தெய்வ(த்தின்) நம்பிக்கை
திம்மனூர் அரசமரத்தடியில் பிள்ளையார் ஏகாந்தமாக உட்கார்ந்திருந்தார். சமீபத்தில் நேர்ந்த குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி எல்லாம் அவர் கவலையைப் போக்கவில்லை. பிள்ளையார் அரசமரத்தை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அரசமரம் பிள்ளையாரை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு ஒரு பக்தர் வந்தார். அவர் பிள்ளையாரையோ அரசமரத்தையோ பற்றிக் கவலைப்படுவதாகத் தோன்றவில்லை. அவர் கவலை அவருக்கு.

பிள்ளையார் சந்நிதியில் வந்து கண்களை மூடிக்கொண்டுவிட்டார். பிள்ளையாரை மறந்தும் விட்டார். வீட்டில் சிரங்குடன் சாகாமல் அவஸ்தைப்படுத்தும் பாட்டியாரைப்பற்றியோ உடைத்துப் போடப்பட்டிருக்கும் தேங்காய்கள் காய்வதற்குள் கருக்கும் வானத்தைப்பற்றியோ யோசனை செய்துகொண்டு திக்குக்கு ஒரு கும்பிடு போட்டு, தலையில் குட்டிக்கொண்டு தன்னையே பிரதக்ஷணமாக நாலுதடவை சுற்றிக்கொண்டுவிட்டு திரும்பினார் எதிரே குட்டிச்சுவர்! அதில் உட்கார்ந்திருந்த குரங்கு "உர்"ரென்றது.

திடீரென்று பிள்ளையார் எடுத்துக்கொண்ட அவதாரம் அவரைத் திடுக்கிட வைத்தது. பிள்ளையாருக்கு இடவேண்டிய கட்டளையைக்கூட மறந்துவிட்டு ஓடிவிட்டார். வீட்டில் கிழவி உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு இருமிக்கொண்டிருந்தாள். வானம் மட்டும் கருமை கலைந்து வெயிலைப் பரப்பியது. அரசமரம் நாலைந்து காய்ந்த சரகுகளைப் பிள்ளையார் தலையில் உதிர்த்தது.

அவை கழுத்திடுக்கில் விழவே பிள்ளையார் கூச்சத்துடன் அவற்றை உதறினார். மரத்தில் உட்கார்ந்திருந்த அணில் ஒன்று "கிரீச் கிரீச்" என்றது. அரசமரப் பொந்தை உற்று நோக்கியது. அரசமரத்தின் தலைகவிழ்ந்த கோலத்தை நினைத்துக் கவலைகொண்டது. தவத்தில் ஆழ்ந்தது.

காற்று ஓய்ந்ததும் பிள்ளையார் நெற்றியில் வியர்வை வழிந்தது. அதைத் துடைக்கவும் மனமில்லாமல் பிள்ளையார் கவலையில் ஆழ்ந்திருந்தார். அமைதி அவரைக் கலக்கியது. தனிமை அவரைத் தவிக்க வைத்தது. அரசமரம் மறுபடியும் பேச ஆரம்பித்துக் கேட்டுவிடுமோ என்ற ஐயம் அவரை வதைத்தது. எத்துணை நாட்களுக்குத்தான் இந்த நக்கலை அனுபவிப்பது?

அங்கிருந்து ஓடிவிட்டாலும் தேவலையோ என நினைத்தார். ஆனால் அந்த அரசமரத்திற்கு அவர் வந்த ராசி அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது. பக்தர் குழாம் பெருகியது.

அவருக்குத் தெரியும் தன்னால் ஒன்றும் ஆகாதென்று. தன் உருவமே அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும் என்றுதான் அவ்வளவு சப்பளிக்க உட்கார்ந்திருக்கிறார்,

செய்வினை எவனையும் சூழ்ந்தே தீரும். அதை யாராலும் மாற்றவே முடியாதுதான். ஆயினும் இந்த மனித மனம் இருக்கிறதே, அது நம்பிக்கையில் பிறந்தது. வருங்காலத்தைப் பிடித்துத் தொங்குவது. வருங்காலத்தை நினைத்து இன்றைய இன்பத்தைத் துறக்கும்; துன்பத்தை மறக்கும்.

