புசிக்க 8 விதிகள்
சமீபத்தில் சிகாகோவில் நடந்த 'உடல்பருமனை குறைப்பது எப்படி?' என்ற மருத்துவர் கருத்தரங்கில் நான் கலந்துகொண்டேன். அந்த ஐந்து நாட்களில் பல மருத்துவர்கள் அறிவுரைகளையும், விவாதங்களையும் முன்வைத்தனர். அங்கு நான் கற்றுக்கொண்ட முத்துக்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

உடல்பருமன் என்பது ஒரு நோய். இந்த நோய் சோம்பேறித்தனத்தாலும், கட்டுக்கடங்காமல் உண்பதாலும் மட்டுமே வருவது இல்லை. மரபணுக்கள், சிறுவயதுமுதல் கைக்கொண்ட உணவுப்பழக்கம், மனம், உடல் இரண்டும் சேர்ந்து இயங்குகையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், சமூகரீதியில் ஏற்பட்ட வழக்கங்கள், காலப்போக்கில் நம்மையறியாமல் செய்யும் சில செய்கைகள் எல்லாம் சேர்ந்து தற்காலத்தில் உடல்பருமன் என்கிற நோயை உண்டாக்கிவிட்டது. உடலின் எடை, Body Mass Index (BMI), உடலில் கொழுப்புக்கும் தசைக்கும் இடையேயுள்ள விகிதம் ஆகியவற்றால் உடல் பருமனை நிர்ணயிக்கலாம். பருமனைத் தவிர, நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதயக்கோளாறு முதலியவையும் நமது உணவுப்பழக்கத்தை மாற்றவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும். கீழ்க்கண்ட 8 விதிகளைக் கடைப்பிடிப்பது நாம் உட்கொள்ளும் உணவையே நமக்கு மருந்தாக்கும்.

1. பசித்துப் புசி
உணவு நமக்குச் சக்தியளிக்க வேண்டும். சாப்பிட்டால் சோர்வு தீரவேண்டும். பசி போகவேண்டும். உணவு இருக்கிறதே என்பதற்காக உண்ணவேண்டிய கட்டாயமில்லை. நம் முன்னோர்கள் காலத்தில் எஞ்சிய உணவை வைக்கக் குளிர்சாதனப் பெட்டி இல்லாத காரணத்தால் அளவாகச் சமைத்து அளவாக உண்டார்கள். இப்போது வசதிகள் பெருகப்பெருக உணவும் பெருகி, உடலும் பருக்கிறது.

2. ருசித்துப் புசி
உணவை ருசிக்கவேண்டும். சுவைக்கவேண்டும். வயிறு நிரம்புவதை ரசிக்கவேண்டும். அதை உணரக் கற்றுக்கொண்டு வயிறு நிரம்பியபின்னும் உண்ணாமல் நிறுத்தவேண்டும். தாய்ப்பால் அருந்தும் குழந்தையும், வயிறுநிரம்பிய பின்பு, வேண்டாம் என்று தள்ளிவிடும். வாய்பேசாத மழலையிடம் இருந்து இதைக் கற்றுக் கொள்வோம். வயது ஆக ஆக அந்த உணர்வு நம்மிடம் மறைந்து விடுகிறது.

3. சத்துடன் புசி
மாவுப்பொருள், புரதம், கொழுப்பு ஆகியவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து அளவுடன் புசிக்கவேண்டும். எல்லாம் கலந்தால் அளவு தன்னாலே குறைந்துவிடும். குறிப்பாக என்ன அளவு சேர்க்கவேண்டும் என்பவர்களுக்கு: ஒரு நாளைக்கு மாவுப்பொருள் 130 கிராம், புரதம் 90-100 கிராம், மீதம் கொழுப்புச்சத்து. இது சராசரி ஆணுக்கு உகந்த அளவு. பெண்களுக்குச் சற்றுக் குறைவாக இருக்கலாம். அவரவர் உயரம், எடை, உடற்பயிற்சிக்கேற்ப இது சற்றே மாறுபடும்.

4. சமைத்துப் புசி
நாம் உண்ணும் உணவை நாமே சமைத்துப் புசிக்கவேண்டும். யாராலோ எப்போதோ, எங்கேயோ, சமைத்து அட்டைப்பெட்டியிலும், குளிர்சாதனப் பெட்டியிலும் அடைக்கப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும்.

