நாட்யா: 'The Incomplete Gesture'
நாட்யா நடனக்குழு இயக்குனர் ஹேமா ராஜகோபாலன் மற்றும் இந்தோனேஷியாவின் நான் ஜோம்பாங் (Nan Jombang) நடனக்குழுவினரும் கலைக்கு மொழியில்லை என்பதை நிரூபித்துள்ளனர். 'நான் ஜோம்பாங்' இயக்குனர் இரி மெஃப்ரி, நடனக்கலைஞர் ரியோ வாஹ்யுதி இருவருக்கும் இந்தோனேஷிய மொழியான 'பாஸா' மட்டுமே தெரியும். அதன் முக்கிய நடனக் கலைஞரான ஆங்கா மெஃப்ரிக்கு 'சிறிதளவு ஆங்கிலமும் தெரியும். ஹேமாவுக்கோ தமிழும், ஆங்கிலமும் தெரியும். ஆனால் இவர்கள் நால்வருக்கும் தங்களுக்குள் நடனமொழியில் பேசிக்கொள்ள எந்த தடையும் இருக்கவில்லை.

முகநூலில் தொடங்கிய நட்பு, இரு குழுக்களும் இணைந்து 'The Incomplete Gesture' என்ற முழுநீள நாட்டிய நிகழ்ச்சியைத் தயாரிப்பதற்கு விதையாக அமைந்தது. இப்படைப்பு தகவல் பரிமாற்றத்திலுள்ள இடைவெளிகளால் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசுகிறது. அன்புடன் இதை அணுகினால் இந்த இடைவெளியைச் சரிசெய்யலாம் என்பதைப்பற்றிக் கூறுகிறது. இந்திய புராணக்கதைகளைக் காட்டி, நிகழ்காலத்தில் ஏற்படும் தவறான புரிதல்களைப்பற்றி பேசுகிறது. அர்ப்பணிப்பு இருந்தால் கலாசாரம், மொழி, நடன அசைவுகள் என்பவற்றைத் தாண்டி ஒரு அழகிய நாட்டிய நிகழ்ச்சியை உருவாக்க முடியும் என்பதையும் நிரூபிக்கிறது.

2015 ஃபிப்ரவரியில், ஆங்கா, இரி இருவரையும் இந்திய கலாசாரம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அழைத்தார் ஹேமா. பக்திமிக்க இந்துக்களான ஹேமாவின் பெற்றோர், முஸ்லிம்களான ஆங்கா, ஈரி ஆகியோருக்குத் தமது இல்லத்தில் விருந்தோம்பினர். மத வேறுபாடுகள் தாண்டிய இந்த ஆரம்பநிலைக் கூட்டுமுயற்சியும், பயிலரங்குகளும் இந்தியப் பத்திரிகைகளில் வெகுவாகப் பேசப்பட்டன.

ஆகஸ்ட் 2015ல் 'நான் ஜோம்பாங்' குழு இரண்டுவாரத் தீவிர பயிலரங்குக்காக சிகாகோ சென்றது. இந்தக் குழு நாட்யாவின் கலைஞர்களுக்கு 'மினாங்காபு' பயிலரங்குகளும் நடத்தியது. 'நான் ஜோம்பாங்', பரதநாட்டியத்தின் அபிநயங்கள், தாளக் கட்டுக்கள் ஆகியவற்றைப் பயின்றனர். இக்கூட்டுமுயற்சியில் 75 சதவிகித நடனங்கள் வடிவமைக்கப்பட்டன.

செப்டம்பர் 24, 2016 அன்று இவர்களின் முன்னோட்ட நிகழ்ச்சி Indiana University-Purdue University, Fort Wayne, IN வளாகத்தில் நடைபெறும். முதல் பொதுநிகழ்ச்சி அக்டோபர் 1, 2016 அன்று North Shore Center for the performing Arts, Skokie, IL அரங்கில் நடைபெறும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com