ஜலமின்றி மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியாதோ அப்படியே தெய்வமின்றி மனிதன் 'வாழ' முடியாது. தண்ணீர் உடலின் நைப்பைக்காப்பது போல தெய்வம் மனதின் நைப்பை எதிர்காலத்தில் நம்பிக்கையைக் காக்கிறது. தெய்வம் இன்றி மனித வாழ்க்கை வறண்டுவிடும். அதில்தான் அதன் வளர்ச்சி தைரியம் எல்லாம் உருவாகிக்கொள்ளும். அதற்குப் பிடிப்பாக நம்பிக்கையின் உருவாக வருங்காலத்தின் இன்றையக் கனவாக தெய்வம் பிள்ளையாராக குளத்தங்கரையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

மனிதகுலத்திற்கு இந்த உபகாரம்கூடத் தன்னால் கூடாதா? இந்த மகிழ்ச்சியில்தான் வெயிலையும் மழையையும் கவனியாமல் வினாயகர் அரசமரத்தடியில் உட்கார்ந்திருந்தார். பலருக்கு வாழ்க்கையில் தெம்பு ஊட்டினார். அந்தப் பெருமையைக் கைவிட மனம் இல்லாமல்தான் அரசமரத்தின் காற்றையும் ஊதலையும் சகித்து வந்தார். அரசமரம் சலசலத்தது. பிள்ளையார் தூங்குவதுபோல பாவனை செய்தார். ஆனால் திறந்த கண் மூடமறுத்தது.

அரச மரம் கேட்டேவிட்டது.

"என்ன பிள்ளையாரே! மண்டபக்காரர் வந்தாரா?"

பிள்ளையார் மெளனம் சாதித்தார்.

"நாளைக்கு வருவாராக்கும்!"

இதற்கும் பதில் இல்லை.

"குருக்கள்கூட வருவதை நிறுத்தி விட்டாரே! இனி நான் அபிஷேகம் செய்தால்தான் உண்டு! அப்படித்தானே?"

பிள்ளையார் பதில்சொல்லாமல் இருப்பதற்கில்லை. "என்ன மரவரசரே! நீர்தானா என்னைப் பரிகாசம் செய்யவேண்டும்? நீர் என்னைத்தானா பரிகாசம் செய்யவேண்டும்?"

"பிசகுதான். இருந்தாலும் உம்முடன் நானே பேசவந்தபோது தெய்வ காம்பீர்யத்துடன் மெளனம் சாதிப்பது அழகா?"

"இல்லைங்காணும். நான் மண்டபக்காரனை நினைத்துக்கொண்டிருந்தேன்."

"பக்தன் கடவுளை நினைக்கும்போது கடவுள் பக்தனை நினைக்கவேண்டும் அல்லவா?"

"மரவரசரே! பரிகாசம் செய்யாதேயும்! என்னால் உமக்கு ஒருவித இடைஞ்சலும் இல்லை. போதுமா?"

"ஏன் இல்லை? நீர் வந்தது போதாதென்று என் சுகத்தைக் கெடுக்க என்னைச் சிதைத்து உமக்கு மண்டபம் கட்டுவதாக அல்லவோ கடைக்காரர் பிரார்த்தனை செய்துகொண்டார்!"

"அது சரிதான்காணும்! பிரார்த்தித்துக் கொண்டதென்னவோ வாஸ்தவம்தான். இந்தக் குருக்கள் குறுக்கே புகுந்து கெடுத்துவிட்டார்."

"அதென்ன கூத்து?"

"கடைக்காரருடைய பக்தியைக் கண்டுபிடித்து அவரிடம் சென்று குழையடித்து வெள்ளிக்கிழமை அர்ச்சனை ஒரு வருஷத்திற்கு காண்ட்ராக்ட் பேசிக்கொண்டு வந்துவிட்டார்"

"அதற்குள் உமக்கு ஒரு ஏஜண்ட் வேறு ஏற்படுத்திக்கொண்டு விட்டீரா?"

