கன்கார்டு: சிவமுருகன் கோவில் பூமிபூஜை
ஆகஸ்ட் 21, 2016 அன்று கன்கார்டு சிவமுருகன் கோவில் (கலிஃபோர்னியா) பூமிபூஜை சிறப்பாக நடை பெற்றது. மூன்று நாட்களுக்கு பலவிதமான பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

ஆகஸ்ட் 19ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலையில் விநாயகர், மகாலட்சுமிக்கு ஸ்ரீசூக்த பூஜைகள் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 20ம் தேதி காலை கணபதி ஹோமமும், 108 வலம்புரி சங்கு அபிஷேகமும் செய்யப்பட்டன. மதியம் பல இசை மற்றும் பரதப் பள்ளிகளிலிருந்து குழந்தைகள் வந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை வழங்கினர்.

ஆகஸ்ட் 21ம் தேதி காலையில் முளைவிட்ட நவதானியம், வாழைப்பழம், தர்பைப்புல் போன்றவை பசுவுக்கும் கன்றுக்கும் கொடுத்து, கோபூஜை செய்யப்பட்டது. கோவிலில் உள்ள மூன்று சிவாச்சாரியார்களும் அத்துணை பூஜைகளையும், வாஸ்து ஹோமத்தையும் செய்ய, சென்னையில் இருந்து ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தபதி வந்து பூமிபூஜையைச் செய்து சிறப்பித்தார். மொத்தம் 11 செங்கற்களை வைத்து, பாரத நாட்டிலிருந்து கொண்டுவந்த பல அரிய மூலிகைகள், மண், கிழங்கு வகைகளையும் நவரத்னங்களையும் வைத்து, அதனுடன் ஒரு சிறிய சுவர்ண வேலும் வைத்து ஒன்றாகச் சேர்த்து அஸ்திவாரம் அமைக்க, பூமிபூஜை நிறைவேறியது.

இரண்டு நாட்களும் காலைப் பலகாரத்தை ரேவதி ஸ்ரீதர், ஆர்த்தி ஸ்வாமிநாதன் மற்றும் பல தன்னார்வத் தொண்டர்கள் கோவிலினிலே தயார் செய்தனர். உலகப்பன், சுபா ராஜேஷ் போன்றோர் காய்கறிகள் சமைத்தனர்.

கன்கார்டு நகரக் கவுன்சிலர் மூவர் விழாவுக்கு வந்திருந்தனர். கோவிலின் ஸ்தாபகர் குருதேவர் சிவாய சுப்ரமணிய ஸ்வாமியின் கௌவாய் ஆதீனத்தில் உள்ள ஸ்ரீ போதிநாத ஸ்வாமி தனது ஆசிகளை தெரிவித்து, தன் சார்பாக ஈசன் கதிர், சுந்தரி கதிர் என்ற தம்பதியை அனுப்பி வைத்தார். இவர்களையும், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் ஆர்க்கிடெக்ட், ஸ்தபதி, சிவாச்சாரியார்களையும் கோவில் நிர்வாகிகள் சிறப்பித்தனர்.

கோவிலை எழுப்புவதற்கு நிதி திரட்டும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். நன்கொடை கொடுக்க: www.shivamurugantemple.org

மீனா அண்ணாமலை,
கன்கார்டு, கலிஃபோர்னியா

© TamilOnline.com