AIM for Seva: மீராவின் ஆன்மீகப் பயணம்
2016 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவின் பல இடங்களிலும் திருமதி. சித்ரா விஸ்வேஸ்வரன் அளிக்கும் 'Meera - the Soul Divine' என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். சமூகசேவைப் பணிகளைச் செய்துவரும் AIM for Seva நிறுவனத்துக்கு நிதி திரட்டும் பொருட்டாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மெய்மறந்து, ஆனந்தத்தின் எல்லையை அடையும் வண்ணம் மீராவின் தெய்வீகக் கதையைக் கூறும் இந்த நிகழ்ச்சியைச் சித்ரா விஸ்வேஸ்வரன் வடிவமைத்து இயக்கியுள்ளார். பாம்பே ஜெயஸ்ரீயின் இன்குரலில் பாடல்கள் ஒலிக்கும். இந்தச் சூழலில் தனக்குள் இருக்கும் தெய்வீகத்தைத் தேடி அறியும் பயணம் துவங்கும். உங்கள் உள்ளத்தில் ஏற்படும் அந்தச் சிறு தீப்பொறி, ஆயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கிவிடும் என்கிறது AIM For Seva.

இந்திய கிராமங்களின் லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளுக்குப் பல கிலோமீட்டர் நடந்து செல்லும் அவலநிலையை மாற்ற, படிப்பை அரைகுறையில் நிறுத்தும் நிலையை மாற்ற, AIM for Seva குழந்தைகளின் ஆரம்பகாலமான 7-10 வருடங்களுக்கு, பள்ளியருகில் தங்குமிடம், ஆரோக்கிய உணவு, கல்விப்பொருள்கள், மருத்துவவசதி, சுகாதாரம் மற்றும் கல்விசார்ந்த பயிற்சிகளை அளிக்கிறது. இந்த இலவச மாணவர் விடுதிகள் (Free Student Homes – FSH), குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கவும், தன்னம்பிக்கையுடன் செயல்படவும் அடிப்படையாக இருக்கின்றன.

பூஜ்யசுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்ட இவ்விடுதிகள், 15 வருடமாக எண்ணிக்கையில் வளர்ந்து, 2020ம் ஆண்டுக்குள் 200 விடுதிகள் என்னும் இலக்கை நோக்கி வேகமாக நடைபோடுகிறது. இந்த நற்பணிக்குக் கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு அமெரிக்காவில் 501 © (3) பிரிவின்கீழ் வருமான வரிவிலக்கு உண்டு.

தானம் கொடுப்பவர்களுக்கும் கொள்பவர்களுக்கும் ஆசிர்வாதமாய் அமைகிறது என்று சுவாமி தயானந்த சரஸ்வதி கூறுவார். அவர் நிறுவிய அமைப்பிற்கு நன்கொடை கொடுத்து, மீராவின் ஆன்மீகப் பயணத்தில் மனதைப் பறிகொடுங்கள்.

நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களும் தேதிகளும் அறிய:
www.meerathesouldivine.com/schedule-and-venues.html
முகநூல்: AIMforSevaBayArea, Meera - The Soul Divine

வலைமனைகள்:
www.aimforsevabayarea.org
www.aimforseva.org

ராஜி ஸ்ரீதர்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com