"இல்லைங்காணும். குருக்கள் தன் வரும்படிக்கு என்னை ஏஜண்டாக வைத்துக் கொண்டுவிட்டார் என்கிறேன்."

"எல்லாம் பரஸ்பரம்தானா?"

"இப்பொழுதுதான் ஒரு வருஷம் ஆயிற்று. குருக்கள் கடைக்காரரிடம் முறைப்பணம் கேட்கச் சென்றார். கடைக்காரரிடம் பணம் இல்லை."

"இல்லையா? நிஜமாகவா?"

"இருக்கிறது. அது கோர்ட்டுச் செலவுக்கு வேண்டியிருக்கிறது. அதோடு குருக்களுக்குத் தானே...! மெதுவாகக் கொடுத்தால் போயிற்று என்று."

"சரிதான். மனமில்லை என்று சொல்லும்."

"அப்படிச் சொல்லமுடியுமா? இருந்தாலும் பலதடவை குருக்கள் தொந்தரவு கொடுத்தவுடன் அர்ச்சனை பண்ணாமல் பணம் கேட்கவந்ததாக அடித்து விரட்டிவிட்டார்."

"பேஷ். உமக்கு அர்ச்சனை மிச்சம். கடைக்காரருக்கு உமது கருணை மிச்சம். குருக்களுக்கு அடி மிச்சமோ?"

"அதற்குள் லாபநஷ்டம் பார்க்க ஆரம்பித்துவிட்டீரே, மரக்கிழவரே! குருக்கள் முன்சீப் கோர்ட்டில் தாவா செய்திருக்கிறார்."

"அப்படிச் சொல்லுமையா! இந்த நாளிலே முன்சீப் கோர்ட்டுக்கு வேலை கிடைத்தது. அடுத்த வெள்ளிக்கிழமை முன்சீப் வருவார் மண்டகப்படி செய்ய!"

"அடுத்த வெள்ளிக்கிழமையா? நாளைக்கே கோர்ட் இங்கே ஆஜர். உமது நிழலிலேதான் மரக்கிழவரே! உமக்குக்கூட பெருமை!"

"இங்கு எதற்குக் கோர்ட்? சனியன்!"

"குருக்கள் என்னைச் சாட்சி போட்டு விட்டார்."

"சரிதான்! நீரும் கூண்டில் ஏற வேண்டியதுதானா?"

"அப்படியில்லேங்காணும். கடைக்காரர் கோர்ட்டில் ஏறி சத்யம் செய்துவிட்டார். குருக்கள், பிள்ளையாருக்கு எதிரில், 'கடைக்காரர் அர்ச்சனை பண்ணச் சொல்லவில்லை' என்று சத்யம் செய்தால் வழக்கை வாபஸ் வாங்குவதாக மனுக்கொடுத்திருக்கிறார்."

"பேஷ். நல்ல யோசனை."

"அது கிடக்கும்காணும். உம் கேள்விக்கு பதில் சொல்லவந்தேன், அர்ச்சனைப் பணம் கொடுக்காதவரா எனக்கு மண்டபம் கட்டப்போகிறார்?!"

"பிள்ளையாரே! பக்தர் வல்லமை கடவுளுக்கே தெரியாதென்று கீதையில் கண்ணன் சொல்லி இருப்பதாக போன வருஷம் நம் நிழலில்தானே 'பிரசங்க சண்டமாருதம்' உபன்யாஸம் செய்திருக்கிறர். உமக்குத் தெரியாது. கடைக்காரர் மண்டபம் கட்டினாலும் கட்டிவிடுவார்."

"அப்படித்தான்காணும் தோணுகிறது. அதோ, கடைக்காரரே வருகிறாரே! என்ன இருந்தாலும் கடைக்காரர் பக்தியில் அப்பழுக்கில்லை. என்ன?" என்று சொல்லிக்கொண்டே பிள்ளையார் தெய்வம் ஆனார்.

அரசமரம் மரத்து நின்றது.

கடைக்காரர் வந்தார். அரசமரத்து நிழலில் பிள்ளையாருக்கு எதிரில் வந்து நின்றுகொண்டார். குதப்பிக்கொண்டிருந்த தாம்பூலத்தை வலதுபுறத்தில் காறி உமிழ்ந்தார். இடது புறத்தில் கண்பார்வையில் செருப்பை விட்டார்.

