ஆகஸ்டு 2016: வாசகர் கடிதம்
ஜூலை இதழில் டாக்டர். சிவராமனின் நேர்காணல் மிகச்சிறப்பு. யோகாவின் மூலம் நினைவாற்றல் பெருகும் என்பது உண்மை. நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக தினமும் குறைந்தது 45 நிமிடங்களாவது யோகா செய்கிறோம். மாதா அமிர்தானந்தமயி அவர்களின் போதனைகள் நன்றாக இருந்தன. பிற அம்சங்களையும் நாங்கள் ரசித்தோம்.

R. கண்ணன், கீதா கண்ணன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

*****


தென்றலில் வெளியான ‘தங்கச்சிறை?’ சிறுகதை நல்ல தமிழில் உண்மையான மனவுணர்வுகளைச் சொல்வதாக அமைந்திருந்தது. எந்த நாணயத்துக்கும் இரண்டு பக்கம் உண்டு என்பதைக் கதை வெளிப்படுத்தவில்லை என்று கருதுகிறேன். இங்கே வரும் பெற்றோர்கள் தம் மக்களுக்காக எத்தனை தியாகங்கள் செய்கின்றனர் என்பதையும் அவர் எழுதவேண்டும்.

V. கிருஷ்ணமூர்த்தி,
சார்லட், வடகரோலினா

*****


ஜூலை இதழ் எழுத்தாளர் பக்கம் முத்து மீனாட்சி நன்றாக இருந்தது. மருத்துவர்,சமூக ஆர்வலர் சிவராமன் அவர்களின் சேவையும் ஆராய்ச்சிகளும் பாராட்டத்தக்கவை. ஒவ்வோர் இதழிலும் நேர்காணல், சாதனையாளர் மற்றும் சிறுகதைகள் அருமை.

ராகவன்,
பெங்களூரு, இந்தியா

*****


ஜூலைமாதத் தென்றலை முதல்தேதியே இணையத்தில் பார்க்கமுடிந்ததில் மகிழ்ச்சி. சென்றமாதம் இருவாரம் இந்தியா சென்றிருந்தேன். பல நண்பர்களைச் சந்தித்தேன். அவர்களின் மகன், மகள் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் சேர்த்து வைத்திருந்த தென்றல் பத்திரிகைகளை எடுத்து வந்திருப்பதாகவும், திரும்பவும் படிக்கவும், இந்தியாவிலுள்ள நண்பர்களுக்குப் படிக்கக் கொடுத்து, மறுபடி வாங்கி பத்திரப்படுத்துவதாகவும் கூறினாரகள். சிறப்பாக வெளிவந்து கொண்டிருப்பதாகப் புகழ்ந்தார்கள். கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

அமெரிக்காவில் வளர்ந்து வரும் நம் குழந்தைகளின் சாதனைகளை தென்றல் மூலம்தான் தெரிந்துகொள்ள முடிகிறது என்று பெருமைப்பட்டார்கள்.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com