அரங்கேற்றம்: ஐஸ்வர்யா ஸ்ரீ மோகன்
ஜூலை 30, 2016 அன்று சின்மயா ராமேஸ்வரம், Tustin, கலிஃபோர்னியாவில் செல்வி. ஐஸ்வர்யாவின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் நடந்தது. அருண் ராமமூர்த்தி (வயலின்), நிர்மல் நாராயணன் (மிருதங்கம்) பக்கவாத்திய உறுதுணையுடன் காம்போதிராக வர்ணத்தில் நிகழ்ச்சி ஆரம்பித்தது. பின்னர் ஜி.என்.பி.யின் 'வரவல்லப' என்னும் ஹம்ஸத்வனிராக கீர்த்தனையைப் பாடிவிட்டு சுருட்டி ராகத்தில் நவக்ரக கீர்த்தனையான 'அங்காரக மாஸ்ரயாம்' என்பதைப் பாடினார்.

பின்னர் கரஹரப்ரியாவில் பாபநாசம் சிவனின் 'அப்பன் அவதரித்த' பாடலை உருக்கமாகப் பாடினார். ரகும்வம்ச சுதாவும், நின்னு விடசியும் மனதைத் தொட்டன. கல்யாணி ராகத்தை முழுமையாகக் கையாண்டு, விஸ்தாரமாகப் பாடி, ஸ்வரங்களை நிரவல் செய்து, மிருதங்கத்துக்கு தனி ஆவர்த்தம் கொடுத்து சபையினரின் பாராட்டுதலைப் பெற்றார். குறிஞ்சி ராகத்தில் அன்னமாச்சார்யா கிருதியான 'முத்துகாரே யசோதா'வைப் பாடியபின், பாரதியாரின் 'பகைவனுக்கருள்வாய்' பாடலை ராகமாலிகையாகப் பாடி சபையினரின் கரகோஷத்தைப் பெற்றார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் இயற்றிய பிலஹரி ராகத் தில்லானாவைப் பாடிவிட்டு 'வாழிய செந்தமிழ்' பாடி முடித்துக் கொண்டார்.

இசை கற்றுத்தந்த குரு. சுபா நாராயணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரது மகன் சந்தீப் நாராயணனின் போதனையும் சேர்ந்து, நிகழ்ச்சி களைகட்டி, நினைவில் நிற்கக்கூடியதாய் அமைந்தது.

இந்திரா பார்த்தசாரதி,
கலிஃபோர்னியா

© TamilOnline.com