பிள்ளையாரைப் பார்த்தார். நீளம் போதாத மேல் துண்டை எடுத்து இடுப்பில் இறுக்கிப்பிடித்து குறுக்கு நுனிகளைச் சேர்த்து முடிச்சுப்போட்டார். அந்த இறுக்கத்தில் அவருடைய தொங்கிய மார்பு மல் "பாடி"யில் விம்மி இருந்தது.

அவர் கையைக் கூப்பிக்கொண்டார். சற்றுநேரம் முணுமுணுத்தார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார். எழுந்திருந்தார். உடையில் ஒட்டிய ஒட்டுப்புற்களை உதறினார், தட்டினார். மறுபடியும் கும்பிட்டார். அந்தத் தனிமையில் அவர் பக்திப்பரவசம் எய்தினார், வாய்விட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

"சித்தி வினாயகனே! உன் கிருபைதான் எல்லாம் அப்பா! நீ அன்றி எனக்கு வேறு யார் துணை வினாயகரே! தெரிகிறது தங்கள் யோஜனை, நான் கபடமாக உங்களை ஏமாற்றுவதாக! நீ எல்லாம் அறிந்தவன். என் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி அறிவாய். ஏதாவது உன் விஷயத்தில் கபடமாக நடந்துகொள்வேனா?"

"குருக்களை அர்ச்சனை பண்ணச் சொன்னதென்னவோ உண்மைதான். நான் தங்களுக்கு அர்ச்சனை பண்ணக் கடமைப்பட்டவன்தானே! ஆனால் அவர் செய்தாரா? செய்ததாகவே இருக்கட்டும். அவர் சரியாகச் செய்வதில்லை என்பது உனக்கே தெரியும். அது உன் பொறுப்பு. ஆனால் கொடுத்த கடனைக் கேட்பது போலவா கேட்கிறது? உங்களுக்குச் செய்வதற்கு குருக்கள் என்ன என்னைக் கிட்டி கட்டுவது?"

"அது போகட்டும், போன வருஷம்முதல் கடை பாக்கி பத்து ரூபாய். அதை இன்னும் கொடுக்கவில்லை. அதில் 'ஈடு செய்துகொள்ளும் ஐயா' என்றால் "ஸ்வாமி பணத்தை தனியாக கொடுத்து விடவேண்டும்" என்கிறார். அழுகல் வாழைப்பழத்திற்கும் வழுக்கைத் தேங்காய் மூடிக்கும் மூன்று ரூபாய் கொடுத்தால் போதாதா? மாதத்திற்கு மூன்று ரூபாய் வீதம் முப்பத்தாறு கேட்கிறாரே! இது அடுக்குமா? எனக்குக் கட்டுமா?"

"ஆக எனக்கும் குருக்களுக்கும் எத்தனையோ விவகாரங்கள். ஆனால் தங்கள் விஷயத்தில் நான் தவறுதலாக நடக்கமாட்டேன் என்பது எல்லாம் அறிந்த தங்களுக்குத் தெரியாததில்லை. என்னை சத்யம் பண்ணச் சொன்னார், கோர்ட்டுத்தானே என்று சத்யம் பண்ணிவிட்டேன். இப்போது உங்கள் சந்நிதியில் சத்யம் செய்யவேண்டுமாம். சூடத்தை அணைக்கவேண்டுமாம். அனாவச்யமாக உங்கள் மதிப்பை குறைப்பதற்காகவே இந்த குருக்கள் ஏற்பாடு செய்கிறார் என்பது சொல்லாமலே விளங்கும்."

இதற்குள் வழிப்போக்கர் இருவர் வந்து சேர்ந்தனர். கடைக்காரர் பிரார்த்தனையை நிறுத்தினார். அவர்களுள் ஒருவர் செருப்பைக்கழட்டி நுனியை மிதித்துக் கொண்டே கைகளைத் தூக்கினார், கும்பிடு சேரவில்லை. இரு கைகளிலும் நிறைய சாமான்கள்.

