ஷ்ரேயா மங்களம்
சிகாகோவைச் சேர்ந்த ஷ்ரேயா மங்களம், FIDE அமைப்பு செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4ம் தேதிவரை நடத்திய 'உலக இளைஞர் செஸ் சேம்பியன்ஷிப்' போட்டிகளில் பங்கேற்றார். பல்வேறு போட்டிகளில் இவர் ஈட்டியிருந்த புள்ளிகளின் அடிப்படையில் இதில் போட்டியிடத் தகுதி பெற்றார். இதில் U-14 பிரிவில், உலக அளவில் 34வது இடத்தையும், அமெரிக்கப் போட்டியளர்களிடையே இரண்டாவதாகவும் வந்துள்ளார்.

பெற்றோருடன் சவுத் பேரிங்டன், இல்லினாய்ஸில் வசித்துவரும் இவர், பேரிங்டன் மிடில்ஸ்கூல் ப்ரெய்ரியில் 8ம் வகுப்பு படிக்கிறார். முதலாம் வகுப்பில் படிக்கும்போதே இவருக்குச் செஸ் ஆர்வம் வந்துவிட்டது. நடுநிலைப் பள்ளியின் செஸ் கிளப் இவரது ஆர்வத்தை அதிகரித்தது. இந்த கிளப் முன்னாள் அமெரிக்கச் சேம்பியன் கிராண்ட் மாஸ்டர் யூரி ஷுல்மன் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. ஷ்ரேயா வாரத்தில் 6 முதல் 8 மணிநேரம் பயிற்சி செய்வதோடு, தனிப்பட்ட பயிற்சியும் எடுத்துவருகிறார்.

அண்மையில் USCF 2000 புள்ளிகளை எட்டிப்பிடித்து Expert level-ஐ எட்டியுள்ளார். உலக சேம்பியன் மேக்னஸ் கார்ல்ஸன் இவரது முன்னோடி. போட்டியை டிராவில் முடிக்காமல் எப்படியும் ஒரு முடிவை எட்டுகிற விடாமுயற்சி இவருக்குப் பிடிக்கும். ஷ்ரேயா மேலும் சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்!

தகவல்: சி.கே. வெங்கட்ராமன்
தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com