செப்டம்பர் 2005: வாசகர் கடிதம்
தென்றலின் ஜூலை மாத இதழ் கிடைத்தது. படித்து மகிழ்ந்தேன். தென்றல் இதழில் வரும் அனைத்தும் நம் எல்லோரையும் கவர்ந்துள்ளது. அதிலும் எங்கள் மனங்களை ஆழமாக வருடியவை வார்த்தை சிறகினிலே, அன்புள்ள சிநேகிதியே, சினிமா தகவல்கள் மற்றும் சிறுகதைகள், வழிபாட்டுத் தலங்களின் புதுமை. இதழில் வரும் அம்சங்கள் அனைத்தும் பிடித்துள்ளன. அத்தோடு யசோதா கிருஷ்ணா ஓவியத்தினை வரைந்த வாணி பிரதீப்பிற்கு எங்களின் பல கோடி வாழ்த்துக்கள். எங்கள் மனதை அவரின் ஓவியம் கொள்ளை கொண்டுவிட்டது. தென்றலே நீ வாழ்க தமிழ் வளர்த்து.

என்றும் உன் வருகைக்காகக் காத்திருக்கும் சிறைவாழ் இலங்கைத் தமிழன்

வி. பிரதீசன் (வன்னி)
மிரலொமா குடிவரவுச் சிறைச்சாலை,
லங்காஸ்டர், கலி.

*****


தென்றலின் ஜூலை மற்றும் ஆகஸ்டு இதழ்களைப் பார்த்துப் பேருவகை அடைந்தோம். இத்தனை உயர்ந்த தரத்தில் இதழைக் கொண்டுவருவதற்கு எங்களது பாராட்டுக்கள்.

Dr. ராதாகிருஷ்ணனின் நேர்காணல் (ஜூலை, 2005) மிகச் சிறப்பு. அந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெருமையை அறிந்த எங்களுக்கு அதனைப் படிக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது.

சரோஜா மனோகரனின் அமெரிக்க அனுபவம் (ஆகஸ்டு, 2005) அமெரிக்க தேசியக் கொடியையும் இந்திய தேசியக் கொடியையும் ஒப்பிட்டுக் கூறியிருப்பது மிகச் சரி. அத்துடன் எங்களது இந்த அனுபவத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் காலையும் மாலையும் உலாவச் செல்கிறோம். இங்கே சுற்றுப்புறம் மிகத் தூய்மையாக இருக்கிறது. நடப்பது மிகச் சுகமாக இருக்கிறது. இந்தியர்கள் தமது பொது சுகாதாரத்தையும் சாலைக் கலாசாரத்தையும் வெகுவாகத் திருத்தியமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

உலாவப் போகும்போது இந்தியர்கள் எதிர்ப்பட்டால் ஏன்தான் முகத்தை உம்மென்று வைத்துக் கொள்கிறார்களோ! ஒரு புன்னகை பூக்கலாமே. சீனர்களும் அமெரிக்கர்களும் நமக்கு எதிரே வந்தால் அவர்கள் 'ஹை!' என்று நம்மிடம் கூறுகிறார்கள். இதைப்பற்றி யோசிக்க வேண்டும். தென்றல் குழுவினருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

கண்ணன் மற்றும் கீதா கண்ணன்
மில்பிடாஸ், கலி.

*****


கடந்த தென்றல் இதழில் அருட்தந்தை காஸ்பர்ராஜ் அவர்களின் நேர்காணல் படித்தேன். பெருமகிழ்ச்சி கொண்டேன். நேர் காணலில் ஆசிரியர் மணிவண்ணன் இவரைப் பற்றி எழுதியிருந்த விதம், காஸ்பர் அவர்களை நேரிடையாகவே எனக்கு அறிமுகம் செய்து வைத்தாற் போலிருந்தது.

பண்பாடு என்பது முழுக்க முழுக்க மொழி சம்மந்தப்பட்டது. மொழியை மறந்தால் பண் பாட்டை இழக்க நேரிடும். வேகமாக வளர்ந்து வரும் நவீனத்துவமும் உலகமயமாக்கலும் முன்னோர் பேணிவளர்த்த தமிழ்க் கலாசாரத்தை வேரறுத்துவிடாமல் கூரிய விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியதன் அவசியத்தை நமக்கு மிக அருமையாக விளக்குகிறார்.

மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. மாறிவரும் இளைய தலைமுறையினரை கருத்திற்கொண்டு காலமாற்றத்திற்கு ஏற்ப நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் இயல்பு நிலை மாறாமல் புது மெருகூட்டி அவர்கள் ஏற்புடையதாக செய்தல் வேண்டும் என்று கூறியதோடு நிற்கவில்லை. பக்தி இலக்கியமாகிய திருவாசகத்தை புதுமை விரும்பிகளுக்கேற்ப 'இசைஞானி'யுடன் இணைந்து வெளிநாட்டவரும் இசைமேதைகளும் பாராட்டும் வண்ணம் 'தமிழ் மையம்' மூலம் இரண்டரை ஆண்டு காலம் விடா முயற்சியுடன் தயாரித்து வெளியிட்டுள்ள அவரது மொழி காக்கும் கடமையுணர்வு மிகவும் பாராட்டுத்தக்கது. உங்களுடைய தமிழ்ப்பணி என்றென்றும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மா. கதிரேசன்
·ப்ரீமாண்ட், கலி.