இருவரும் பேசிக்கொண்டே பிள்ளையாரை வணங்கினர். "இவன் என்ன என்னைக் கட்டியாள்கிறது என்கிறேன். இவன் மட்டும் என் கண்ணில் படட்டும் இந்தச் செருப்பாலேயே..." அவர்கள் பேசிக்கொண்டே நகர்ந்தனர்.

அவர்கள் குறிப்பிட்ட நபர் யாரென்று யோஜித்தார் கடைக்காரர். பிள்ளையாரை அல்ல என்பது அவருக்குத் தெரியும். மறுபடியும் பிரார்த்தனையில் இறங்கினார்

"ஆனைமுகத்தரசே! என் பிழை பொறுக்கவேண்டும் உன் விஷயத்தில் நான் துரோகம் செய்யமாட்டேன். ஏதோ என் கையால் ஆனது ஒரு ரூபாய். இதோ உண்டியலில் போட்டுவிடுகிறேன். மண்டபத்தைப்பற்றிச் சொல்லுங்கள். கோர்ட்டு விவகாரங்கள் முடியட்டும். என்றாவது ஒருநாள் கட்டியே தீருவேன். என் மன உறுதி தங்களுக்குத் தெரியும்."

"வினாயக! பிழை பொறுத்தருள வேண்டும். என் கடன் தீரவேண்டும். என்னைக் காக்கவேண்டும் அப்பனே!" என்று சொல்லிக்கொண்டே மடியிலிருந்து ஒரு ரூபாயை எடுத்தார். ரூபாயைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். கனம் குறைந்த மடியைத் தொட்டுப்பார்த்தார். ஒரு எட்டணா நாணயம் இருந்தது. பிள்ளையார் முகத்தைப் பார்த்தார். ஒரு புலனும் தெரியவில்லை.

ஒரு ரூபாயை உள்ளங்கையில் வைத்துக்கொண்டார். ஒருமுறை வலம் வந்தார். உண்டியலருகில் சென்றார். பூட்டை இழுத்துப் பார்த்தார். உண்டியலின் மேல்தளத்தில் ரூபாயை வைத்தார். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். எழுந்தார்.

மடியிலிருந்த எட்டணா நாணயம் கீழே விழுந்தது. அதை எடுத்தார். பிள்ளையார் முகத்தைப் பார்த்தார். ஒரு குறிப்புத் தெரிந்தாற்போல் இருந்தது. "பிள்ளையார் எட்டணா போதுமென நினைக்கிறார். அதற்குமேல் எனக்கு நஷ்டம் வைக்க விருப்பமில்லை வினாயகருக்கு."

எட்டணாவைப் போடலாம் என்று உண்டியலருகில் கை சென்றது. படபடப்பில் கை தட்டி அந்த ஒரு ரூபாய் உண்டியலுக்குள் விழுந்துவிட்டது. "சே! சே! பிசகு! ரொம்பக் குறைக்கக்கூடாதல்லவா?" என்று தேற்றிக்கொண்டார்.

எட்டணாவை பத்திரமாக மறுபடியும் கீழே விழாதபடி மடியில் வைத்து முடிந்துகொண்டார். தலைக்கு மேல் கையைக்கூப்பி "சித்திவினாயகனே துணே" என்று இரைந்து வேண்டினார்

அந்தச் சத்தத்தில் அணிலின் தவம் கலைந்தது. 'கிரீச்'சென்றது. கடைக்காரர் கடவுளை திருப்தி செய்த நிம்மதியுடன் வீடுநோக்கி நடந்தார்.

அணில் மரத்தைவிட்டு இறங்கியது. காலியாயிருந்த மூஞ்சூறின் ஸ்தானத்தில் வந்து பிள்ளையாரைக் கூர்ந்து பார்த்தது.

பிள்ளையார் மரவரசரைக் கூப்பிட்டார். "பார்த்தீரா! கடைக்காரர். நல்லவர்தான். 'என்றாவது மண்டபம் கட்டியே தீருவேன்' என்கிறார்."

அவர் சொன்னது அரசமரத்தின் காதில் விழவில்லை. அது நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது.

ஸ்வாமிநாத ஆத்ரேயன்

© TamilOnline.com