அரங்கேற்றம்: நேத்ரா கௌஷிக்
ஆகஸ்டு 14, 2016 அன்று ஹூஸ்டன் பயோதியேட்டர் அரங்கில் செல்வி. நேத்ரா கௌஷிக்கின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. குரு திருமதி. இந்திராணி பார்த்தசாரதியின் 'அபிநயா நாட்டியப்பள்ளி' மாணவியாவார் நேத்ரா.

புஷ்பாஞ்சலியை அடுத்து பகுதாரி ராகத்தில் ஜதிஸ்வரம் வழங்கப்பட்டது. அடுத்துவந்த வர்ணம் நிகழ்ச்சியின் மணிமுடிபோல அமைந்தது. லால்குடி ஜெயராமன் இயற்றிய அங்கயற்கண்ணி நவராகமாலிகாவில் அமைந்த தமிழ் சாகித்யம் மிகநல்ல தேர்வு. சிவபுராணத்திலிருந்து கதைகளை நொடிக்கு நொடி மாறும் நவரச பாவங்களோடு வெளிப்படுத்தினார் நேத்ரா. அடுத்து பக்திரசம் சொட்டச்சொட்ட ராகம் கமாஸில் புரந்தரதாசரின் தேவர்நாமாவுக்கு வெண்ணை திருடிய கண்ணனின் லீலையை அபிநயித்தார். "கண்டநாள் முதலாய்", "எந்நாளும் அம்பலத்தில்" ஆகியவற்றுக்குப் பின் பஞ்சபூத வந்தனம், குரு மரியாதையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

குரு இந்திராணி பார்த்தசாரதி (ஜதி), டாக்டர். புஸ்தகம் ராமா (வாய்பாட்டு), திரு. ஜெயராமன் (குழலிசை), திரு. ஜனார்த்தன்ராவ் (மிருதங்கம்), திரு. பார்கவா ஹலம்பி (தாளவாத்யம்) ஆகியோர் பங்களிப்பு நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. நடனமணி செல்வி. சுரபி வீரராகவன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார், சிறந்த அரங்கப் பின்னணி, நேர்த்தியான உடை, தலையலங்காரங்கள் என்று எல்லாவற்றிலும் நேத்ரா குடும்பத்தினர் அக்கறை சிறப்பாக வெளிப்பட்டது. முடிவில் குரு, பெற்றோர், நண்பர்களுக்கு நன்றி கூறினார் நேத்ரா.

சந்திரமௌலி,
ஹூஸ்டன்

© TamilOnline.com