மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசைநிகழ்ச்சி
மேஸ்ட்ரோ இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியினை கலாலயா USA ஒருங்கிணைக்கிறது.

இளையராஜாவின் 1000 திரைப்படங்களைக் கொண்டாடும் நிகழ்ச்சியாக அமைவது இதன் மற்றொரு சிறப்பு. நூறாண்டுகால இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த முதல் மற்றும் ஒரே இந்திய இசையமைப்பாளர் இளையராஜாதான். இவர் நேரடியாக நடத்தவுள்ள சிம்ஃபொனி இசைக்குழுவில் இந்தியாவிலிருந்து சிறந்த 50 இசைக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

மூன்று மணிநேர பிரம்மாண்ட இசைக் கொண்டாட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்குப் பாடல்களை பிரபல பாடகர்கள் நேரடியாக பாடக் கேட்டு ரசிக்கலாம். 2013ல் நடைபெற்ற இளையராஜாவின் இசைநிகழ்ச்சியில் இந்திய-அமெரிக்கச் சமூகத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒவ்வொரு காட்சிக்கும் 20,000க்கும் மேற்பட்டோர் திரண்டனர். வாழ்நாளில் அரிதாகக் கிடைக்கும் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

மேஸ்ட்ரோ என்றும் இசைஞானி என்றும் அழைக்கப்படும் இளையராஜா தமது 40 ஆண்டு இசைவாழ்வில் 1000 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளதோடு, 1993ல் லண்டனின் ராயல் ஃபிலார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவைக்கொண்டு மேற்கத்திய சிம்ஃபொனியை வடிவமைத்தார். 2013ல் CNN-IBN நடத்திய கருத்துக்கணிப்பில் சிறந்த இந்திய இசையமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் ஹோசேவில் செப்டம்பர் 11ம் நாள் இளையராஜா தன்னுடைய தீவிர ரசிகர்களுக்கு இசைப் பெருவிருந்து ஒன்றை அளிக்க வருகிறார். டாலஸ், அட்லாண்டா, நியூ ஜெர்சி, வர்ஜீனியா ஆகிய இடங்களிலும் இவரது மெல்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com