ஞானக்கூத்தன்
தமிழின் தனித்துவமிக்க கவிஞர்களுள் ஒருவரும், தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் புதுக்கவிஞருமான ஞானக்கூத்தன் (78) காலமானார். 1938ல் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரில் பிறந்த ஞானக்கூத்தனின் இயற்பெயர் ரங்கநாதன். சங்க இலக்கியத்தின்மீது ஏற்பட்ட ஆர்வம் இவரைக் கவிதையில் ஈடுபடுத்தியது. 1968 முதல் கவிதை எழுதத் துவங்கினார். மரபின் தாக்கமும் நவீனத்தின் புதுமையும் கொண்டிருந்தன இவரது கவிதைகள். பாடுபொருள், உத்தி, அங்கதம், எளிமை, நயம் போன்ற தன்மைகளைக் கொண்டிருந்த இவரது கவிதைகள் வாசகனை ஒரு புதிய தளத்துக்கு அழைத்துச் சென்றன. சமஸ்கிருத இலக்கியத்திலும் புலமை மிக்கவராக இருந்தார். இளங்குயில், இளங்கம்பன் போன்ற புனைபெயர்களிலும் எழுதியிருக்கிறார். இவரது 'மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்', 'ஸ்ரீலஸ்ரீ', 'தமிழ்', 'வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு', 'யாரோ ஒருத்தர் தலையிலே', 'மீண்டும் அவர்கள்', 'தெரு', 'சொல்' உள்ளிட்ட பல கவிதைகள் வெகுவாக சிலாகிக்கப்பட்டவையாகும்.

"எனக்கும் தமிழ்தான் மூச்சு;
ஆனால் பிறர்மேல் விடமாட்டேன்"

உள்ளிட்ட பல கவிதை வரிகளும், கவிதைகளும் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியவை. 'ழ', 'கசடதபற' போன்ற சிற்றிதழ்களின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து பல கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார். 'சூரியனுக்குப் பின்பக்கம்', 'கடற்கரையில் சில மரங்கள்', 'அன்று வேறு கிழமை', 'மீண்டும் அவர்கள்', 'ஞானக்கூத்தன் கவிதைகள்' போன்ற இவரது தொகுப்புகள் முக்கியமானவை. 'பென்சில் படங்கள்', 'என் உளம் நிற்றி நீ' என்ற தலைப்புகளிலும் இவரது கவிதைகள் நூலாகியுள்ளன. 'சாரல் விருது', 'விஷ்ணுபுரம் அறக்கட்டளை விருது' போன்ற விருதுகளைப் பெற்றவர். தமிழ்ப் புதுக்கவிதை முன்னோடிக்குத் தென்றலின் அஞ்சலி!

'அன்று வேறு கிழமை' தொகுப்பிலிருந்து ஒரு கவிதை

உயர்திரு பாரதியார்
சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
ஆடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவெரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன், உம்மைச் சொன்னார்

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவெரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம் துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்
துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்
கவிஞரில்லாத் தமிழகத்தில் எவெரெல்லாமோ
கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்
கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்
பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்
நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு.

© TamilOnline.com