ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-11)
ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவைகள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னை வினவியதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படையாகின்றன.

வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசையை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையிலுள்ள கருத்துக்களையும், ஒன்றுசேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்துமூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம்.

ஆரம்பநிலை யுக்திகளைக் கற்கலாம் வாருங்கள்!

*****


கேள்வி: எனது ஆரம்பநிலை நிறுவனம் வெற்றிகரமாக நடக்கவில்லை. படுத்துவிடும் போலிருக்கிறது. ஆனால் அதற்குள் ஓரிரு ரத்தினங்கள் புதைந்திருக்கலாமோ என்று எண்ணுகிறேன். அவற்றைத் தோண்டியெடுத்து எதாவது செய்யமுடியுமா, அல்லது கதவை மூடவேண்டியதுதானா? உங்கள் ஆலோசனை என்ன?

கதிரவனின் பதில்: இது ஆரம்பநிலை நிறுவன தொழில்முனைவோர் பலரும் தம் முயற்சிப் பயணத்தில் சந்திக்க நேரும், சிந்திக்கவேண்டிய மிக முக்கியமான கேள்வி. “முன்னேற வேண்டுமானால் மாறவேண்டும்; உன்னதநிலை (perfection) அடைய வேண்டுமானால் பலமுறை மாறியாக வேண்டும்” என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். அதையே பதிலாக வைத்துக் கொள்வோமா?

நான் ஆரம்பநிலை நிறுவனங்களைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளில் முன்பே குறிப்பிட்டுள்ளபடி, ஆரம்பித்தபோது போட்ட திட்டத்தைச் சற்றும் மாற்றாமல், சிறிதுகூட திசை திரும்பாமல் வெற்றியடைந்த நிறுவனங்கள் வெகு சிலவே. (சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்பத் தம்மை மாற்றிக் கொள்ளாததால் தோல்வியைத் தழுவிய நிறுவனங்களோ அனேகம்!) அப்படியிருக்கையில், நிறுவனம் வெற்றிப் பாதையில் நடக்காவிட்டால், எதாவது மாற்றம் செய்வதுதான் நல்லது. மாற்றம் செய்து மீண்டும் முயன்றால் வெற்றிகிட்ட வாய்ப்புண்டு. ஆனால் அந்த வெற்றிகிட்டும்வரை முயற்சி செய்யும் அளவுக்கு நிதியும் குழுத்தெம்பும் தேவை.

மாற்றம் எத்தகையது, எந்த அளவுக்கானது என்பது அந்தந்த நிறுவனத்தின் நிலைமையைச் சார்ந்தது. சில நிறுவனங்களுக்குச் சிறிய மாற்றமே போதும். தம் தொழில்நுட்பத்தை மாற்றாமல், வணிக இலக்கையும் மாற்றாமல், வணிகப் போக்கில் சில மாற்றங்களைச் செய்தாலே வெற்றி கிட்டக்கூடும். அதாவது, அவர்களின் சந்தைப்படுத்தல் (marketing) சரியாக இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது வணிகச்சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களால் அவர்களின் போக்கையும் அதற்கேற்ப மாற்ற நேரிடலாம். இதைச் சிறுமாற்றம் என்று குறிப்பிடுவோம்.

அத்தகைய சிறுமாற்றம் மட்டுமே உங்கள் நிறுவனத்துக்குத் தேவை என்றால் மிகநல்லது. நன்கு யோசித்து, சில வழிகாட்டிகளிடம் கலந்தாலோசித்து எத்தகைய மாற்றம் தேவை என்று கணித்து செயல்படுத்தி வெற்றி பெறுங்கள். ஆனால், சிறுமாற்றங்கள் தேவைப்படும் நிறுவனங்கள்தான் வெற்றி பெறக்கூடும் என்பதல்ல. அதிரடியான பெருமாற்றங்களைச் செய்து வெற்றிகண்ட நிறுவனங்களும் உண்டு.

