வியட்நாம் வீடு சுந்தரம்
இயக்குநர், திரைக்கதை, வசன ஆசிரியர், நடிகர் என மூன்று தளங்களிலும் முத்திரை பதித்த வியட்நாம் வீடு சுந்தரம் (இயற்பெயர் கே. சுந்தரம்) தமது எழுபத்தாறாம் வயதில் சென்னையில் காலமானார். தமிழின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான இவர், சிவாஜி கணேசன் நடித்த 'வியட்நாம் வீடு' என்ற நாடகத்திற்கு கதை-வசனம் எழுதிய காரணத்தால் வியட்நாம் வீடு சுந்தரம் என்று அழைக்கப்பட்டார். அந்த நாடகம் அக்காலத்தில் ஆயிரம் முறைக்குமேல் மேடையேறிச் சாதனை படைத்தது. நாடகத்துறையிலிருந்து திரைத்துறைக்கு வந்து அதிலும் வெற்றிகளைக் குவித்தார். இவரது நாடகங்கள் 'ஞான ஒளி', 'கௌரவம்' இரண்டும் திரைப்படங்களாகி வெற்றியைக் குவித்தன. தொடர்ந்து ஜஸ்டிஸ் கோபிநாத், அண்ணன் ஒரு கோயில், நான் ஏன் பிறந்தேன் எனப் பல வெற்றிப் படங்களைத் தந்தார். நம்ம வீட்டு தெய்வம், தேவி ஸ்ரீ கருமாரியம்மன் போன்ற படங்களின் மூலம் கே.ஆர். விஜயாவை அம்மன் பாத்திரமாக்கிப் புகழ்பெறச் செய்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். வயதானதால் திரைப்படத் தயாரிப்பு மற்றும் இயக்கத்திலிருந்து ஒதுங்கி, தொலைக்காட்சி நாடகங்களிலும் திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். இவருக்குச் செல்லா என்ற மனைவியும் அனு, சுவேதா என்ற மகள்களும் உள்ளனர்.



© TamilOnline.com