அரங்கேற்றம்: ஷ்ரேயா சுரேஷ்
ஜூன் 11, 2016 அன்று செல்வி. ஷ்ரேயா சுரேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் நியூ ஜெர்சி நார்த் ப்ரன்ஸ்விக் பள்ளி அரங்கில் நடைபெற்றது. ஷ்ரேயாவின் நடன ஆசிரியை திருமதி. செல்வி சந்திரநாதன் முப்பத்தந்து ஆண்டுகளாக நடனம் கற்பிக்கிறார்.

பிருந்தாவனசாரங்கா ராகத்தில் கணேச துதியில் ஆரம்பித்து புஷ்பாஞ்சலியாக ஷ்ரேயா தொடங்கிய நடனம், ஜதிஸ்வரத்தில் (கீரவாணி) நிலைநின்று பிறகு கௌரிமனோகரி ராகத்தில் 'நந்தகோபாலன் எனைச் சொந்தம் கொண்டானே' எனும் மதுரை ஆர். முரளிதரனின் அருமையான வர்ணத்தில் பயணம் செய்தது. ஷ்ரேயா தன் முழுத்திறமையை 'வர்ணத்தில்' ராதை கண்ணனைத் தேடும் ஒவ்வொரு கட்டத்திலும் மிக அருமையாக வெளிப்படுத்தினார். மகாகவி பாரதியின் 'தகதகவென்று ஆடுவோமே' (சிவசக்தி ராகம்) பாடலுக்கு திருமதி பாமா விஸ்வேஸ்வரன் பின்னணி கொடுக்க, பாரதியின் கம்பீரம் பாட்டில் ஒலிக்க ஷ்ரேயாவின் அபிநயம் அருமையாக அமைந்தது. ராகமாலிகையில் அமைந்த ஆதிசங்கரரின் அர்த்தநாரீஸ்வரர் பாடலுக்கான நாட்டியத்தில் ஷ்ரேயாவின் மூத்த சகோதரி ஸ்ருதி சுரேஷ் சேர்ந்துகொள்ள சிவசக்தி சொரூபமும், சக்தியின் பரவசபாவமும் ஒன்றாகக் கலந்தது ரசிகர்களைக் கொள்ளைகொண்டது. மீராபஜனைப் பாடலும், தில்லானாவும் அற்புதம்.

குரு செல்வி சந்திரநாதன் (நட்டுவாங்கம்), பாமா விசுவேஸ்வரன் (பாட்டு), மாயவரம் சங்கர் ஜகதீசன் (மிருதங்கம்), முடிகொண்டான் ரமேஷ் (வீணை), பசுமர்த்தி வெங்கடரமணா (புல்லாங்குழல்) சிறப்பாகத் துணைநின்றனர். பள்ளி மாணவியாக இருந்தாலும் பத்துவருடப் பயிற்சியில் முதிர்ச்சிபெற்று முத்திரை பதித்த ஷ்ரேயாவுக்கு வாழ்த்துகள்.

ஆர். திவாகர்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com