மிகப்பெரிய மாற்றம் என்று கூற முடியாவிட்டாலும், நான் பணிபுரிந்த எக்ஸொடஸ் (Exodus) ஓர் அடிப்படை மாற்றம் செய்துதான் வெற்றிகண்டது. வருடம் பத்தாயிரம் டாலருக்கு விற்க முடிந்த மின்வலைப் பாதை பொருத்தத்தை அளித்து வந்தது. ஆனால், வாடிக்கையாளர்களிடமிருந்து நூறாயிரம் ஏன் மில்லியன் டாலர் கணக்கில் எவ்வாறு வசூலிக்க முடியும் என்ற கேள்வியை மூலதனத்தார் எழுப்பியதும் நாங்கள் மண்டையைக் குடைந்துகொண்டோம். அப்போது ஒரு எக்ஸொடஸ் விற்பனையாளர் ஒரு வாடிக்கையாளரை அழைத்து வந்து அவர்கள் எங்கள் தகவல்மையத்திலேயே தம் கணினிகளை வைத்துச் சேவையளிக்க முடிந்தால், வருடத்துக்கு நூறாயிரம் டாலருக்குமேல் தருவதாகக் கூறினார். ஆஹா! எங்கள் எண்ணத்தில் ஒரு மின்னல்! மின்வலைப் பாதை விற்பனையை டமாலென நிறுத்திவிட்டு, மின்வலைத் தகவல்மையம் என்னும் புதிய சேவை நிறுவனமாக மாறியது எக்ஸொடஸ். அந்த மாற்றம் பெரும் வெற்றிக்குக் காரணமாயிற்று. (டாட்காம் வெடிப்பால் எக்ஸொடஸுக்கு என்ன ஆயிற்று என்பது வேறு விஷயம். தேவையான மாற்றத்தைச் செய்யமுடியாததால் கிடைத்த தீவிளைவே அது. வேண்டுமானால் அதைப்பற்றி வேறொரு கட்டுரையில் காண்போம்.)

ஆனால் அதைவிடப் பெருமாற்றங்கள் செய்து வெற்றிகண்ட நிறுவனங்கள் உண்டு. உதாரணமாக IBM நிறுவனத்தைக் கூறலாம். கணினி விற்பனையிலிருந்து சேவையளிக்கும் நிறுவனமாக மாற்றினார் பிஸ்கட் விற்கும் நிறுவனத்திலிருந்து வந்து சேர்ந்த லூ கெர்ஸ்ட்னர். சமீபகாலத்தில் பே பால் (pay pal), பின்டரெஸ்ட் (pinterest) போன்ற நிறுவனங்களின் மாற்றங்களையும் வெற்றியையும் குறிப்பிடலாம். நின்டெண்டோ, நோக்கியா, விப்ரோ போன்ற பலப்பல நிறுவனங்கள் தம்மிடம் இருந்த ஒரு அம்சத்தை அடிப்படையாக வைத்து, பெரும் மாற்றங்களைச் செய்து வெற்றிகண்டுள்ளன.

அதனால், சிறுமாற்றத்தால் வெற்றிகாண முடியாது என்பது நிச்சயமாகிவிட்டால், உங்கள் நிறுவனத்தின் அம்சங்களில் எது ஒரு புதிய வணிகப் போக்குக்கு அடிப்படையாகி, பெருமாற்றத்துக்கு உதவும் என்று ஆராய்வதே நல்லது.

அத்தகைய அடிப்படை அம்சம் தொழில்நுட்பமாக இருக்கலாம். ஒரே தொழில்நுட்பத்தை வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தி மிக வித்தியாசமான விற்பொருட்களைத் தயார் செய்வதாக இருக்கலாம். உதாரணமாக, எனக்குத் தெரிந்த மின்வில்லை நிறுவனம் ஒன்று, அந்தத் தொழில் வெற்றியளிக்காததால், அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து அதிவேகப் பங்குவர்த்தக (high speed stock trading) நிறுவனமாக மாறிவிட்டது!

ஆனால் தொழில்நுட்பந்தான் அடிப்படையாக வேண்டும் என்பதில்லை. வெவ்வேறு வகையான மாற்று அடிப்படை அம்சங்கள் இருக்கக்கூடும்.

