிழார்வம் சுடர்விட்டது. சித்தப்பா அ. மாதவையா பிரபல எழுத்தாளராக விளங்கியது ஆர்வத்தை அதிகரித்தது. அவர் தூண்டுதலால் எழுத ஆரம்பித்தார். முதலில் சிறுவர்களுக்காகச் சிறு சிறு கட்டுரைகளும், மகாபாரதம், ராமாயணம், நாடோடிக் கதைகள் போன்றவற்றிலிருந்தும் சிறுகதைகளை எழுதினார். பின்னர் அறிவியலை மையமாக வைத்து அனைவருக்கும் எளிய தமிழில் எழுத ஆரம்பித்தார். பாரதமணி, தமிழர் நேசன், குமரிமலர், தியாகபூமி, பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் அவை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. தமிழர் நேசன் தமிழில் வந்த முதல் அறிவியல் இதழ். அதில் குறிப்பிடத்தகுந்த பல கட்டுரைகளை பெ.நா. எழுதினார். ஈழகேசரி, தமிழ்க்கடல், அமுதசுரபி, திரிவேணி, கண்ணன், செந்தமிழ், வீரகேசரி, கலைக்கதிர், தினமணி, தினமணிசுடர், தமிழ்ப்பொழில், கலைமகள், இளம் விஞ்ஞானி, ஆனந்தவிகடன், Junior Scientist, The Hindu, Indian Express, Indian Affairs, Vishva Bharathi என்று பல இதழ்களில் அவர் எழுதியிருக்கிறார். தமிழர் நேசன், கலைமகள், இளம் விஞ்ஞானி போன்ற இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். மர்ரே நிறுவன அதிபரான எஸ். ராஜம் பல தமிழ் இலக்கியங்களைத் தொகுப்பாகக் கொண்டு வந்தபோது அவை செம்மையாக வெளிவர இவர் ஆற்றியிருக்கும் உதவி குறிப்பிடத்தகுந்தது.
தமிழில் அரிய, பெரிய அறிவியல் உண்மைகளை எளிதில் புரியவைக்க முடியாது என்ற நம்பிக்கையைப் பொய்யாக்கி ஆயிரக்கணக்கில் அறிவியல் கட்டுரைகளை எளிய தமிழில் தந்தவர் என பெ.நா. அப்புஸ்வாமியைச் சொல்லலாம். அறிவியலைப் பொறுத்தவரை இவர் எழுதாத துறை இல்லை; தொடாத பிரிவே இல்லை என்னுமளவிற்கு எழுதியிருக்கிறார். 1936ல் காற்றடைக்கப்பட்ட ராட்சத பலூன்களில் நடந்த விண்வெளி யாத்திரைபற்றி எழுதியிருக்கிறார். ராக்கெட் பற்றி, செயற்கைக்கோள் பற்றி எழுதியிருக்கிறார். ரேடார் கருவிகள் பற்றி விளக்கியிருக்கிறார். கம்ப்யூட்டர் பற்றிச் சிந்தித்திருக்கிறார். சமீபத்தில் உலகை அச்சுறுத்திய 'ஆந்த்ராக்ஸ்' பற்றியும் அக்காலத்திலேயே எழுதியிருக்கிறார் என்பதன் மூலம் அவரது மேதைமையை அறிந்து கொள்ளலாம். குழந்தைக் கவிஞர் கவிமணியைக் குழந்தைப் பாடல்கள் எழுதத் தூண்டியவர் பெ.நா. அப்புஸ்வாமிதான். அதுபோல பிற்காலத்தில் நோபல்பரிசு பெற்ற டாக்டர் சந்திரசேகர் பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிமுகப்படுத்தி, அவரது திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டியவரும் இவரே! ராஜாஜி, டி.கே.சி., எஸ். வையாபுரிப்புள்ளை, ரா.பி. சேதுபிள்ளை. அ. சீனிவாசராகவன் போன்றோர் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். எஸ்.எஸ். வாசன், ஏ.என். சிவராமன், கி.வா.ஜ., கல்கி, டி.வி. ராமசுப்பையர், நாராயணசாமி ஐயர் போன்றோர் இவரது பத்திரிகையுலக நண்பர்கள். பெ.நா. அப்புஸ்வாமியின் ஆலோசனையின் பேரிலேயே கலைமகள் பத்திரிகையை 1932ல் நாராயணசாமி ஐயர் தொடங்கினார். மயிலை சித்திரைக் குளத்துக்கு அருகில் இருந்த பெ.நா. அப்புஸ்வாமியின் இல்லத்தில்தான் 'கலைமகள்' மாத இதழ் தொடங்கப்பட்டது.
நேரடி எழுத்து, மொழிபெயர்ப்பு என்று பல நூல்களை எழுதியிருக்கிறார் பெ.நா. அற்புத உலகம், அணுவின் கதை, அற்புதச் சிறுபூச்சிகள், பூமியின் உள்ளே, பயணத்தின் கதை, இந்திய விஞ்ஞானிகள், சர்வதேச விஞ்ஞானிகள், மின்சாரத்தின் விந்தை, வானொலியும் ஒலிபரப்பும் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தகுந்தன. இவற்றில் 'அற்புத உலகம்' சென்னை, அண்ணாமலை, திருவிதாங்கூர் பல்கலைக்கழகங்களில் இண்டர்மீடியட் தேர்வுக்குப் பாடமாக இருந்த சிறப்பை உடையது. இவரது நூல்கள் பலவற்றையும் 'நவயுக பிரசுராலயம்' வெளியிட்டுப் பெருமை சேர்த்தது (தற்போது சில நூல்கள் டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் மறுபதிப்புக் கண்டுள்ளன).
