அத்தை, மாமா உடனே வரணும்!
ஆஃபீஸ் வேலையில் மூழ்கி இருந்தேன். பக்கத்தில் நிழலாடியது. "யாரு" என நிமிரவும், மனைவி சுமதி கையில் சல்லடையுடன்.

"ம்ம்ம்.. என்ன கையில் சல்லடை. யாரைச் சலிக்கப் போறே? இல்ல சலிக்கவைக்கப் போறே?"

"ஐய... போறும் கிண்டல் பேச்சு. ஒரு விஷயம்..." என்று இழுத்தாள்.

"சரி சொல்லு.. எனக்குத் தலைக்குமேல வேலை" என்றேன் கடுப்புடன்.

"ஆஹா.. என்னிக்குத்தான் வேலை இல்லை. இந்த வாரம் முழுக்க 'கோல்ஸ்', 'மேசீஸ்'னு சேல் போட்டிருக்கான்."

"அதுக்கென்ன? இந்த யு.எஸ்.ல திரும்பினா 'லேபர் டே', 'தேங்க்ஸ் கிவிங் டே' எல்லாத்துக்கும் சேல் போடுவான். இன்னும் கொஞ்சம் வீட்ல நிக்கற இடம் இருக்கே... அதை நிரப்பிட்டு குட்வில் மூட்டை கட்டணுமா?"

"மாமா, அத்தையை அழைச்சிக்கிட்டு வரணும்."

"என்னது... எந்த மாமா, அத்தை?"

"புரியாதமாதிரிப் பேசாதீங்க. சீரியஸான மேட்டர்."

"ஐயையோ, யாருக்கு சீரியஸ்!"

"கஷ்டம். உங்க அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு வரணும். வேண்டாத பேச்சைக் பேசிக்கிட்டு..."

சேரிலிருந்து துள்ளி எழுந்தேன். "என்ன, நீயா இப்படிச் சொல்றது! எப்படி சண்டை போட்டு, ரகளை செஞ்சு வீட்டைவிட்டு விரட்டினே. இப்ப வான்னா வருவாங்களா?"

"அவசியம் நீங்க போய்க் கூப்பிட்டா வருவாங்க."

"இப்ப என்ன அர்ஜண்ட் அவங்க வரதுக்கு?"

"நம்ப ஃப்ரெண்ட்ஸ் வீட்டில மேரேஜ், பர்த்டேன்னு வரது. பெரிய இடம்... இன்வைட் பண்ணியிருக்காங்க. காஸ்ட்லியா பிரசண்ட் செய்யணும்"

"அதுக்கு அவங்க என்ன செய்யணும்"

"சீனியர்ஸ் தலையப் பார்த்தா மேலும் ஒரு 20% தள்ளுபடியாம். அதான் அவங்களைக் காட்டி..."

"அடிப்பாவி. என்ன எண்ணம் உனக்கு? வயதானவங்களை வச்சுக் காப்பாத்த நல்ல மனசு உனக்கு இல்லை. சேலாம். புண்ணாக்காம். வெக்கமாயில்லை.. என்ன பொம்பளை நீ?" சிங்கம்போல கர்ஜித்தேன்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com