உதாரணமாக, எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனம் மின்வலைச் சேவை ஒன்றை அளித்துவந்தது. ஆனால் 2000-ஆம் ஆண்டு டாட்காம் உருகலால் மேலே மூலதனம் பெறவியலாமல் கிட்டதட்ட இழுத்து மூடவேண்டிய நிலைக்கு வந்தது. ஆனால் அவர்கள் தங்கள் சேவையை விற்பதற்காக, ஃபீனிக்ஸ் நகரத்திலும், இந்தியாவிலும் ஒரு தொலைபேசியில் நூற்றுக் கணக்கானோரை அழைத்தனர். அதில் யாராவது ஒருவர் மேலும் அந்தச் சேவையைப் பற்றி அறிய ஆவல் காட்டினால் மட்டுமே, ஒரு நேரடி விற்பனையாளரை அனுப்பும் வெளித்தொலையழைப்பு விற்பனை மையத்தை (outbound telesales call center) அமைத்திருந்தனர். மூலதனம் கிடைக்கவில்லையென்று நிறுவனத்தை மூடவில்லை. தங்கள் மின்வலைச் சேவையை நிறுத்திவிட்டு, தகவல் தொடர்பு மையங்களையும் மூடிவிட்டு, தங்கள் தொலைவிற்பனைக் குழுவையே தங்கள் புது பலமாக்கி மற்ற நிறுவனங்களுக்கு விற்பனைச் சேவையாக அளிக்க ஆரம்பித்தனர்! ஆரம்பித்திலிருந்தே லாபகரமாக நடந்த அது இன்னும் தொடர்கிறது!

இன்னும் சில நிறுவனங்களின் பலம் குழு அங்கத்தினராக இருக்கக்கூடும். அதாவது முதலில் ஒரு துறையில் ஈடுபட்ட நிறுவனம், மாற்றியமைக்க வேண்டும் என்னும்போது, தங்கள் துறையையும் தொழில்நுட்பத்தையும் விட்டுத்தள்ளி விட்டு, தம் தொழில்நுட்பக் குழுவின் தனித்திறன் எந்தத் துறையில் என்பதை வைத்து அதில் தம் நிறுவனத்தின் மறுபிறவியைக் காண்பர். உதாரணமாக, 2008ல் பொருளாதாரப் பெரும்பிரச்சனையால் சமூகவலை (social networking) துறையில் இருந்த ஒரு நிறுவனத்தால் மீண்டும் மூலதனம் பெற இயலவில்லை. அவர்கள் உடனே தம் வணிகக் குழுவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தமது தனித்திறனான மின்வலைப் பாதுகாப்புத் துறையில் புது முயற்சி ஆரம்பித்து வெற்றிபெற்றனர்.

இறுதியாக எனக்குத் தெரிந்தே பலமுறை நடந்த ஒரு மிக வித்தியாசமான மாற்றம்: நிறுவனத்தில் மேற்குறிப்பிட்ட எதுவுமே இல்லாமல், ஆனால் இடப்பட்ட மூலதனத்தில் ஒரு பெருந்தொகை மட்டும் வங்கியில் மீதியிருந்ததால், மூலதனத் தட்டுப்பாட்டால் தத்தளிக்கும், ஆனால் நல்ல விற்பொருளும் குழுவும் உள்ள நிறுவனத்தைத் தம்மோடு இணைத்து, அந்த நிறுவனமாகவே (பெயர்கூடத்தான்) மாறிவிடுகின்றன! இது மாற்றமா, ஏமாற்றமா, தடுமாற்றமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!

மேற்குறிப்பிட்டவற்றில் இருந்து, ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு மாறுதல் மிகவும் இயல்புதான்; நிறுவனத்தின் ஏதோவொரு பலமான அம்சத்தை அடிப்படையாக வைத்து தோல்வியடையக்கூடிய அபாயமான நிலையிலிருந்து வெற்றிக்கு வளர்த்த பல நிறுவனங்கள் உள்ளன என்பது புரிந்திருக்கும். அதனால், அன்பரே, உங்கள் நிறுவனத்தின் பலமென்ன என்று ஆராய்ந்து வெல்ல முயலுங்கள்! அடுத்து வேறு யுக்தி ஒன்றைப் பார்க்கலாம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com