சிறுவர்களுக்காக ஜே.பி.மாணிக்கத்துடன் இணைந்து இவர் எழுதியிருக்கும் 'சித்திர விஞ்ஞானம்', 'சித்திர வாசகம்', 'சித்திர கதைப்பாட்டு' போன்ற புத்தகங்களும் முக்கியமானவை. Science & Common Sense (விஞ்ஞானமும் விவேகமும்), Our Nuclear Future (அணுசக்தியின் எதிர்காலம்), Report on the Atom (அணுயுகம்), Rockets and Satellites (ராக்கெட்டும் துணைக்கோள்களும்), Aeroplane (வான ஊர்தி-ஏரோப்ளேன்), Space Travel (விண்வெளிப் பயணம்) என 25 அறிவியல் நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அறிவியல் நூல்கள் மட்டுமல்லாது, முத்தொள்ளாயிரம், குறிஞ்சிப் பாட்டு ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். 'Tamil Verse in Translation' என்ற தலைப்பில் சங்க இலக்கியப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் இலக்கியம் பற்றி இவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள 'A Bunch of Essays in Tamil Literature' என்ற கட்டுரை நூல் குறிப்பிடத் தகுந்தது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவரது பல படைப்புகள் இன்னமும் பதிப்பிக்கப்படவில்லை என்பது ஒரு சோகம்.
கிரிக்கெட், இறகுப்பந்து விளையாட்டுகளிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. இசையிலும் புலமைமிக்கவர். இசைசார்ந்த கட்டுரைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். பேனா, முத்தண்ணா, பேராசிரியர் விஞ்ஞானம் என்று பல புனைபெயர்களில் எழுதியிருக்கிறார். சென்னை வானொலி நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளைத் தந்திருக்கிறார். இவரது நூல்கள் பலவும் பல்கலைக் கழகங்களால் பாராட்டப்பட்ட சிறப்பைக் கொண்டவை. சென்னைப் பல்கலையின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். பல்வேறு இலக்கியக் குழுக்களிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். இந்திய வானொலி நிலையத்தின் ஆலோசகர், இந்திய அரசியல் சட்ட மொழிபெயர்ப்புக் குழுவில் உறுப்பினர், அறிவியல் கலைச்சொல் குழு, சட்ட கலைச்சொல் குழு போன்றவற்றில் உறுப்பினராக இருந்த பெருமை மிக்கவர். இவரது தமிழ்ப்பணியைப் பாராட்டி மதுரைப் பல்கலைக்கழகம், 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்ற பட்டம் வழங்கியது. தமிழ் எழுத்தாளர் சங்கம், குழந்தை எழுத்தாளர் சங்கம் இரண்டுமே இவரது எழுத்துப்பணியைப் பாராட்டி கௌரவித்துள்ளன. தஞ்சைப் பல்கலைக்கழகமும் இவரது சேவையைப் பாராட்டி கௌரவித்துள்ளது. Powell & Monehead விருதை மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றிருக்கிறார். இவரது சில நூல்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் விருதளித்துள்ளது. 'வானத்தைப் பார்ப்போம்' என்ற நூல் யுனெஸ்கோ விருது பெற்றதாகும்.
"மக்கள் அறிவியலைக் கற்று அறிவியல் மனநிலையைப் பெற்று, அதற்கிணங்க நடந்துவந்தால் அவர்கள் செம்மைப் பண்பு உடையவர்கள் ஆவார்கள். நாடு செழித்து மேன்மை பெறும்" என்பது பெ.நா. அப்புஸ்வாமியின் கருத்து. அறிவியல் கலைச்சொற்களைத் தமிழில் கொண்டு வருவதிலும் அவர் சிறந்த முன்னோடியாகத் திகழ்ந்தார். Aquarium (நீர்ப்பிராணிக் காட்சிச்சாலை), Accelerator (துரிதகாரி), Artesian Well (பொங்கியெழுகேணி), Atomoc Fission (அணுப்பிளவு), Corpuscullar Theory (நுண்துகள்கொள்கை), Electron (மின்னணு), Element (மூலகம்), Intelligent Quotient (அறிவுக்குறி எண்), Foundry (வார்ப்படச்சாலை) Hailstone (ஆலங்கட்டி), Rock Crystal (பளிங்குப் படிகம்), Rocket (உந்து கருவி), Satellite (துணைக்கோள்), Verdi Gris (பச்சைக் களிம்பு) என்பன போன்ற எண்ணற்ற கலைச்சொற்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.
"சட்ட நிபுணராக இருந்தும் அவர் இலக்கியத்திலும் விஞ்ஞானத்திலும் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். அவரைப்போன்ற முழுமையான சால்புடைய மனிதரைக் காண்பதரிது" என்கிறார் எழுத்தாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. தன்னுடைய நெருங்கிய நண்பரும், பிரபல வழக்கறிஞருமான கே.வி. கிருஷ்ணசாமியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்னை வந்திருந்தார் பெ.நா. அப்புஸ்வாமி. விழா திடீரென சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதால் மகள் லக்ஷ்மி வீட்டில் தங்கியிருந்தார். மே 16, 1986 அன்று 'ஹிந்து' பத்திரிக்கைக்கு 'Bharati's Vision of the Motherland' என்ற தலைப்பிலான கட்டுரையை அனுப்புவதற்காகத் தபால் அலுவலகம் சென்றவர், அனுப்பிவிட்டு, வீடுதிரும்ப முற்பட்டபோது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அந்தக் கட்டுரை மறுநாள் ஹிந்து பதிப்பில் வெளியானது.
தனது வாழ்க்கையையே அறிவியல் தமிழுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த பெ.நா. அப்புஸ்வாமி விட்டுச்சென்ற இடம் இன்றளவும் வெற்றிடமாகவே உள்ளது.
அரவிந்த் |