சுமை தூக்கிய கண்ணன்
நான் பதினைந்து வயதிலிருந்தே பக்தியில் முழுகிவிட்டவள். மார்கழி மாதம் பாவைநோன்பு ஆறு வருடம் நோற்றிருக்கிறேன். என் இஷ்டதெய்வமே கண்ணன்தான்! எனக்கு நிறைய இறையனுபவங்கள் உண்டு. இருந்தாலும் இங்கு ஒன்றைமட்டும் நினைவுகூர விரும்புகிறேன். நம்மில் பலருக்கு இப்படி அனுபவம் கிடைத்திருக்கலாம். அதைச் சாமான்யமாக எண்ணாமல் உள்வாங்கி மகிழவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

1985ல் என்று ஞாபகம். காஞ்சிப் பெரியவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பத்ரிநாத் சென்றிருந்தார். அவரையும் பத்ரிநாராயணரையும் தரிசிக்க நானும் என் கணவரும் என் இரண்டாவது பிள்ளையும் புறப்பட்டோம்.

மே 17 அன்று அப்போதைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி பத்ரி சென்று பத்ரி நாராயணனையும், பெரியவரையும் தரிசனம் செய்தார். ரிஷிகேசத்தில் இருந்து பத்ரி செல்லும் பஸ் பகல் 2.30 மணிக்குத்தான் என்பதால் நாங்கள் மூவரும் ஒரு ஆட்டோவில் சிவானந்தர் ஆசிரமத்துக்குப் புறப்பட்டோம். எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் ஆட்டோ டிரைவரிடம் பேசினேன். என்ன காரணமோ தெரியவில்லை. ஆட்டோ டிரைவர் ரூ. 20 வாங்கிக்கொண்டு பாதியில் எங்களை நடுரோடில் இறக்கிவிட்டுப் போய்விட்டார். பஸ் பிடிக்க லஷ்மண ஜூலா பாலத்தைக் கடந்து செல்லவேண்டும். கையில் இரண்டு பெட்டி, கைப்பை இவற்றை வேறு தூக்கிச்செல்ல வேண்டும்.

என் பையனும் கணவரும் என்னைத் திட்டினார்கள். "அம்மா... எல்லாம் உங்களால்தான். நாம் மதறாசி என்று அந்த ஆட்டோ டிரைவர் இப்படி பாதியில் இறக்கி விட்டுவிட்டான். பேசாமல் வாயை மூடிக்கொண்டு வரலாமில்லையா?" என்றான் மகன். எனக்குக் கண் கலங்கியது. மௌனமானேன்.

"சரிடா.. யாரும் தூக்கவேண்டாம். நானே தூக்கிக்கொண்டு வருகிறேன். சுமைதாங்கிதானே இந்த அம்மா!" என்றேன்.

அப்போது, "அம்மா என்னிடம் கொடுங்கம்மா... நான் தூக்கி வருகிறேன்" என்றது ஒரு குரல்.

ஆச்சரியமாகத் திரும்பினேன். "ஹிந்தி கேட்டுப் புளித்த காதில் தமிழ்க்குரலா?" என்று.

"அடே, யாரப்பா நீ... தமிழ் பேசறியே!" என்றேன் வியப்புடன்.

"நான் தமிழ்தானம்மா... பெங்களூரில் இருந்து வரேன். நடையாய் நடந்தே பத்ரி மலை ஏறவந்த பக்தனம்மா!" என்றான்.

நான் உஷாராக, "சரி சரி... வழியில் தகராறு பண்ணக்கூடாது. பத்ரி பஸ்ஸில் இதை ஏற்றணும். எவ்வளவு கூலி? இப்போதே பேசிக்கொள்" என்றேன்.

ஆள் கருப்பு. நீலநிற ஸ்வெட்டர் போட்டிருந்தான். "அம்மா... இந்தச் சுமையைத் தூக்கிவருவதே உங்களுக்காகத்தான். உங்கள் கண்கள் கலங்கியதைக் கண்டு என் மனம் கலங்கியதால் தூக்கி வருகிறேன் என்றேன். கூலிக்காக அல்ல தாயே!" என்றான்.

யாரோ முன்பின் தெரியாத ஒரு வழிப்போக்கன் எனக்கு ஆறுதலாகப் பேசியது மனதுக்கு இதமாக இருந்தது. பெட்டிகளைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்து முன்னே நடக்க, பின்னால் என் பையன், நான் என் கணவர் என்று லக்ஷ்மண ஜூலா பாலத்தில் நடந்தோம்.

"தம்பி அம்மாவைத் திட்டக் கூடாதப்பா. அம்மாவுக்காகத்தான் நான் இதைச் சுமந்தேன்" என்றான் அவன்.

"உன் பேர் என்னப்பா?" நான் கேட்டேன்.

"கிருஷ்ணன்மா". அவன் அப்படிச் சொன்னதும் என் பையன் என்னை ஒரு மாதிரியாகத் திரும்பிப் பார்த்தான். (அவர்கள் பார்வையில் எப்போதுமே நான் லூசு)

"அம்மா.. நாளை என்னை அவசியம் பத்ரியில் பார்ப்பீங்களம்மா..." என்றான் அவன்.

"ஏம்பா.. எப்படிப்பா.. நாங்கள் பஸ்ஸில் போகிறோம். நீயோ நடந்தே மலை ஏறப்போகிறேன் என்கிறாய்? எப்படியும் இரண்டு நாளாவது ஆகுமே! எப்படி?" என்றேன்.

"அதெல்லாம் இல்லைம்மா.. நாளை என்னை அங்கு பார்க்கத்தான் போகிறீர்கள்" என்றான்.

வழியில் பூரி, டீ சாப்பிட்டோம். அவனுக்கும் சேர்த்து வாங்கினோம். வேண்டாம் என்று சொல்லிவிட்டான். பஸ்ஸில் சாமான்களை வைத்துவிட்டு கூலி எதுவும் வாங்காமல் சென்றுவிட்டான். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் வாங்கவில்லை. "நான் கூலிக்காக இதைச் சுமக்கவில்லை. உங்களுக்காகச் சுமந்தேன்" என்றான். இன்றுவரை அவன் உருவம் என் மனக்கண்ணில் நிற்கிறது.

பத்ரியில் பூஜை சாமான் வாங்கிக் கொண்டிருந்தபோது என் பையன் அவசரமாய் யாரையோ தேடினான். பிச்சைக்காரர், யாத்திரீகர் கூட்டங்களில் ஓடி ஓடித் தேடினான்.

"என்னப்பா... யாரைத் தேடுகிறாய்?" என்றேன்.

"இல்லம்மா... ரிஷிகேசத்தில் பெட்டி சுமந்தானே அந்தக் கிருஷ்ணனை. நாளை என்னை பத்ரியில் அவசியம் பார்ப்பீங்கன்னு சொன்னானே. அவனைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். காணவே காணோம்" என்றான்.

"அடப் பைத்தியக்காரா! அவன்தானடா இவன்!" என்று பத்ரி நாராயணன் சிலையைக் காட்டினேன். ஏனோ எனக்கு வாயில் அப்படி வார்த்தை வந்தது. என் கணவரும், என் பையனும் அதைக் கேட்டுச் சிலையாய் நிற்க, நான் இந்தச் சிலையில் அந்தக் கிருஷ்ணனைக் கண்டேன்!

குருப்ரியா,
தென் கலிஃபோர்னியா

© TamilOnline.com