*****


'தென்றல்' ஆகஸ்டு இதழை 'திருவாசகம்' சிறப்பிதழாக வெளியிட்டு, மாணிக்கவாசகருக் கும் திருவாசகத்துக்கும் சிம்பொனி மூலம் புது இசைவடிவம் கொடுத்த இளையராஜா, இந்த மாபெரும் இசைப்பணிக்குக் கர்த்தாவாக விளங்கும் காஸ்பர்ராஜ், ஹங்கேரி இசைக் குழுவினர் மற்றும் நிதி திரட்டுவதில் பேருதவி புரிந்த இந்திய அமெரிக்கத் தமிழன்பர்கள் ஆகியோருக்கு வடஅமெரிக்கத் தமிழர்களின் வாழ்த்துகளையும் நன்றியையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

இளையராஜாவின் திருவாசக சிம்பொனி, காஸ்பர்ராஜ் அவர்களுக்கு இந்தத் திட்டத்தில் உள்ள ஆழ்ந்த, தீவிரமான ஈடுபாடு குறித்து எழும் சராசரி வாசகரின் வினாக்களை எதிர் நோக்கி, அதற்கேற்பத் தெளிவான, விரிவான விளக்கங்களுடன் மணி மு. மணிவண்ணன் எழுதிய கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

முப்பது மாத கால அளவில் மிகுந்த நிதி நெருக்கடி மற்றும் பல இடர்ப்பாடுகளுக்கிடையே வணிக நோக்கின்றி ஒரு இறை சங்கல்பமாக எம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற உயர்ந்த சித்தாந்தத்தில் காஸ்பர்ராஜ், இளையராஜா குழுவினர் இந்தப் பெரும்பணியை பெரும் பொருட்செலவில் நிறைவேற்றியுள்ளார்கள்.

சென்னிமலை. பி. சண்முகம்
நியுயார்க்

*****


மிகப் பொறுப்புணர்வோடு 'சிம்பொனியில் திருவாசகம்' பற்றிய கட்டுரைகளை நடு நிலைமையோடு வெளியிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

கோச்சா கோவிந்தராஜன்
இந்திரா நகர், சென்னை

*****


பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டின் அமைப்பாளர்கள் மற்றும் புரவலர் சார்பாக, தென்றல் இதழ் எமக்களித்த முழுமையான ஆதரவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். தென்றலின் ஜூன், 2005 இதழில் கட்டுரை வெளியிட்டதுடன் அட்டையிலும் அதைப் பற்றிய குறிப்பை வெளியிட்டிருந்தீர்கள். இத்தகைய விளம்பரத்தைப் பெற நாங்கள் எந்தப் பொருட்செலவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் தாராள மனப்பான்மைக்கும், மாநாட்டைப்பற்றிப் பரவலாக அறியத் தந்தமைக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். தங்கள் ஆதரவால் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியது. ஏராளமான பேர் பங்கு கொண்டதுடன் மாநாட்டின் ஏற்பாடுகளைப் பாராட்டவும் செய்தனர்.

டாக்டர் ஆர். பிரபாகரன்
தலைவர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்
ஒருங்கிணைப்பாளர், பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு, பெல் ஏர், மேரிலாந்து

*****


முதுபெரும் எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தென்றலைப் பாராட்டி எழுதியுள்ளார். தன்னுடைய நாவலுக்காக 'சாஹித்திய அகாடமி' விருதும் நாடகத்துக்காக 'சங்கீத நாடக அகாடமி' விருதும் ஆக இவ்விரு விருதுகளையும் பெற்றுள்ள ஒரே எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர் 'இ.பா.' என்று அழைக்கப்படும் இந்திரா பார்த்தசாரதி. அவர் 'தென்றல்' ஆசிரியர் மணிவண்ணனுக்கு இவ்வாறு எழுதியுள்ளார்:

*****


இன்றைக்குத் தென்றல் வரப்பெற்றேன். அமர்க்களம். அமெரிக்கத் தமிழர் தமிழ் நாட்டை இழந்துவிடவில்லை. நேர்காணல்கள் மிக நன்றாக வந்திருக்கின்றன. எனது முதல் நாவலை நான் 'தீபம்' இதழில்தான் எழுதினேன். நா.பா. வின் கதையையும் புகைப்படத்தையும் கண்டு எனக்குப் பழைய நினைவுகள் பீறிட்டெழுந்தன.

இ.பா.

*****

© TamilOnline.com