சமைக்கும் விதத்திலும் முன்னோர்கள் கையாண்ட முறைகள் குறிப்பிடத்தக்கவை. குமுட்டியிலும், விறகடுப்பிலும் மெதுவாய்ச் சமைத்த காலம்போய் இப்போது உயர்ந்த தீயில் அவசர அவசரமாக ஏற்றி, இறக்குகிறோம். அப்படிச் செய்யும்போது உணவில் ராசயன மாற்றம் நடக்கிறது. மெதுவாக, குறைந்த தீயில் சமைக்கப் பழகுவோம். சுவை, உணவின் பக்குவம், மணம் எல்லாவற்றிலும் இதனால் மாற்றம் தெரியும், உடல்நலத்துக்கும் இது நல்லது.

5. எண்ணிப் புசி
எந்த எண்ணெய் என்பதே எல்லோர் எண்ணத்திலும் எழுகிற கேள்வி. எல்லா எண்ணெயும் பதப்படுத்தப்பட்டவையே (processed) என்பதை உணர வேண்டும். இதில் தேங்காய் எண்ணெயும், வெண்ணெயும் குறைந்த அளவு மாற்றங்கள் உடையவை. ஆலிவ் எண்ணெய் சூடாக்க உகந்ததில்லை. குறைந்த எண்ணெயில், குறைந்த தீயில் நீண்டநேரம் சமைத்தால் உணவு சுவைக்கும்.

6. இணைந்து புசி
மனமும் உடலும் இணைந்து புசிக்க வேண்டும். மனஅழுத்தம் இருந்தால் சிலர் அதிகமாக உண்பார், சிலர் குறைவாக உண்பார். மதுவும், புகையும், சில மருந்துகளும் எப்படி நம்மை அடிமைப்படுத்துகின்றனவோ, அதைப்போலவே இனிப்பும், உப்பும், உறைப்பும்கூட நம்மை அடிமைப்படுத்தலாம். இதுவும் ஒருவகை அடிக்‌ஷன். எப்படி மற்ற அடிமைப் பழக்கங்களைத் தவிர்ப்பது கடினமோ அதைப்போலவே உணவுப்பொருள் அடிமைத்தனத்தைப் போக்குவதும் கடினம்தான். ஆனால் இயலாத காரியமல்ல. விடுதலைபெற நாம் விழையவேண்டும். அதற்கு நண்பர்கள், உறவினர்கள், மருத்துவர்களின் உதவியும் தேவை.

7. ஆரோக்கியமாகப் புசி
அவசர உலகில் வாழ்வதால் அதற்கேற்ப புசிக்கப் பழகவேண்டும். மெல்லச் சமைக்கவும், மென்று சுவைக்கவும் யாருக்கு நேரம் இருக்கிறது என்று நீங்கள் அலுத்துக்கொள்ளலாம். காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டு காரில் உண்ணும் பழக்கம் இருந்தால், அந்த உணவையும் ஆரோக்கியமான உணவாக மாற்றிக்கொள்வோம். உதாரணத்திற்கு, வீட்டிலே தயாரித்த பழச்சாறுகளை அருந்தலாம். சமைக்காத சாலட் வகைகளை உண்ணலாம். தானியங்கி மெது அடுப்பைக் காலையில் முடுக்கிவிட்டு, மாலையில் உண்ணலாம். மூன்று மணிநேரம் சமைக்க நேரமில்லை என்றாலும் முப்பது நிமிடம் முறுவலுடன் சுவைத்து உண்ணலாம்.

8. ஆராய்ந்து புசி
உணவை மருந்தாக்கி மருந்தைத் தவிர்க்க முயற்சிப்போம். தற்காலத்தில் சமூக ஊடகங்கள் தவிர்க்கமுடியாதவை. ஆனால் அவற்றின் காணக்கிடைக்கும் நல்ல பழக்கங்களை மேற்கொள்வோம். செய்திகளைப் படிக்கும்போது அறிவியல்ரீதியாக உண்மையா என்று ஆராய்ந்து கடைப்பிடிப்போம். இரண்டே வாரத்தில் இருபது பவுண்டு குறையலாம் என்பது போன்ற குறுக்குவழி உணவுமுறைகளை விட்டு, ஆராய்ந்து நல்ல உணவை உண்போம். காலத்தின் தேவைக்காக ஏற்படுத்தப்பட்ட எங்கள் அலுவலக முகநூல் பக்கம்: facebook.com/jeevanweightloss இதில் வாராவாரம் சத்துணவுத் தகவல்களைப் பகிர்ந்துவருகிறேன்.

மேலும் சில பயனுள்ள வலைதளங்கள்:
www.eatingwell.com
www.choosemyplate.gov/ten-tips

மருந்தைத் தவிர்க்க உணவை மருந்தாக்குவோம். உடலைப் பேணி உயர்வடைவோம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com